ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னியல் அமைச்சகம் அதிர்ச்சிகரமாக பதிலளித்துள்ளது.

கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, ‘ஆரோக்கியசேது’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, அருகில் வரும் நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அது நமக்கு எச்சரிக்கை தரும் என்று கூறப்படுகிறது.

ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப் பட்டது என்பது குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசியதகவல் மையத்தை கேட்டுக்கொண்டது.

இதற்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டது என்பது தெரியாது என தெரிவித்தது.இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடிஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய தகவல் ஆணையம்.

மேலும் ஆரோக்கிய சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இவ்விவகாரம் குறித்து, அடுத்த மாதம் சிபிஓக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

                                                     *****

வினா - விடை

• 24 மணி நேரத்துக்கு முன் கொரானா சோதனை மருத்துவச் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே அய்யப்பனை தரிசிக்க அனுமதி. - சபரிமலை நிர்வாகம்

சான்றிதழை கோயில் அர்ச்சர்கள் தந்தால் போதும் தானே?

• தஞ்சையில் தமிழ்நாடு தினம் கொண்டாடிய 41 பேர் கைது. - செய்தி

தேவை தானா? ‘இந்துஸ்தான் தினம்’ கொண்டாடிப் பாருங்கள்! காவல் துறையும் கைகோர்த்திருக்கும். மோடி ‘மான்கிபாத்’ பேச்சிலும் புகழ்ந்து தள்ளியிருப்பார்.

• வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி எழுதியதுதான் ‘மனுஸ்மிருதி’. இந்துக்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  - பா.ஜ.க செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன்

பிரிட்டிஷ்காரர்களுக்கு மட்டும் ஜோன்ஸ் எழுதி, ‘சுதந்திர’த்துக்குப் பிறகு கையோடு விமானத்தில் எடுத்துக் கொண்டு போய் இலண்டன் மியுசியத்தில் வைத்து விட்டான்.

பிறகு இஸ்லாமியர்கள் அதை இலண்டன் மியுசியத்தி லிருந்து திருடினார்கள். ‘பிரிட்டிஷ்’ என்று வரும் வரிகளை மட்டும் ‘பிராமினிஷ்’ என்று மாற்றி இந்தியாவில் திணித்து இஸ்லாமிய இராஜ்யத்தை உருவாக்கி விட்டார்கள். இதுதான் வரலாறு! இவை எல்லாத்துக்கும் நாராயணனிடம் ஆதாரங்கள் இருக்குது! நாமும் நம்புவோம்!

• தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி வைப்போம். - கமலஹாசன்

அதில் மக்களுக்கு எவ்வளவு தொகுதி? மக்கள் இல்லாத மய்யத்துக்கு எத்தனை தொகுதி என்பதையெல்லாம் தெளிவாக புரியும்படி கூறுங்க சார்?

• என் பெயரில் வந்த அறிக்கையை எழுதியது நான் அல்ல; ஆனால் அதில் இடம் பெற்றுள்ள என் உடல்நிலை பற்றிய கருத்துகள் முற்றிலும் உண்மை. - ரஜினிகாந்த்

இதுகூட நல்லாத்தான் இருக்கு. அடுத்து, உங்க கட்சிப் பெயர், கொடி பற்றி எவராவது ஒரு அறிக்கை விடுவது நல்லது. அறிக்கை என்னுடையது அல்ல; ஆனால் கட்சிக்குப் பெயரும் கொடியும் வேண்டும் என்ற கருத்து மட்டும் உண்மை என்று ஒரே போடு போட்டுடலாம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It