தோழர் வே. ஆனைமுத்து அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு, 1974இல் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்ற பெயரில் மூன்று பெரும் தொகுதிகளும்; 21.03.2010இல் 9300 பக்கங்கள் கொண்ட விரிவாகத் தொகுக்கப்பட்ட சற்றுக் கையடக்கமான 20 தொகுதிகளும் தோழர் ஆனைமுத்து அவர்களையே தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்திருப்பது பலரும் அறிந்த செய்திகளே யாகும்.

முதல் தொகுப்பு வெளிவந்த போதே அம்முயற்சி பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். தோழர் ஆனைமுத்து, திருச்சிக்கு வந்து அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.

பள்ளியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பில் இருந்ததால், நினைத்த நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு என்னால் செல்ல முடியாது என நான் எண்ணியதால், என் தம்பியான தோழர் காசிநாதனிடம் தோழர் ஆனைமுத்துவின் விருப்பம் பற்றிக் கூறினேன்.

அவர் பெரியார் பயிற்சிப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே தோழர் ஆனைமுத்துவை மிக நன்றாக அறிந்தவர். மிகவும் விருப்பத்தோடு அப்பணியை ஒத்துக்கொண்டார். அவர் அப்போது உள்ளூரிலேயே தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். நெருக்கடியான பணிச்சுமை இல்லாத பதவி அது.

முதல் பதிப்புத் தொகுதிகள் வெளி வந்தபோதே, நிறைய இடர்ப்பாடுகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் தோழர் ஆனைமுத்து விளக்கியுள்ளார். நான், இயலும் போதெல்லாம் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் திருச்சிக்குச் சென்று அவர் நடத்திய தனிப் பயிற்சிக் கல்லூரியிலோ, அவர் வீட்டிலோ, நோபிள் அச்சகத்திலோ தங்கிக் கொண்டு அவர் விரும்பிய பணிகளை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு, திட்டக்குடிக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்பணி பெரும்பாலும் கூறியது கூறல் என்கின்ற பிழை வராமல் பார்க்கும் மெய்ப்புத்திருத்தும் பணி போன்றதுதான். 

வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவாக ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ வெளியிடும் விழா பிஷப் ஹீபர் கல்லூரித் திடலிலும், தேவர் மன்றத்திலும் - அவ்விழாவைக் கண்டவர் நினைவுகளில் இருந்து என்றும் அகலாவண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வளவு சிறப்பு மிக்க நூல் உருவாக்கும் முயற்சியில் நாம் இன்னும் சிறிது அதிகப்பங்கு ஆற்றியிருக்கலாமே எனும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது. அது பற்றி அப்போது தோழர் ப. பூவராகனிடம் நான் கூறினேன். “இந்த வேலை அதிக நேரம் இழுக்கும் வேலை. இதற்கு மூத்த ஆசிரியர் தோழர். கணபதி போன்ற வர்கள் தான் சரிப்பட்டு வருவார்கள். நமக்குச் சரிப்பட்டு வராது” என்றார்.

இதன் பின்னர் தோழர் ஆனைமுத்து தி.க.வில் இருந்து நீக்கப்பட்டதும், அவருடைய வழிகாட்டலில் பெரியார் சமவுரிமைக் கழகம் என்பது தொடங்கப்பட்டது. அதன் தொடக்கத்துக்கு முன்பே நான் என்னை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

பெரியார் சமவுரிமைக் கழக ஈடுபாடு அதிகமானதும் வெளிமாநிலங்களுக்குத் தோழர்கள் ஆனைமுத்து, சேலம் சித்தையன், சேலம் இராசு, மா. முத்துசாமி முதலியோர் களுடன் அடிக்கடி ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொண்டு சென்று வருவதும் எனக்கு வழக்கமாகிவிட்டது.

திருச்சியில் “சிந்தனையாளன்” இதழ் தொடங்கியது முதல் அந்த இதழுக்கு எழுதுவது - இதழைப் பரப்புதல் போன்றவற்றையும் மேற்கொண்டேன்.

எனவே, மா.பெ.பொ.க. தொடக்கத்துக்கு முன்பு இருந்தே பல முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் முன்பு தோழர்கள் மா.முத்துசாமியுடனும், ஆ.செ. தங்கவேலு, இரும்புலிக்குறிச்சி ந. உத்திராபதி, ஆசிரியர் ந. கணபதி ஆகியோருடனும் என்னுடனும் கலந்துபேசும் வழக்கத்தை மேற்கொண்டிருந் தார் தோழர் வே. ஆனைமுத்து.

இந்த நிலையில் கையிலிருந்த பெரியார் சிந்தனைகள் நூல்கள் எல்லாம் தீர்ந்துவிட்ட காரணத்தால் அந்நூலை மறுமதிப்புச் செய்ய வேண்டும் எனும் வேண்டுகோள் பலரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. இது பற்றிப்பல தோழர்களிடமும் அவ்வப்போது கலந்து ஆலோசித்தார்.

“அது மிக அதிகம் செலவு பிடிக்கும் திட்டம். எப்படிச் சமாளிப்பது. இப்போது பெரியாரும் இல்லையே” என்ற அய்யத்தைத் தோழர் கணபதியும், நானும் கூறுவோம். தோழர் முத்துச்சாமி மட்டும் தோழர் க. திருப்பாண்டியனை மனதில் எண்ணிக்கொண்டு “முயற்சி செய்வோம் - சமாளித்துவிடலாம்” என்று கூறுவார். ஆனாலும் மறுபதிப்புத் திட்டம் பற்றித் தீவிரமாகப் பேசப்படவே இல்லை.

இடையில், 1992இல் தோழர் ஆனைமுத்துவின் உடல்நிலை அவர் “சிந்தனையாளன்” அலுவலகத்தில் இருந்தபோதே திடீரென்று மோசமானது. அவர் குடலிறக்க நோயினால் மிகவும் தொல்லைக்கு ஆளானார்.

உடனே இரு தானிகளில் தோழர்கள் பெரியசாமி, கலசம் முதலியோர் அவரை அழைத்துக் கொண்டு, மருத்துவ மனைக்குச் சென்றனர். “யாரிடமும் கூற வேண்டாம். யாரும் என்னைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம்” என்று கண்டிப்புடன் தோழர் ஆனைமுத்து கூறிவிட்டுச் சென்றார்.

அவர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விதை வீக்கம் (ஹைடிரோசில்), குடலிறக்கம் ஆகியவற்றுக் கான அறுவை செய்யப்பட்டது. யாரும் சென்று பார்க்கவில்லை. ஒருவாரம் கழித்து ‘தில்லைவனத்தை வரச் சொல்லுங்கள்’ என்று செய்தி ஆள்மூலம் அனுப்பினார். அந்த மருத்துவமனை அவர் இருக்கும் இடம் முதலிய விவரங்களை எல்லாம் பெற்றுக்கொண்டு, மறுநாள் காலை 10 மணிக்கே நான் அவரைச் சந்தித்தேன். உடன் தோழர்கள் யாரும் இல்லை.

“வணக்கங்க” நல்லாயிருக்கீங்களா” என்றேன்.

“வணக்கம். காலையிலேயே மருத்துவர் வந்து சென்று விட்டார். மிக நன்றாகவே உடல்நிலை உள்ளது. இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் வீட்டு அனுப்பி விடுவார்கள்” என்றார்.

என்னைச் சிந்தனையாளன் இதழ் பற்றிப் போசவோ, கட்சியின் வளர்ச்சி பற்றிப் பேசவோ வரச் சொல்லி இருப்பார் என எண்ணிக் கொண்டு “வரச் சொன்னீங்களாமே” என்று கேட்டேன்.

“நாம இருவரும் நீண்ட நேரம் பேசவேண்டும். இங்கு வேண்டாம். வெளியில் போனால் மர நிழலில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசலாம். அங்கு யாரும் வரமாட்டார்கள்” என்றார்.

ஏதோ முக்கியமான செய்தி பேசப் போகின்றார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

சற்றே ஒதுக்குப்புறம். அமைதியான சூழ்நிலை.

ஒரு பலகையின் மீது அவர் அமர்ந்து கொண்டு ‘பக்கத்தில் உட்கார் தம்பி’ என்று கூறினார்.

“ஏதாவது இரகசியமான செய்திங்களா?” என்றேன்.

“இரகசியம் ஒன்றும் இல்லை. ஆனால் முக்கியமான செய்தி” என்றார்.

“என்ன?” என்றேன்.

“விரைவில் பெரியார் சிந்தனைகள் மறுபதிப்பு வர வேண்டும்” என்றார்.

“நல்லது. இதே மூன்று தொகுதிகளை மட்டுமா? அல்லது இன்னும் புதிய பகுதிகளைச் சேர்த்தா? இதே மூன்று தொகுதி களை மட்டும் என்றால் முன்பு வாங்கியவர்களில் ஒருவரும் வாங்கமாட்டார்கள்” என்றேன்.

“சரிதான். புதிதாகச் சேர்ப்போம். முடிந்தவரை சேர்ப்போம். சென்னையில் செய்திகளைத் திரட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் திருச்சியைப் போன்று இங்கு நமக்கு உதவ, உழைக்க ஆட்கள் இல்லை. நோபிள், உறையூர் முத்துக் கிருட்டிணன், கு.ம. சுப்ரமணியம், சோமு போன்றவர்கள் இங்கு இல்லை. து.மா. பெரியசாமியின் டேப்புகள் இல்லை. இதை எல்லாம் நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எனக்கும் உடல்நிலை திடீர் திடீரென கெட்டுப் போகின்றது. நமக்குப் பிறகு இவற்றை எல்லாம் யார் எடுத்துக் கொண்டு செய்யப் போகின்றார்கள்” என்றார்.

“கவலைப்படாதீர்கள். முடித்துவிடலாம்” என்றேன்.

“யார் செய்வார்கள்?” என்றார்.

“ஆட்கள் இருக்கின்றார்கள். பணம் தான் மலைப்பாக உள்ளது. நமக்குத் திருச்சியைவிட இங்கு வெளிவட்டாரப் பழக்கம் வளர்ந்துள்ளது. அங்கு தி.க.வினரை மட்டுமே நம்பி எதையும் செய்ய வேண்டியிருந்தது” என்றேன்.

“கலசத்தையும், பெரியசாமியையும் எண்ணிக் கொண்டு சொல்கிறாயா?” அவர்களால் உதவ முடியும். ஆனால் ஒவ் வொருவருக்கும் குடும்பப் பிரச்சனைகள் உள்ளன. குடும்பம் நடத்தச் சம்பாதிப்பதே பெரிய வேலையாக உள்ளது” என்றார். “தோழர் சங்கமித்ரா?” என்றேன். “அவருக்கு எல்லாம் வாய்ப்பாக உள்ளன. ஆனால் அவர் எதையும் பெரிய அளவில் (மெகா அளவிலேயே) சிந்தித்தும், செய்தும் பழக்கப்பட்டு விட்டார். நம்முடைய திட்டங்கள் அவருக்குப் பொசுக்கென்று தெரியும்” என்றார்.

பின்னர்? என்றார்.

“வேறு சிலர் இப்பதிப்பைச் செய்ய முன்வருகின்றனர். எல்லாரும் பெரியாரியலாளர்கள். ஆனால் இரண்டொருவர் மட்டுமே வசதியானவர்கள். தோழர்கள் நமக்கு அளித்த ஒத்து ழைப்பை அவர்களுக்கு அளிப்பார்களா என்பது அய்யமே”.

“நல்ல ஒத்துழைப்புக் கிடைக்காவிட்டால், தொகுப்பில் சில பகுதிகள் விடுபட்டுப் போகலாம். எல்லாவற்றிற்கும் பணம் முக்கியமான காரணம். திருச்சியில் நமக்குக் கிடைத்த ஒத்துழைப்பு மற்றவர்களுக்குக் கிடைத்திருந்தாலும் நல்ல சாதனை புரிந்திருப்பார்கள்” என்றார்.

“திருச்சியில் உங்களுக்குக் கிடைத்த ஒத்துழைப்பு ஒரு மாதிரியானது. இங்கு கிடைப்பது வேறு விதமானது. இத னையும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுவோம். நீங்கள் யாரிடமும் மனதுவிட்டது போல் எதையும், எப்போதும் பேசாதீர்கள். இங்கு அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்றவற்றோடு தொடர்பு கொள்ளுவது எளிதாக உள்ளது. சிதம்பரம் முனைவர். மெய்யப்பன், பல்லடம் சாமி. மாணிக்கம் ஆகியோரிடம் கலந்து பேசுங்கள். அவர்கள் மனம்திறந்து பேசுவார்கள். உதவுவார்கள்” என்றேன்.

“நாம் யாருடன் வேண்டும் என்றாலும் கலந்து பேசு வோம். நூலகங்களையும் பார்த்துத் தரவுகள் திரட்டுவோம். முனைவர் பொற்கோ, மைசூர் இராமசாமி, அ. ஆறுமுகம் ஆகியவர்களிடமும், நாமக்கல் இராமசாமியுடனும் கலந்து பேசுவோம். நமது அடுத்த பெரிய முயற்சி விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடுவதாகவே இருக்கட்டும்; தோழர்கள் அனைவரையும் இதற்குத் தூண்ட வேண்டும். மற்ற வேலைகளைச் சற்றுத்தள்ளி வைக்க வேண்டும். இதுமுடியும் வரை வடக்கே போக வேண்டாம்.

இரண்டுமணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டது. நான் சிந்தனையாளனுக்குப் போகிறேன்” என்றேன்.

“சரி, நீ, யாரிடமும் எதையும் கூறவேண்டாம். நானே மாவட்டக் கமிட்டிகளிலும், மாநிலக் கமிட்டியிலும் விரிவாகப் பேசுகின்றேன். பின்னர் மாவட்டச் செயலாளர்களும் மற்றவர்களும் என்னைப் பின்பற்றிப் பேசுவார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பத்துப் பேரை இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடச் செய்வதுதான்” என்று ஆனைமுத்து கூறினார். “அதற்கான வசதி சென்னையிலேயே உள்ளது. கமிட்டியிலேயே இதற்கான அழைப்பை வெளி யிடுங்கள். தோழர்கள் தாமே முன்வருவார்கள்” என்றேன்.

அவ்வாறே அவர் அறிவித்ததும் தோழர்கள் இரா. இரத்தினகிரி, நான், வல்லவன், முகிலன், குமணன், தமிழேந்தி, குடிஅரசு, வடிவேல், சுகுணா, அருள்மொழி, பச்சமலை, கலசம், பெரியசாமி மற்றும் முத்தமிழ்ச்செல்வன், பேரா. சோம. இராசேந்திரன், சங்கமித்ரா, வையவன், அம்பத்தூர் தே. முத்து, தீத்தாண்டப்பட்டுத் தோழர்கள், காஞ்சி நகரத் தோழர்கள், இளவழகன், ப. இராமசாமி, பொற்கோ போன்றவர் அன்றும் அடுத்த ஓரிரு நாள்களிலும் விரும்பிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். ஆனால் நூல் எப்படி வடிவமைக் கப்பட வேண்டும் என்பதுத பற்றி மாறுபட்ட கருத்துகள் வந்து கொண்டே இருந்தன.

‘குடிஅரசு’ ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ இதழ்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து கிடைத்தன. வேலூர் தோழர் செந்தமிழ்க்கோ, பெரியார் திடல் நூலகம், மதுரை யாதவர் கல்லூரி நூல் நிலையம், பாகனேரியில் உள்ள தனியார் நூல் நிலையம், அருப்புக்கோட்டை முத்து முருகன் அளித்த நாடார் குல மித்திரன் தொகுப்பு, குளித்தலை கா.க. பிள்ளை நூல் நிலையம், அறிவாலயத்து நூல் நிலையம் - (இந்த நூல் நிலைய நூலகர் மிகவும் நன்றிக்கு உரியவர். அங்கு கிடைக்காத தரவுகள் எங்கெங்கு கிடைக்க வாய்ப்புள்ளன என்று விரிவாக விவரம் கூறுவார்). தரவுகள் அதிகம் கிடைக்கக் கிடைக்க தொகுப்பில் ஈடுபட்டிருந்தோரின் பணிச் சுமைகளும் அதிகமாயின.

சென்னை கன்னிமரா நூல் நிலையம், சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையம், ரோசா முத்தையா நூல் நிலையம், பல கட்சிகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள் மற்றும் பல பெரியார் தொண்டர்கள், பேராசிரியர்கள் முதலி யோர், புதுக்கோட்டை ஞானாலயா நூல் நிலையம் ஆகியோர் தம்மிடம் உள்ள தரவுகளை நம்மிடம் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவர்க்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.

இதுபோன்ற பணிகளுக்கு 1970களைவிட, இப்போது Xerox வசதியும் கணினி வசதியும் இருப்பது பெரிய உதவி. ஆனால் Xerox எடுக்க ஆன செலவே முந்தைய நூல் ஆக்கச் செலவை எட்டிப் பார்த்துவிட்டது. இந்தச் செலவு அய்யப்படு வோருக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது. இதனால் தோழர் வே. ஆனைமுத்து புதிய புதிய வேலைத் திட்டங்களை அறிவிக்க வேண்டியதாயிற்று.

பணச்சுமையால்தான் வேலை தொடங்குவதில் சுணக்கம் ஏற்படுகின்றதோ என அய்யமுற்ற சென்னை தோழர்கள் டாக்டர் பூ. பழநியப்பன், மலேசியா ஆ. கிருஷ்ணசாமி, துரை. கலையரசு, சங்கமித்ரா மற்றும் சிலர் அவர்களின் சொந்த முயற்சியால் ரூ.ஓர் இலக்கம் திரட்டி அதனைத் தோழர் ஆனைமுத்திடம் அளித்தனர். ஒரு கணினிப்பொறி வாங்கப் பட்டது.

கணினி முதலிய கருவிகள் உள்ளன. ஆனால் யாரை வைத்துக் கொண்டு இப்பணியை முடிப்பது? அப்போது அலுவலகத்துக்கு வரும் யாருக்கும் கணினிப் பயிற்சி இல்லை. மாத ஊதியத்துக்கும் யாரும் வருவதாகத் தெரியவில்லை.

மயிலாடுதுறையில் இருந்து வந்து சிந்தனையாளன் பொங்கல் மலருக்கு இரண்டு தடவைகள் கணினியில் பணியாற்றிய தோழர். சபாநாயகம் பற்றித் தோழர் ஆனைமுத்து ஆர்வமுடன் உசாவினார்.

சபாநாயகம் கணினித் தொழிலில் வல்லவர். விரை வாகவும், திருத்தமாகவும் வேலை செய்யக் கூடியவர். அவரிடம் கடலூரில் வைத்துப் பேசிப் பார்த்தேன். தோழர் பா. மோகனும் உடன் இருந்தார். சபாநாயகம் மாத ஊதியத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டார். உணவும், உறையுளும் அலுவலகத்திலேயே.

அகலம் அதிகமான ledger போன்ற ஒரு குறிப்பேட்டில் - பெருந்தலைப்பு - உள்தலைப்பு கட்டுரை அல்லது பேச்சுத் தலைப்பு ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்துள்ள நாள் - பக்க எண், பத்தி எண் தொடக்கம், முடிவு ஆகிய செய்திகளைக் கையிலுள்ள எந்தக் கட்டுரையும் விடுபட்டுப் போகா வண்ணம் பட்டியலிட்டோம் நானும் கலியமூர்த்தியும். இப்போது அச்சாக்கம் தொடங்கலாம்.

இடையில் பெரியாருடைய காப்புரிமை பற்றிய வழக்கு வந்தது. பெரியார் தி.க.வின் வெளியீட்டு முயற்சியும் வந்தது. இந்த ஒவ்வொரு முயற்சியின் போதும் புதிது புதிதாக அய்யம் எழுப்புவோர் முளைத்துக் கொண்டே இருப்பர். தோழர்கள் பச்சமலை, சங்கமித்ரா, பா. மோகன் ஆகியோர் இவ்வாறு அய்யப்படுவோருக்கு நம்பிக்கையூட்டும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தனர்.

ஈழச் சிக்கல் தொடர்ந்து கடுமையாகிக் கொண்டே வந்தது. அதில் அதிக ஈடுபாடு கொண்ட மாணவர் நகலக உரிமையாளர் தோழர் அருணாசலம் தாமே - தம் சொந்தப் பொறுப்பில் சிந்தனைகளை வெளியிட முன்வந்தார். பண வசதியும், ஆள் வசதியும் மிகுந்த அவரால் பழைய தரவுகளைத் திரட்ட முடியுமா என்ற அய்யம், தோழர் அருணாசலம் மிகவும் பொருத்தமானவர் என்று எண்ணியோர்களிடமும் இருந்தது. இதுவரை தோழர் ஆனைமுத்துவிடம் குடிஅரசுத் தொகுதிகளைத் தந்திருந்த தோழர்கள், குடிஅரசுத் தொகுதி களை வேறு யாருக்கும் தருவதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.

அதுவரை சேர்த்த குடிஅரசு தொகுப்புகளே மலைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாக இருந்தன. இரண்டு பெரிய மரரேக்குகளில் முழுமையாக அடுக்கி வைக்கும் அளவுக்கு அவை இருந்தன. சிந்தனையாளன் அலுவலகம் இருந்த இடம் இவற்றை முழுமையாக அடுக்கி வைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளதாகவும் இல்லை. இந்தச் சிக்கலைப் பற்றி அறிந்த தோழர் இரத்தினகிரி அரசு அலுவலர் ஒன்றியத்தில் 16 நாட்கள் முன்பே எடுத்து வைத்திருந்த 19ஆம் எண் அறைக்கு அடுத்த அறையையும் (அறை எண்.18) வாடகைக்கு எடுத்துத் தந்தார். இந்த இரண்டு அறைகளுக்கும் திங்கள் தோறும் ரூபாய் 3000க்குமேல் அவர் பல ஆண்டுகளுக்குத் தம் சொந்தப் பணத்தைக் கடனாகத் தந்து வந்தார். இது அவர் பெரியார் மேல் கொண்டிருந்த ஈடுபாட்டையும், சிந்தனைகள் வெளிவர வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த வெறி உணர்வையும் காட்டுகின்றது.

தொகுப்புப்பணி முழு வீச்சில் நடைபெறுவதற்கு வேண்டிய புறச்சூழநிலைகள் முழுவதுமாய் அமைந்துவிட்டது.

பலருடன் கலந்து பேசியதில் முதலில் கையிலுள்ள ‘குடிஅரசு’த் தொகுப்புகள் முழுவதையும் Xerox எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பெரியதாக A4 அளவில் அமைந்த குடிஅரசுப் பக்கங்களைப் படி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அளவைக் குறைத்துப் படி எடுத்தால் எழுத்துக்கள் சிறியனவாகி ஒப்பிட்டுப் பார்க்கும் பணி சிரமமானதாகிவிடும். இதற்குத் தீர்வுகாண தோழர் இளவழகன் கைகொடுத்தார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் Xerox நிறுவனம் நடத்திவந்தார். அவர் குடிஅரசு இதழ்களை அப்படியே நகலெடுத்துத் தந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். இப்பணி தொடங்கிய பின்னர் தான் அதன் வீச்சு தெரியவந்தது. 4, 5 திங்கள்களுக்கு இப்பணி நீடித்தது. இந்தக் கடுமையான பணியைத் தோழர் குமணன் அதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்து எடுத்து முடித்தார்.

பக்கங்கள் விடுபடாமல் நகலெடுக்கப்பட்டுவிட்டனவா என்று ஒப்பிட்டுப் பார்க்க சிறுகடம்பூரில் இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இரா. கலியமூர்த்தி சென்னைக்கு வந்து மாதக்கணக்கில் தங்கினார். அத்துடன் மெய்ப்பு திருத்தும் பணியையும் அவர் மேற்கொண்டார். முதல் தொகுப்புப் பணியை மேற்கொண்டவர் அவர்.

முதலில் மூன்று திட்டங்களுக்கான குடிஅரசு மட்டும் கிடைத்த போது அவ்வளவையும் கையால் எழுதி நகலெடுத்து விடலாம் எனக் கருதி வீரானந்தபுரம் புலவர் ந. புகழேந்தி என்பவரை அதற்கென அமர்த்தி நகலெடுக்க வைத்தோம். அதிலுள்ள காலவிரயம் தெரிந்ததும் தான் Xerox நகலெ டுக்கத் தொடங்கினோம்.

இதற்கிடையில் பழைய தொகுப்பில் இருந்த பெருந் தலைப்புகளுடன் மேலும் சில உள் தலைப்புகளைச் சேர்க்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை தோழர் வே. ஆனைமுத்து Xerox படி ஒன்றில் சிவப்பு மையினால் எழுதித்தருவார். இப்போது கட்டுரைகளைக் கால முறைப்படி அளிக்க வேண்டியதுதான் மீதி!

மேலும் இவ்வளவு பெரிய வேலையை ஒரு தொழில் முறைக் கணினியாரிடம் கொடுத்து வேலையை முடித்து வாங்குவதில் காலதாமதம் ஏற்படும் என்று கருதிய மின் பொறியாளர் பொ. செல்வன் அவர்கள் ஒரு கணினி, பிரிண்டர் முதலிய அனைத்தையும் நன்கொடையாக அளித்தார்.

சபாநாயகம் மட்டும் இதைச் செய்தால் ஆண்டுக் கணக்கில் ஆகும் என எண்ணியதால் முன்பு சிந்தனையாளன் இதழையும் பொங்கல் மலரையும் உருவாக்கித் தந்த தோழர் மாரிக்கண்ணனிடம் 500-600 பக்கங்களைத் தந்து நமக்கு வேண்டிய நூல் வடிவில் கணினியில் அச்சுக்கோத்து தரச் சொன்னோம். அவரும் அவற்றைச் செவ்வனே செய்து தந்தார்.

மெய்ப்புத்திருத்தும் பணி கடுமையானதாகத்தான் இருந்தது. முதல் வரிசை தொகுப்புகளிலேயே எழுத்துப் பிழைகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இப்போது மெய்ப்புத் திருத்தும் பணியில் தோழர்கள் பச்சமலை, முகிலன், கலசம், ஆவடி. நாகராசன், நாஞ்சில் போன்றவர்கள் பெருமளவு உதவினர்.

நூல் உருவாகிவிடும் என்ற நிலை தோன்றியபோது பணம் பற்றிய கவலை அனைவரையும் பற்றிக் கொண்டது. தோழரும் இதற்காக அதிகநேரம் கவலைப்பட்டார்.

அடிக்குறிப்பு எழுதும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டது. அதற்கான தரவுகள் எளிதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலகு முடிந்ததும் அடிக்குறிப்பு தருவது என முடிவெடுத்தோம்.

அடிக்குறிப்பு, வேண்டிய செய்தி வந்துள்ள அதே பக்கத்திலேயே சிறிய எழுத்துக்களில் அடிக்குறிப்பைத் தரலாம் எனக் கருத்துக் கூறப்பட்டது. பதிப்புத் துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் இது பக்கங்களை ஒழுங்கு செய்யும் போது நிறைய இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும் என்று கூறியதால் அலகு முடிந்ததும் அடிக்குறிப்பு எழுதும் நிலையே மேற் கொள்ளப்பட்டது.

அடிக்குறிப்புக்கான தரவுகளைத் திரட்ட, பலர் பல ஊர்களில் அலைந்து திரிந்து தரவுகளைத் திரட்டினர். ஒருவரே தொடர்ச்சியாக அதே வேலையாக ஈடுபட்டிருந்தால் தோழர் அதியமான் சுட்டிக்காட்டிய குறைகள் நிகழாமல் போயிருக்கும். அடிக்குறிப்புக்கான பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அதனைப் படி எடுத்து வைத்துக் கொண்டு தோழர்கள் முகிலன், தமிழேந்தி, வையவன், தஞ்சைத் தோழர்கள் பசு. கவுதமன், குப்பு. வீரமணி, மருதவாணன், பல்லடம் புலவர் சாமி, மாணிக்கம், பச்சமலை, நான், தோழர் வே. ஆனைமுத்து, வல்லவன் ஆகிய அனைவரும் திரட்டியதால் சில தவறுகள் நேர்ந்துவிட்டன. இது தொகுப்பு நூல்கள் வெளியிடுவோருக்கு ஒரு பாடமாகும்.

திருமுதுகுன்றம் தமிழ்நூல் காப்பகத்தில் திரட்டிய குறிப்புகளையும் ‘பெரியார் சிந்தனைகள்’ மூன்று தொகுதி களையும் - அடிக்குறிப்புக்காக இதுவரை சேகரித்த குறிப்பு களையும் எடுத்துக் கொண்டு பெரியார் பேருந்தில் நான் சென்னைக்குச் சென்றபோது, விடியற்காலை 3 மணி அளவில், மேல் மருவத்தூர் அருகில் பேருந்து ஒரு சிற்றோ டையில் விழுந்துவிட்டது. பேருந்தில் எல்லா இடங்களிலும் நீர் புகுந்துவிட்டது. அந்தக் கணத்தில் நான் கொண்டுசென்ற மூன்று பெரிய பைகளை உடனே கண்டுபிடிக்க முடிய வில்லை. இத்தனைப் பேருடைய ஆண்டுக்கணக்கான உழைப்பு வீணாகிப் போய்விட்டதே என்னும் வருத்தம் என்னை ஆட்கொண்டது. எனக்கு அடியேதும் படவில்லை. இருக்கையில் இருந்து பேருந்துக்குள்ளேயே விழுந்ததாலும், நீரில் முழுமையாய் நனைந்திருந்ததாலும் சற்றுநேரத்தில் எழுந்து பைகளைத் தேடினேன். அனைத்தையும் கண்டு பிடித்தேன். எழுத்துகள் அழிந்திருக்குமே என அய்யம் ஏற்பட்டது. தாள்கள் அனைத்தும் நனைந்திருந்தாலும் குறிப்பு கள் குமிழ் முனையால் எழுதப்பட்டதால், அப்படியே இருந்தன.

ஏறத்தாழ பழைய மூன்று தொகுதிகளை மறுபதிப்புக்கு அணியப்படுத்தி விட்ட நிலையில் சிந்தனையாளன் அலுவலகத்தில் இந்தத் தொகுப்புப் பணியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, மிகக் கடுமையான மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். பல நாட்கள் நினைவு இல்லாமல் இருந்திருக்கிறேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது நினைவு வந்தது. உடம்பில் இடது பக்கம் முழுவதும் (கண், காது, உதடுகள் உள்பட) செயலிழந்து போயிருந்தன. நான் மிகவும் கவலைப்பட்டேன்.

மிகவும் கடினமான உழைப்புக்குப் பழக்கமில்லாத நான், ஆண்டுக்கணக்கில் கடை உணவை உட்கொண்டு, காலநேரம் பற்றியோ உடல்நிலை பற்றியோ தூக்கமின்மை பற்றியோ கவலைப்படாமல் முரண்பட நடந்து கொண்டதால் இந்தப் பக்கவாத நோய் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். தொகுப்பு வெளிவருவது பற்றிய கவலை ஆழ்மனத்தில் இருந்து கொண்டே இருந்திருக்கின்றது.

ஒரே வாரத்தில் என் பேச்சு மற்றவர்களுக்குப் புரியும் நிலை ஏற்பட்டது. ஆனால் இடக்கையும், காலும் இயங்கவே இல்லை. எனவே இப்பணியை எடுத்துக் கொண்டு செய்யக் கூடியவர்கள் பற்றி எண்ணத் தலைப்பட்டேன். இதுகுறித்து என் மகன் தோழர் சித்தார்த்தனிடமும் கலந்து பேசினேன்.

புதிய தொகுப்புகளுக்குக் கணினி அச்சாக்கம் செய்ய வேண்டும். மெய்ப்புத் திருத்த வேண்டும். படங்களைச் சரிபார்த்துச் சேர்க்க வேண்டும். பக்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். எதிர்மம் எடுத்தல், அச்சிடுதல், கட்டடம் (Binding) கட்டுதல் முதலிய கடுமையான பணிகள் முன்னின்றன. இதில் என்னால் என்ன செய்ய முடியும் என்ற இயலாமை என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

தோழர்கள் குமணனும், ஆ. முத்தமிழ்ச்செல்வனும் எங்கள் தேர்வாக இருந்தனர். இந்தப் பணிகளை ஒரு குழுவாக இருந்து பலர் செய்தால்தான் முடிக்க முடியும். அதற்குத் தோழர் குமணனுக்கு வாய்ப்பில்லை. தோழர் முத்தமிழ்ச் செல்வனுக்கு வாய்ப்புண்டு. இவருக்கு உதவப் பேராசிரியர் சோம.இராசேந்திரன், முனைவர். சுந்தரபாண்டி, சூலூர் தோழர்கள் க. தேவராசு, கவுதமன் முதலியோர் உள்ளனர்.

இப்போது சுமையாகத் தோன்றியது கணினி வேலை தான். எங்கள் வீட்டில் இரண்டு கணினிகள் உள்ளன. அதில் ஒன்றில் இப்பணிகளைச் செவ்வனே செய்வதற்கு வேண்டிய மாற்றங்களைத் தோழர் முத்தமிழ்ச் செல்வன் செய்துதந்தார். காட்டுமன்னார் கோயிலுக்கு வந்து இவ்வேலையைச் செய்ய தோழர் சபாவுக்கு முடியாது. எங்கள் நெருங்கிய உறவின ரான பெண் (அருண்மொழி) M.Com., M.Phil படித்தவர். எங்கள் சிற்றூரில் உள்ளார். நல்ல திறமைசாலி. அவரிடம் சில குடிஅரசு பக்கங்களைத் தந்து DTP செய்துதரச் சொன்னோம். மிகவும் நன்றாகச் செய்து தந்தார். அவர் இதே வேலையாக இருந்து இரண்டாம் தொகுப்புக்கான பக்கங்களை DTP செய்து தந்தார். அவற்றைத் தோழர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் கோவைக்கு எடுத்துச்சென்று மெய்ப்பு திருத்தி ஒரே திங்களில் கொண்டுவந்து தந்தார். அவர் பணிகளுக்குப் பேராசிரியர் சோம.இராசேந்திரன் மிகப்பெரும் உதவியாய் இருந்தார். பின்னர் அந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மெய்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதன்பின் இப்பணிகளை நம்பிக்கை யுடன் தோழர் முத்தமிழ்ச்செல்வனிடம் தந்தோம். அவர் ஏதாவது அய்யங்கள் கேட்டால் பதில் உரைப்பதும், நூல் முன்பதிவை முடுக்கிவிடத் தோழர்களுடன் தொலைபேசி மூலமும், அஞ்சல் மூலமும் ஊக்குவிப்பதும் செய்துவந்தேன். புலவர் கி.த. பச்சையப்பன் மெய்ப்பு திருத்துவார். நாங்கள் கவனிக்கத் தவறிய பிழைகளைச் சுட்டிக்காட்டி எங்களையும் திருத்துவார்.

இயக்கத் தோழர்கள் முக்கியமாக மாவட்ட, நகரச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், தோழமைக் கட்சித் தோழர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் போன்றோர்களின் 50 - 100 பேர்களின் கூட்டு முயற்சி, உழைப்பு ஆகியவற்றால் தான் இரண்டாம் தொகுப்பு வெளியீடு வெற்றியாகவும், சிறப்பாக வும் நடந்தது. அந்த விழாவுக்கு ஒரு மூடுந்து மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது. அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் அன்புடன் உரித்தாக்கிக் கொள்ளுகின்றேன். நூலைப் பெற்றத் தோழர்களை அருள்கூர்ந்து எல்லா நூல்களையும் ஆழ்ந்து படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் சிறப்பாகப் பணியாற்ற உடல்நிலை மிக விரைவில் ஒத்துழைக்கும் என்று நம்புகின்றேன்.

Pin It