அய்யப்பன் விரதம் இருந்து சபரிமலைக்கு லட்சக் கணக்கில் குவிகிறார்கள் பக்தர்கள். பயணத்தின்போது சாலையில் வாகன விபத்துகளில் பலர் உயிரிழக்கிறார்கள். இப்போது வாகன விபத்துகளோடு மகர ஜோதியை தரிசிக்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தி வெளி வந்துள்ளது. உண்மையிலே இந்த பக்தர்களின் மரணத்துக்காக நாம் வேதனைப்படுகிறோம். அவர்களின் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த வேதனையையும், துயரங் களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அய்யப்பனுக்கோ, அல்லது அய்யப்பன் விரதத்துக்கோ, ஏதேனும் சக்தி இருந்திருந்தால், இப்படி மனித உயிர்கள் மடிவதை தடுத்திருக்க மாட்டானா, இவ்வளவுக்குப் பிறகும், அய்யப்பன் சக்தியை நம்பிக் கொண்டிருக்கலாமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். குடும்ப உறுப் பினர்கள் - குறிப்பாக பெண்கள், இத்தகைய ஆபத்துகளை விலைக்கு வாங்க வேண்டாம் என்று மாலை போடுகிற, குடும்ப ஆண்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

மிக மோசமான காட்டுப் பாதையில் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் புகார்கள் வருகின்றன. ஆண்டவன் காப்பாற்றுவான் என்று நம்புவதில் அர்த்தமில்லை என்பதைத் தெளிவாக புரிந்து கொண்ட ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசுதான் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலி யுறுத்தி வருகின்றன. இது பக்தி உணர்வைப் புண்படுத்தும் நடவடிக்கை என்று எவரும் புகார் கூற முடியாது.

“அய்யோ, அய்யப்பா உன்னை நம்பித்தானே கடும் விரதமிருந்து எங்கள் அண்ணனும், தம்பிகளும், கணவர்களும், குடும்பத்தினரும் வந்தார்கள்; இப்படிக் கைவிடலாமா?” என்று உறுப்பினர்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நிச்சயம் கதறியிருப்பார்கள்!

இந்த விபத்தால் பதறிப் போன கேரளாவின் உயர்நீதிமன்றமே தானாகவே முன் வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விபத்து பற்றி விளக்கமளிக்குமாறு கேரள காவல்துறை, வனத்துறை, கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம்போர்டு ஆகிய வற்றுக்கு தாக்கீது அனுப்பியது. காவல்துறை தலைமை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விளக்கு வசதி செய்யப்படவில்லை. கார், ஆட்டோ போன்ற வாகனங்களை நிறுத்துவதற்கு வனத்துறை, போதிய இடவசதி செய்து தரவில்லை என்று கூறிவிட்டார். கோயில் நிர்வாகக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், காவல் துறையையும், வனத்துறையையும் குற்றம் சாட்டியது. விபத்து நடந்த இடம், புலிகள் வாழும் பாதுகாப்புப் பகுதி என்பதால், தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், கோவிலுக்கு செல்லவும், திரும்பவும் உள்ள பாதை குறுகலானது என்பதால், வாகன நிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் சமாதானம் கூறியது.

இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த பகுதியில் ‘மகர ஜோதி’ என்ற ‘புனித நட்சத்திரம்’ அய்யப்பன் அருளால் தோன்று கிறது என்ற ஒரு நம்பிக்கையைப் பரப்பி, பக்தர்களை நம்ப வைத்து, பெரும் கூட்டத்தை திரட்டுகிறார்கள். இதற்கு கேரள அரசும், கோயில் நிர்வாகமும் உடந்தையாக உள்ளது. திட்டமிட்டு பரப்பப்படுகிற, மூடநம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்க வேண்டியது மனித நேயக் கடமை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரிடம் நேரடியாகவே ஒரு கேள்வியை கேட்டுள்ளனர்.

இந்த மகரஜோதி, உண்மையிலேயே தோன்றும் புனித நட்சத்திரமா? அல்லது மனிதர்களால் செயற்கையாக ஏற்றப்படும் ஒளியா என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத கோயில் நிர்வாகத்தின் வழக்கறிஞர், “தெய்வீக நட்சத்திரமாக பக்தர்கள் தான் நம்பு கிறார்கள். ஆனால் அதுபோல் கோயில் நிர்வாகம் விளம்பரம் செய்யவில்லை” என்று கூறி நழுவிக் கொண்டு விட் டார். ஆம், அது தெய்வீக நட்சத்திரம் என்று நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பொய் கூற முடியாது. ஆனால், உண்மை என்ன என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் கண்டிப்பாகக் கூறியுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அச்சுதானந்தன் முதல்வர்; அவரது தலைமையில் கேரள இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

நீதிமன்றமே, இப்படி நியாயமான அறிவார்ந்த கேள்விகளை கவலை யுடன் முன் வைக்கும் போது மார்க்சிஸ்ட் கட்சி முதல்வரோ, “மக்களின் நம்பிக்கையில் நாங்கள் தலையிட மாட்டோம்; மகரஜோதியின் உண்மையைக் கண்டறிய சோதிடர் களிடமோ அல்லது வானியல் துறை விஞ்ஞானிகளிடமோ விசாரணையும் நடத்த மாட்டோம்; பொன்னம்பலமேடு பகுதி முழுதும் வானில் தெரியும் ‘மகர ஜோதியை’ புனித நட்சத்திரம் என்றே பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே நாங்கள் தலையிட மாட்டோம்” என்று கூறிவிட்டார்.

இதேபோன்ற தீர்ப்பைத்தான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் நீதிபதிகளும், பாபர் மசூதி உள்ள இடம்தான் ராமன் பிறந்த இடம் என்று பக்தர்கள் நம்பு கிறார்கள் என்று கூறினர். அலகாபாத் தீர்ப்பை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சிதான், இப்போது அதே கருத்தை - மகரஜோதி மோசடியை மறைப்பதற்கும் முன் வைக்கிறது என்றால், இந்த அவலத்தை எங்கே போய் அழுது தொலைப்பது? குஜராத் மோடியின் குரலை கேரளாவில் அச்சுதானந்தன் அப்படியே எதிரொலிப்பது தான் மதச்சார்பின்மையா? வகுப்புவாத எதிர்ப்பா? என்று கேட்கிறோம்.

இந்த நிலையில், பார்ப்பன ஏடான ‘இந்து’ (ஜன.22) மகர ஜோதியின் தெய்வீக மோசடியை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியிருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் இராஜகோபால நாயர், மகர ஜோதி, மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதில் தேவஸ்வம் போர்டுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி விட்டார்.

“ஒரு காலத்தில் பொன்னம்பலமேடு பகுதியில் மலைகளில் வாழ்ந்த மலைவாசிகள் ஆண்டுதோறும் மகரவிளக்கு ஏற்றி, விழா நடத்துவார்கள். பிற்காலங்களில் அவர்கள் மலைப் பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

அய்யப்பன் கோயிலோடு பாரம்பர்யமாக நெருக்கமான உறவு கொண்டவர்கள், பாண்டலம் அரண்மனையும், அதில் வாழ்ந்த மன்னர்களின் வாரிசுகளும். அந்த அரண்மனை யின் நிர்வாகக் குழு தலைவரான பி. இராமவர்ம ராஜாவும், மூத்த அர்ச்சகரான (தாந்திரி) கண்டரேறு மகேசுவரரு என்பவரும் மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குதான் என்று ஒப்புக் கெண்டுள்ளனர். கடந்த காலங்களில் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடி மக்களின் ‘மகர விளக்கு’ விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியே இது என்பதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.

“மகர ஜோதி சம்பவத்தில் பாண்டலம் அரண்மனை வாரிசுகள் எப்போதுமே விலகியே நிற்கிறார்கள். மனிதர்களால் ஏற்றப்படும் இந்த ஒளி சில சுயநல சக்திகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். பாண்டலம் அரண்மனையிலிருந்து புனித நகைகளைக் கொண்டு வந்து, அய்யப்பனை அலங்கரித்து, “தீப ஆராதனை” நடப்பது வழக்கம். இந்த தீப ஆராதனையின் சிறப்பைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாண்டலம் அரண்மனை வாரிசுகளின் முக்கியத்துவத்தைக் குலைக்க, சில சுயநல சக்திகள் ‘மகர ஜோதி’யை உருவாக்கினார்கள்” என்று அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.

அய்யப்ப சேவா சங்க தேசிய துணைத் தலைவராக உள்ள டி. விஜயகுமார் என்பவரும், “இது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான். அதற்காக, மக்களின் நம்பிக்கையில் நீதிமன்றங்கள் குறுக்கீடுவதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.

நாயர் சேவைக் கழக செயலாளர் ஜி. சுகுமாறன் நாயர் கூறுகையில், “மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் நடத்திய விழாவின் தொடர்ச்சிதான் இது. அவர்கள் தான் விளக்கு ஏற்றி கொண்டாடி வந்தார்கள். பொன்னம்பலமேடு பகுதியில் தான் முதலில் ‘அய்யப்பன்’ கோயில் இருந்தது. பிறகு இடமாற்றம் செய்யப்பட்டது” என்று கூறினார்.

எஸ்.என்.டி.பி. என்ற நாராயண குரு நிறுவிய சிறீ நாராயணன் தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பின் செயலாளர் வெள்ளப் பள்ளி நடேசன், “ஜோதியை மனிதர்கள் ஏற்றுகிறார்களா அல்லது ஆன்மிக நட்சத்திரமா என்ற விவாதமே தேவையற்றது; அரசின் பாதுகாப்பு குறைபாடுகளை திசை திருப்பும் நடவடிக்கை” என்று கூறி நழுவி விட்டார்.

1990 ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் ‘மகரஜோதி’ ஏணியை உருவாக்க மலை உச்சியில் ரகசியமாக ‘சிமெண்ட் திண்ணை’ ஒன்றை கட்டியது. மலை உச்சியில் ஏறிப் போய் அதிகாரிகள் அனுமதி பெற்று, 2006 ஆம் ஆண்டு, இந்த ‘சிமெண்ட் திண்ணை’ படம் எடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் எவரும் அனுமதிக்கப்படுவது இல்லை. அந்த சிமெண்ட் திண்ணைப் படத்தையும், ‘இந்து’ நாளேடு வெளியிட்டுள்ளது.

Pin It