“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தாழ்துழந்து அட்ட தீம்புளிப்பாகர்

‘இனிது’ எனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”

(குறுந்தொகை : பாடல் 167)

எவ்வளவு அழுக்கான ஆடையணிந்து புகை படிந்த கண்களோடும் தலைவி சமைத்துப் போட்டாலும் கணவன் அவள் சமையல் இனிது என்று பாராட்டுவதைக் கேட்டுத் தலைவி பிறர் அறியா வண்ணம் நுண்ணிதாக மகிழ்ந்தாள் என்று இப்பாடல் ஒரு காட்சியை விளக்குகிறது. ரொம்பப் புகழ் பெற்ற சங்கப் பாடல் இது. உண்மையில் இது மிகவும் ரசிக்கத்தக்க பாடல்தான். என்ன ஒரு ரசமான குடும்பக் காட்சி. ஆனால், மனைவி சமைத்துப்போட கணவன் பாராட்ட அதைக் கண்டு பெண் நாணிச் சிவக்க என்று குறுந் தொகைக்  காலத்திலேயே இந்த ஆண்-பெண் வேலைப் பேதமும், உன் கை ருசியே தனிதான் என்று ஏமாற்றி அடுக்களையை அவளது சாம்ராஜ்ஜியமாகத் தலையில் கட்டியதும் வந்துவிட்டதே என்று நினைக்கையில் பாடல் வருத்தமளிக்கிறது. தொல்காப்பியத்திலேயே,

 “ஏனது சுவைப்பினும், நீ கைதொட்டது

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு”

 என்று பெண்கள் தலையில் மொளகா அரைக்கப்பட்டு விட்டதுதான். ஆனால், இங்கு நாம் அதுபற்றி விளக்கிப் பேசப் போவதில்லை. அது பற்றிப் பின்னர் பார்க்கலாம். முதல் வரியில் வரும் காந்தள் மெல்விரலை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். கெட்டித் தயிரைப் பிசைந்ததால் சிவந்து போன ஒரு பெண்ணின் கை விரல்களைப் பற்றி இந்த வரி பேசுகிறது. அவ்வளவு மென்மையான விரல்கள் என்று! இப்படியே ஆரம்பித்து “பெண்மையைவிட மென்மையான தலையணைகள்” என்று இன்று கம்பெனிகள் விளம்பரம் செய்கிறவரை வந்து நிற்கிறோம்.

 மென்மை என்பது பெண்மையின் ஓர் அம்சம் என்கிற கருத்து காலம் காலமாக நம் மனங்களில் கட்டமைக்கப் பட்டுள்ளது. வெள்ளைக்காரனும் வெண்டைக்காய்க்கு லேடீஸ்பிங்கர் (பெண்  விரல் என்று பேர்) வைத்து அங்கேயும் இதே கொடியை நாட்டி வைத்து நாங்களும் உங்களுக்குக் குறைஞ்சவங்க இல்லே என்ற சொல்லி விட்டான். மென்மையானவள் என்பதால் முரட்டு வேலைக்கு லாயக்கில்லாதவள் என்று சமூக உற்பத்தியின் பல தொழில்களிலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்படுகிறாள்.

 சோசலிச சோவியத் யூனியனுக்குப் போய் வந்து தன் அனுபவங்களை எழுதிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார், “அங்குள்ள பெண்கள் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். ஆகவே அவர்களுடைய கைகளெல்லாம் முரடாக இருக்கின்றன. பெண்களுக்குரிய மென்மையை அவர்கள் இழந்துவிட்டார்கள்” என்று வருந்தி எழுதினார். எல்லா ஆண்களுக்குமே அப்படி ஒரு வருத்தம் இருக்கிறதுதான். கையைப் பிடித்தால் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு.

 ஆனால், நாட்டின் பெருவாரியான உழைக்கிற பெண்களின் கைகள் முரடாகவும் உறுதிப்பட்டும்தான் இருக்கிறது. சங்க இலக்கியங்களும் உப்பு மூட்டைகள் சுமந்த உமணப் பெண்கள் பற்றிப் பேசுகிறது. தூத்துக்குடிக்குப் போனால் இன்றும் அதே உமணப் பெண்கள் உப்பளங்களில் பெட்டிகளை வைத்துத் தூக்கிச் சுமப்பதைக் காண முடியும். சாலைப் பணிகளில், கரும்பு வெட்டும் தோட்டங்களில் உயர்ந்து எழுகின்ற கட்டிடங்களுக்கு ஊடே என்று பெண்கள் அரிவாளும் மண்வெட்டியும் பிடித்துக் கடினமான வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். மென்மை, மெல்லியலாள் என்கிற புருடாக்கள் எல்லாம் மத்திய தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களின் தலையில்தான் பெரிதும் சுமத்தப்பட்டுள்ளது.

 சிலப்பதிகாரத்தில் கண்ணகியை “மண் மகள் அறியா வண்ணச் சீறடியாள்” என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார். கண்ணகியும் மிக வசதியான வீட்டுப் பிள்ளைதான். கண்ணகியின் பாதங்கள் மண்ணிலேயே பட்டதில்லை என்று பெருமையாகப் பேசினாலும், இன்னொரு பக்கம் அவளை வீட்டை விட்டு வெளியே விடாமல் அப்படி அடைத்து வைத்திருந்தார்கள் என்றும் பார்க்க வேண்டி யுள்ளது. உள்ளேயே பூட்டி வைச்சிருந்தா காயும்கூட அவிந்து மென்மையான கனியாகி விடுவதில்லையா? அதுபோலத் தான் பெண்ணும், மென்மையாக்கப்பட்டிருக்கிறார்கள். இது இயற்கையான மென்மை இல்லை. பல்லாயிரம் ஆண்டு களாகப் பூட்டி வச்சுப் பழுக்க வைத்த மென்மை.

 மென்மையின் இன்னொரு முகமாக அவள் பலவீனமானவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். வீக்கர் செக்ஸ் என்று ஆங்கிலமும் சொல்கிறது. ஆனால், அது அப்பட்டமான பொய். உடல்ரீதியாகவே பெண்தான் பலசாலி. ஆணின் உடலில் பருவத்தில் மீசை முளைப்பது போன்ற சிற்சில மாற்றங்களைத் தவிர வேறு எந்தச் சிக்கலும் சாகும் வரை ஏற்படுவதில்லை. ஆனால், பெண் மாதவிலக்கில்  துவங்கி கருத்தரித்தல், குழந்தை பெறுதல், மெனோபாஸ் என உயிரைக் காவு கேட்கும் உதிரப் போக்கு நிறைந்த பல உயிரியல் ரீதியான மாற்றங்களைத் தன் உடம்பில் தாங்கியபடியே தன் வாழ்நாள் முழுவதையும் கடந்து கொண்டிருக்கிறாள். ஆண் சந்திக்கும் மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் இந்த உடல் பிரச்சினைகளோடு சேர்த்துக் கூடுதலாகச் சந்திக்கிறாள்.

 உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி, பெண்தான் ஆணைவிடப் பலசாலி. ஆனால், நமது பொதுப்புத்தியில் நேர்மாறான புரிதல்தான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

 பெண்மையின் மென்மை என்றால் என்ன என்பதற்கு நாம் கொண்டுள்ள புரிதல் ஆணின் தன்மைக்கு எதிரானது என்பதுதான். கடுமை, கடினம், முரடு, வலிமை, உறுதி போன்றவை எல்லாம் ஆண் குணம். இவற்றுக்கு எதிராக மென்மை என்பதை நாம் பெண்ணுக்குரியதாக முன் வைக்கிறோம். ஆணையும் பெண்ணையும் பரஸ்பர எதிர்வுகளாக நிறுத்திப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்தே ஆணிடம் இல்லாது பெண்ணிடம், பெண்ணிடம் இல்லாதது ஆணிடம் என்று இதெல்லாம் இயற்கையின் படைப்பு போன்ற ஒரு தோற்றத்தை இயல்பானது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்பட்டதுதான்.

பெண் ஆணுக்கு இணையாக முடியாது. மாறாக அவனிடம் இல்லாத சில பள்ளங்களை இட்டு நிரப்புபவளாக இருப்பதே இயற்கை, அவளுக்கு இட்ட கட்டளை என்கிற கண்ணோட்டத்திலிருந்தே இக்கருத்துகள் பிறக்கின்றன. சமூகம் இப்படியாக ஏற்றத் தாழ்வு மிக்கதாக, வர்க்க சமூகமாக உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதாக இருப்பது இயற்கையிலேயே நியாயம் என்பதை வலியுறுத்துகிற முக்கிய ஆதாரமாக இந்த ஆண் - பெண் பேதம் பயன்படுகிறது. காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

 இந்தக் குணங்கள் என்பவை சும்மா வெறும் விவரணைகளாகவோ அலங்காரத்துக்கு ஏற்பட்டவையோ அல்ல. சமூகத்தில் ஆண் செய்பவற்றையெல்லாம் பெண் செய்யக் கூடாது. பெண் செய்வதற்கென்று சில இருக்கின்றன. அவை சமூகத்தின் சட்டங்கள் மட்டுமல்ல, இயற்கையின் விதியே அப்படித்தான் என்று அழுத்தமாகச் சொல்வ தற்காகச் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையாகும்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்கிற பெண்மணி இந்தக் கட்டுக்களையெல்லாம் தாண்டினார். ஒரு சமூக சேவகர் என்கிற முறையில் அங்கு அமுலில் இருக்கும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல பிற்போக்கான பழக்க வழக்கங்களுக்கு எதிராக இயக்கம் நடத்தினார். உயர் சாதி ஆண்கள் சிலர் கூட்டாக அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரது சமத்துவ நடவடிக்கைகளை முடக்கு வதற்காகவே அவர் மீது அவ்வன்முறை தொடுக்கப்பட்டது. பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா? அவள் தன் எல்லையை மீறலாமா? மீறினால் இப்படித்தானே நடக்கும்? என்கிற கேள்விகளை மீண்டும் பொதுப் புத்தியில் எறிகிற சம்பவமாக அந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது.

 ஆகவே, பெண்மை என்கிற பெயரில் அது பெண்மை, நளினம், தாய்மை, கருணை, தியாகம் என எதுவாகவும் இருக்கலாம். அக் குணங்கள் வெறும் அலங்காரத்துக்கும் ஆண் பெண் வேறுபாட்டைச் சும்மா காட்டுவதற்காகவும் ஏற்பட்டவை அல்ல. அவற்றுக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது. செயல்பாட்டுத் தன்மையோடு இணைப்பு இருக்கிறது.

 ஒரு பெண் மீது சுமத்தப்படும் குணங்கள் (கவனிக்க: பெண்ணின் குணங்கள் அல்ல. பெண் மீது சுமத்தப்படும் குணங்கள்) பற்றி நாம் பேசுகையில் நாம் இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். ஒன்று உயிரியல் ரீதியானது எவை என்கிற கேள்வி. இன்னொன்று பண்பாட்டு ரீதியாக அவள் மீது சுமத்தப்பட்டுள்ள குணங்கள் எவை என்கிற கேள்வி.

 பிள்ளை பெற்றுக் கொள்வதும், பாலூட்டுவதும் உயிரியல் சார்ந்தவை. அது இயற்கையானது. இயல்பானது. அதைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாக ஆணுக்குக் கிட்டாத வாய்ப்பு.

 அதைத் தவிர தாய்மை, பெண்மை, மென்மை போன்ற ‘மை’கள் எல்லாம் யாரு வச்ச மை? என்று கேட்க வேண்டிய மைகள்தான். இவையெல்லாம் பண்பாட்டு ரீதியாக வரலாற்று ரீதியாக சமூக ரீதியாகப் பெண் மேல் சுமத்தப் பட்ட மைகள்தான். இவை அத்தனையும் நம் கேள்விக்கு உள்ளாகியே தீர வேண்டும். இவையாவும் உயிரியல் ரீதியானவைபோல, இயற்கையின் படைப்புபோல ஒரு புரிதல் நம் (ஆண்-பெண்) எல்லோருடைய மண்டைகளிலும் ஏற்றப்பட்டுள்ளன. அது பண்பாட்டின் வேலை.

 உண்மையில் பண்பாடுதான் ஒரு பெண்ணைக் கட்டமைக்கிறது. பெண் பிறப்பதில்லை. பெண் கட்டமைக்கப் படுகிறாள் என்று சொல்வது இந்தப் பண்பாட்டுக் கட்டமைப்பைத்தான். இந்தப் பண்பாடு என்பது தான் என்ன? இது ஏன் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது? அதைக் கேள்விக்குள்ளாக்கி மாற்ற முடியாதா? அதை யார் செய்வது? ஆண்களா? பெண்களா? இருவரும் சேர்ந்ததா?

(‘பெண்மை என்றொரு கற்பிதம்’ நூலிலிருந்து; மகளிர் நாள் சிந்தனையாக....)

Pin It