தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை எதிரிகளால்கூட குறை சொல்ல முடியாமல் - அவர்களை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது என்பதே உண்மை. “புள்ளி விவர மாயாஜாலத்துக்குள்” புகுந்து கொண்டு, நிதி நிலை அறிக்கையில் குறை காணும் வாய்ப்பு இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு வந்த உரையை சட்டசபையில் ஜெயலலிதா படித்திருக்கிறார். அவர் எழுப்பிய வாதங்களையும், சட்டசபையில் கலைஞர், பேராசிரியர் மற்றும் அமைச்சர் பெரு மக்கள் தகர்த்து எறிந்து விட்டனர்.
மனிதக் கழிவை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ..50 கோடி செலவில் மாற்றுத் தொழில் திட்டம் திராவிட இயக்க ஆய்வு மய்யம், நுழைவுத் தேர்வு ரத்து, வேலை நியமனத் தடை நீக்கம், பெரியார் படத்துக்கு நிதி உதவி, அம்பேத்கர் ஆங்கில மொழிப் படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட உதவி, நிலமற்றோருக்கு நிலம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக 10 நல வாரியங்கள், அரவாணிகள் முன்னேற்றத்துக்கு திட்டங்கள் - அவர்களுக்கு குடும்ப அட்டைகள், இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதில் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான செயல் முறை, மீண்டும் கிராமங்களுக்கு மினி பேருந்து, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், 10 ஆம் வகுப்பு வரை கட்டாயமாகத் தமிழ்ப் பாடம், ஈழத்திலிருந்து ‘ஏதிலி’களாக வரும் தமிழர்களுக்கு உதவித் தொகை உயர்வு. பகத்சிங்குக்கு நூற்றாண்டு விழா, அரசு உதவிப் பெறாத சுயநிதி கல்லூரிகளிலம், 65 சதவீத இடஒதுக்கீடு என்று சமூகப் பார்வையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான நிதி நிலை அறிக்கையாக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி முழுமையாக விலக்கியிருப்பதை, வரவேற்கிறோம். ஆனால், தமிழ்ப் பெயர் சூட்டினால் மட்டும் போதாது, படமும் சமுதாயப் பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, இந்த இரண்டு அம்சங்களும் கொண்ட படத்துக்கு வரிவிலக்கு தருவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும் என்பது நமது கருத்து.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், மிகப் பெரும் சமூகப் புரட்சி. திருவண்ணா மலையில் இதற்கான ஆகமப் பயிற்சிக் கல்லூரி துவங்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக, செய்திகள் வந்துள்ளன. அர்ச்சகர் பதவிகள் - இப்படி, சாதிகளைக் கடந்து, முறையான பயிற்சிக்கு உட்படுத்தப்படும் போது, ஏற்கனவே, எந்த முறையான பயிற்சியும் இன்றி, ‘பிறவி’யின் அடிப்படையில் அர்ச்சகர்களாக இருப்பவர்களை, நீக்குவதே சரியான முடிவாக இருக்க முடியும். அப்போதுதான், பயிற்சி பெற்று வரும் பார்ப்பனரல்லாத சமூகத்தினர், ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக முடியும். ஒரு பக்கம் பரம்பரை வழி அர்ச்சகர்களை அனுமதித்துக் கொண்டு, மற்றொரு பக்கம், ஆகமப் பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தால், புதிதாக படித்து வருகிறவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடும். இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறோம்.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினரால் - உயிர், உடைமைகளை இழந்து, தவிக்கும் மக்களின் துயர் துடைக்க நியமிக்கப்பட்டதுதான் சதாசிவம் ஆணையம். இந்த ஆணையத்தின் பரிந்துரையை, புறந்தள்ளிய ஜெயலலிதா ஆட்சி, படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் நடத்திய அதிரடிப்படைக்கு, அரசுப் பணத்தை வாரி இறைத்து பெருமைப்படுத்தியது, மன்னிக்கவே முடியாத மனித விரோத நடவடிக்கை. இந்த நிலையில், சதாசிவம் பரிந்துரையை அமுலாக்குவதற்கான உறுதியை, சட்டமன்றத்தில், கலைஞர் அறிவித்துள்ளது, பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும். இந்த மகத்தான மனிதநேயப் பணியை கலைஞர் ஆட்சி நிறைவேற்றினால், அது இந்த ஆட்சியின் ஒப்பற்ற சாதனையாக என்றென்றும் மிளிரும் என்பதில் அய்யமில்லை.
உடனடியாக அமுல் படுத்துக!
மத்திய அரசு கல்வித் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும், இதைப் படிப்படியாகவே அமுல்படுத்தலாம் என்ற முடிவு ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாததாகும். இது தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட வீரப்ப மொய்லி குழு அரசுக்கு தந்துள்ள அறிக்கையில் இடஒதுக்கீட்டை படிப்படியாக அமுல்படுத்தலாம் என்றும், உடனடியாக அமுல்படுத்தினால், அரசு பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்றும் பரிந்துரைத்துள்ளதோடு, அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் கல்வி மய்யங்கள் சுயேச்சையாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.
இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில் இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்று, தமிழக முதல்வர் கலைஞர் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதோடு, அவசரச் சட்டத்தின் மூலம், இதை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதை கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியும், பிரதமரை நேரில் சந்தித்து, இடஒதுக்கீட்டை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியிருப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
மத்திய அரசின் கீழ் உள்ள 17 பல்கலைக் கழகங்களில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 757 மாணவர்கள் வேளாண்மை, நிர்வாக இயல், மருத்துவம், பொறியியல் போன்ற பட்டப் படிப்புகளைப் படித்து வருகிறார்கள். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இடஒதுக்கீடே இல்லை; இனிமேல் தான் 27 சதவீத இடஒதுக்கீடு வரப்போகிறது.
27 சதவீத இடஒதுக்கீடு வந்துவிட்டால், இதுவரை பார்ப்பன உயர்சாதியினரே பெற்று வந்த இடங்கள் குறையும் என்பதால், அவர்கள் எண்ணிக்கைக் குறையாத அளவுக்கு இடங்களை அதிகப்படுத்தித் தருவதாக, மத்திய அரசு, பார்ப்பனர்களை சமாதானப்படுத்தியது. எனவே, பொதுப் பிரிவில் வருவோர் எண்ணிக்கைக் குறையக் கூடாது என்பதற்காக, மொத்த இடங்களை 54 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளார்கள். இதனால் 80,557 இடங்கள் அதிகரிக்கிறது. இதற்காக 12,128 புதிய கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியிருப்பதோடு, அரசு இதற்காக 16 ஆயிரத்து 563 கோடி ரூபாய் செலவிட வேண்டி வரும் என்று மொய்லி கமிட்டி கூறுகிறது.
கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி, பிற்படுத்தப்பட்டோர் உரிமையை மேலும் தாமதப்படுத்தி படிப்படியாக நிறைவேற்றலாம் என்பது மிகப் பெரும் சமூக அநீதியாகும். சென்னை உட்பட இந்தியா முழுவதிலுமுள்ள அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் இத்தனை காலமாக பார்ப்பனர்களே பெரும்பாலான இடங்களைப் பிடித்துக் கொண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளைப் பறித்து வந்துள்ளார்கள்; இது எவ்வளவு பெரிய கொடுமை!
‘இன்போசிஸ்’ கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பார்ப்பனர் நாராயணமூர்த்தி, அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் இடஒதுக்கீடே கூடாது என்கிறார். அதற்கு பதிலாக ஆரம்பப் பள்ளியில், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு போடுதல்; படிப்பதற்கு நிதி உதவி செய்தல் என்ற நடவடிக்கைகளைத் துவக்கி, ஆரம்பக் கல்வியிலிருந்தே, ஒடுக்கப்பட்ட மக்களை தயார் செய்ய வேண்டும் என்ற “அரிய” யோசனையைக் கூறியுள்ளார். (ஆகஸ்டு 4, ‘இந்து’ ஏடு) பிற்படுத்தப்பட்டோர் உயர்கல்விக்கு தகுதி பெற்றவர்களே இல்லை என்பதுதான் இவரின் வாதம். பச்சை பார்ப்பன இறுமாப்பின் வெளிப்பாடு இது!
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்திப் பார்த்தால் தானே தகுதியான மாணவர்கள் வருகிறார்களா இல்லையா என்பது தெரியும். தமிழ்நாட்டில் திறந்த போட்டியிலேயே ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் ‘தகுதி திறமை’ பேசும் கூட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதிக இடங்களைப் பிடித்து வருவது நாராயணமூர்த்திகளுக்குத் தெரியாதா? ஒரு நாடு ‘தகுதி’யான ‘ஜனநாயகத்தை’ - ‘திறமையான’ ஆட்சியை நடத்துகிறது என்றால், அந்நாட்டிலுள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும், கல்வியில், பதவியில், அதிகாரத்தில் பொருளாதாரத்தில் சமமான பங்கு இருக்க வேண்டும். நாடும், சமூகமும் எக்கேடும் கெட்டுப் போய் ‘தகுதி-திறமை’ இழந்து போகட்டும். பார்ப்பான் ஆதிக்கம் மட்டும் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதே - நாராயணமூர்த்திகள் முன் வைக்கும் ‘தகுதி-திறமை’.
‘நாராயண மூர்த்திகளுக்கு’ கூறிக் கொள்கிறோம், இனியும் உரிமைகள் தாமதப்படுத்தப்பட்டால், நாட்டில் மிகப் பெரும் புரட்சி வெடித்துக் கிளம்பும்; அதைத் தடுக்க முடியாது!