எந்த ஒன்று நடந்திருக்கக் கூடாதோ அந்த ஒன்று நடந்தே விட்டது. இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு குழந்தையும் மாற்றுச் சான்றிதழோடு வேறு இடம் நோக்கி நகர்ந்து விடவே வேடசந்தூர் அருகே உள்ள சீத்தப் பட்டியில் அறிவாலயம் ஒன்று இழுத்து மூடப்பட்டிருக்கிறது. ஆறு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளி இரண்டு குழந்தைகள் பள்ளியாய் மாறி, இரண்டும் ஒன்றாகி இப்போது பூட்டியேயாகி விட்டது. 

இது ஏதோ சீத்தப்பட்டி என்னும் ஒரு கிராமத்தின் நிகழ்வு என்று மட்டும் கொண்டுவிடக் கூடாது. இரண்டு வகுப்பறைகளே இருந்த பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுமே மூடப்பட்டு விட்டதால் மொத்தப் பள்ளியும் மரணித்துப் போகவே விஷயம் வெளிசசத்திற்கு வந்திருக்கிறது. இதுவே இருபது வகுப்பறைகள் கொண்ட ஒரு பள்ளியில் இரண்டு வகுப்புகள் மூடப்பட்டிருந்தால் அது யாருடைய கவனத்திற்கும் வந்திருக்காது. இப்படித்தான் தமிழகத்தின் பல நூற்றுக்கணக்கான பொதுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்று இரண்டென்று மூடப்பட்டு வரும் வகுப்பறைகள் குறித்த தகவலெதுவும் தமிழகத்துப் பொதுப்புத்திக்கு கொண்டு போகப் பட்டதாகவே படவில்லை 

பொதுவாகவே பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் "ஒன்று" , "ஆறு", "ஒன்பது", மற்றும் பதினொன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பெற்றோரின் பணியிட மாற்றம், பிழைப்பு சார்ந்த புலம் பெயர்வு, மற்றும் இதையொத்த காரணங்களை முன்னிட்டு மற்ற காலங்களிலும் எல்லா வகுப்புகளிலும் பள்ளி விட்டு பள்ளி மாறும் மாணவர்களும் உண்டு. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சுமார் நான்காயிரத்து ஐநூறு தேறும். இத்தோடு அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்த்தால் குத்துமதிப்பாய் ஆறாயிரத்துக்கும் சற்று கூடுதலான எண்ணிக்கையில் பொதுப் பள்ளிகள் தேறும். இதில் பெரும்பாலான பள்ளிகள் ஒவ்வொன்றிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஐம்பது முதல் நூறு வரை துண்டு விழுந்திருக்கக் கூடும். 

தொகுத்துப் பார்த்தால், இந்த ஆண்டு சற்றேறக் குறைய மூன்று லட்சத்தை ஒட்டிய எண்ணிக்கையிலான குழந்தைகள் பொதுக் கல்வியை நிராகரித்திருக்கிறார்கள். இது குறித்த கவலை பொதுத் தளத்தில் இல்லை என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இதை இப்படியே விட்டு விட்டால் பொதுக் கல்வியின் மரணத்தை நம் காலத்திலேயே பார்த்துவிட்டு சாகும் சாபம் தவிர்க்க முடியாதது. 

"கள்வர்களால்

கொள்ளை போகாது

கடைத் தெருவில் விற்காது"

என்ற நமது மூத்தக் கிழவியின் நம்பிக்கை பொய்த்துப் போகும். கல்விக் கூடங்களே கல்விச் சந்தையாய் மாறிப் போகும். 

"சுத்த பேத்தல். அதெல்லாம். எங்களுக்கு தெரியாததா? எவ்வளவு செஞ்சிருக்கோம். கட்டணம் இலவசம், புத்தகம் இலவசம், பேருந்து இலவசம், மிதி வண்டி இலவசம், சத்துணவு, வாரம் மூன்று முட்டை என்று எவ்வளவு செஞ்சிருக்கோம். நபார்டு வங்கி உதவி, மற்றும் நமக்கு நாமே திட்டம் மூலம் சகல வசதிகளோடும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அப்புறம் எப்படி பொதுக்கல்வி சாகும்? வேலயத்தவனுங்களோட பொலம்பலுங்க இது" என்றும் சிலர் வரலாம். எனவே புரியும் படிக்கு பேசிவிடுவதே உத்தமம் என்றே படுகிறது. 

உதாரணத்திற்கு ஒரு பொதுப் பள்ளியை எடுத்துக் கொள்வோம். அந்தப் பள்ளியில் சென்ற ஆண்டு ஆறாம் வகுப்பில் மூன்று , ஏழாம் வகுப்பில் மூன்று , எட்டாம் வகுப்பில் மூன்று , ஒன்பதில் மூன்று , பத்தாம் வகுப்பில் மூன்று என்று மொத்தம் பதினைந்து பிரிவுகள் இருந்தன என்று வைத்துக் கொள்வோம். என்றால் ஆறு முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு பாடங்களை போதிக்க ஒன்பது ஆசிரியர்களும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஆறு ஆசிரியர்களும் இருந்திருப்பார்கள். இது போக மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு தமிழாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கலை மற்றும் தொழில் ஆசிரியர்கள் என்று இருந்திருப்பார்கள். குறைந்த பட்சம் பதினைந்து வகுப்பறைகளாவது இருந்திருக்கும். 

அந்தப் பள்ளியில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒரு நாற்பது அல்லது ஐம்பது என்று துண்டு விழுகிறது எனக் கொள்வோம். விளைவாக ஆறாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள் மட்டுமே என்றாகும். ஒரு அறை இழுத்து மூடப்படும். ஒரு ஆசிரியர் வேறு பள்ளிக்கு சென்று விடுவார். இதன் விளைவாக அடுத்த ஆண்டு ஏழாம் வகுப்பில் ஒரு பிரிவு குறைந்து இரண்டு பிரிவுகளாகி விடும். இந்த ஆண்டும் ஆறாம் வகுப்பில் சேர்க்கை குறைந்தால் ஆறாம் வகுப்பில் இன்னும் ஒரு பிரிவு குறைந்து ஒரே ஒரு பிரிவாக மாறும். ஆக மொத்ததில் அடுத்த ஆண்டு இரண்டு வகுப்பறைகள் புதிதாய் பூட்டப்பட்டு விடும் . இன்னும் இரண்டு ஆசிரியர்கள் பணி நிரவலில் வேறு பள்ளிகளுக்கு போய் விடுவார்கள். 

இப்படியே ஐந்தாறு ஆண்டுகள் தொடர்கிறது என்று கொள்வோம்.இப்போது ஆறாம் வகுப்பில் சேர அந்தப் பள்ளிக்கு ஒரு பத்து மாணவ்ர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் பள்ளியில் போதுமான அளவிற்கு வகுப்பறைகள் இருக்கும். ஆனால் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த மாணவர்கள் நிச்சயம் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க இயலாத ஏழை மாணவர்களாகத்தான் இருப்பர். 

ஆக அந்த மாணவர்களால் காசு கொட்டியும் படிக்க இயலாது. பொதுப் பள்ளியும் என்ற நிலையில் மீண்டும் குலத் தொழில் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க இயலாததாகி விடும். இரண்டு கேள்விகள் நம் முன் நிற்கின்றன. ஏன் பொதுக் கல்வி நிராகரிக்கப்படுகிறது? என்பது ஒன்று. பொதுக் கல்வியை காப்பாற்ற என்ன செய்யலாம்? என்பது இரண்டு.

முதலில் மக்கள் பொது கல்வியை நிராகரிப்பதற்கு முன் வைக்கும் காரணங்களைப் பார்ப்போம். 

1) போதுமான ஆசிரியர்கள் இல்லை.

2) ஆசிரியர்கள் தேவையான அளவு அக்கறையோ சிரத்தையோ எடுப்பதில்லை

3)போதுமான அளவிற்கு தளவாடங்களோ, கட்டட வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை

4) சாதகமான கல்விச் சூழல் இல்லை.

5) ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும்

6) தரமான மற்றும் மதிப்பெண்களுக்கு உத்திரவாதமான கல்வி சுயநிதி பள்ளிகளில் மட்டுமே சாத்தியம்

7) இவை போல இன்னும் சில 

இவற்றுள் பொதுப்பள்ளிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லை என்பதை நாம் கவலையோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கல்வியை சேவை பட்டியலிலிருந்து காசுக் கேற்ற கல்வி என்ற வகையில் நுகர் பொருளாக மாற்றி சந்தைக்கு கொண்டு போய்விட வேண்டும் என்று உலகமயமும் தாராளமயமும் விரித்த வஞ்சக வலையில் நமது அரசுகள் மகிழ்ச்சியோடு தாமாய் சென்று பதுங்கி கொண்டதன் விளைவே இது. 

"one eight particulars" என்ற விவரம் ஒன்றினை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளியும் ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்க வேண்டும் என்றிருக்கிறது. இந்த விவரத்தில் பள்ளியின் வகுப்பு வாரியான மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பள்ளிக்குமான ஆசிரியர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். இரண்டு மூன்று மாணவர்கள் குறைந்தமைக்காகக் கூட ஒரு ஆசிரியரை மிகுந்த கடமை உணர்ச்சியோடு நிரவலில் வேறு பள்ளிக்கு மாற்ரிய நிறைய அதிகாரிகளை எனக்குத் தெரியும். 

இது மட்டுமல்ல இந்த விவரங்கள் கிடைக்கப் பெற்றதும் இந்த அறிக்கையை சரி பார்க்க குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் பள்ளிகளை பிரித்துக் கொண்டு வந்து மாணவர் வருகைப் பதிவேடுகளை கையில் எடுத்துக் கொண்டு வகுப்பு வகுப்பாக அலைகிற காட்சி இருக்கிறதே, அப்பப்பா கண்கள் பூத்தே போகும் போங்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பணி நிரவலில் மாற்றப்படும் ஆசிரியருக்கு அந்த ஆண்டு இடையில்தான் உத்திரவு வருமென்பதால் அவரது குழந்தைகளை பள்ளி மாற்றுவது குடும்பத்தை இடம் பெயர்ப்பது என அவர் படும் சிரமங்கள் இருக்கிறதே, அது சொல்லி மாளாது. 

கேட்டால் குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர்களைத்தானே எடுக்கிறோம். எடுத்த ஆசிரியர்களை வீட்டுக்கா அனுப்புகிறோம். அதிக மாணவர்களோடு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவதிப்படும் பள்ளிகளுக்குத்தானே அனுப்புகிறோம் என்கிறார்கள். மேம்போக்காய் கேட்டால் இது சரியென்றே படும். அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை என்றுதான் நாமும் சொல்கிறோம். ஆனால் பணி நிரவலில் அதை ஈடு கட்டாமல் புதிய ஆசிரியப் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஈடு கட்ட வேண்டும் என்பதே நம் கோரிக்கை. 

இருபத்தி ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நீண்ட நாள் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். மற்றபடி பொதுப் பள்ளி ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு இவையெல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் பொதுக் கல்வியை காப்பாற்ற வேண்டியதில் தங்களுக்குரிய பொறுப்புணர்வினை அவர்கள் போதுமான அளவிற்கு உணர்ந்திருக்கிறார்களா என்ற ஐயத்தில் உண்மை இல்லையென்று சொல்லிவிட முடியாது. 

மற்றபடி ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு என்கிற தவறான பொதுப் புத்தியை உடைக்க வேண்டிய பொறுப்பு சமூக அக்கறையுள்ள எல்லோருக்கும் உண்டு என்றாலும் அரசுதான் இதில் கூடுதலான முழு அக்கறை கொள்ள வேண்டும். சுய நிதி மற்றும் ஆங்கிலப் பள்ளிகளை அதிக அக்கறையோடு கண்காணிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் ன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பொதுப் பள்ளிகளில் ஓராண்டில் படிக்க வேண்டிய பாடங்களை இந்தப் பள்ளிகளில் இரண்டாண்டுகள் படிப்பதன் மூலம் நிறைய மதிப்பெண்கள் பெற வாய்ப்பாகிறது. மதிப் பெண்களே குறியாகிப் போன இந்த சமூகத்தில் பொதுக் கல்வி நிராகரிக்கப் படுவதற்கான ஆகப் பெரிய காரணம் இதுதான். அரசும் அதிகாரிகளும் பொறுப்புணர்வோடு இதை கண்காணிக்காவிட்டால் பொதுக் கல்வியின் மரணத்திற்கான பெரும் பொறுப்பாளிகளாவார்கள். 

பொது மக்கள் தங்கள் குழந்தைகளை நம்பிக்கையோடு பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டும் என்று போராடும் சமூக அக்கறையுள்ள அமைப்புகளோடு இணைந்து போராட வேண்டும். பொது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில் முதலில் படித்தவர்கள், அரசு ஊழியர்கள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.  

இல்லையேல் பொதுக் கல்வி பையப் பைய மரணித்துப் போகும். 

- இரா.எட்வின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It