‘மனுதர்மம்’ இப்போது எங்கே இருக்கிறது? இப்படி ஒரு கேள்வி சிலரால் முன் வைக்கப்படுகிறது. அவர்கள் நாட்டின் நடப்புகளைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியை கேட்க மாட்டார்கள். ‘மனுதர்மம்’ புதிய பதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகைகள், அதன் உள்ளடக்கங் களைப் பாராட்டி, நூல் மதிப்புரைகள் எழுதி வருகின்றன.

இதோ கடந்த 13 ஆம் தேதி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளி வந்த ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுகிறோம். திருமணங் களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் மந்திரங்கள் பற்றி ‘மனுதர்மம்’ என்ன கூறுகிறது என்பதை விளக்கி சாது ஹரிதாசா என்ற வேதப் பார்ப்பனர் இந்தக் கட்டுரையை எழுதியிருக் கிறார். மனுதர்மத்தை முழுமையாக நியாயப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை.  ‘மனுதர்மம்’ குலத் துக்கு ஒரு திருமண முறையை முன் வைப்பது மிகவும் நியாயமானதுதான் என்றும், அதை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள் மோட்சம் போகலாம் என்றும் கூறுகிறது

அக்கட்டுரை.

வர்ணங்களைக் கடந்து சாதிகளைக் கடந்து நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைக்கு சமூக அங்கீகாரம் கிடைக்காது என்ற ‘நல்ல நோக்கத்தோடு’ தான் மனுதர்மம் குலங்களுக்கு இடையே கலப்பு ஏற்படக் கூடாது என்று கூறுகிறதாம். ஒவ்வொரு வர்ணத்துக்கும் (பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்கள்) -’மனுதர்மம்’ விதிக்கும் கடமைகள் அவர்களின் ‘குண’த்தை வெளிப்படுத்துவதாம். இப்படி மனுதர்மத்தை நியாயப்படுத்துகிறது அக்கட்டுரை.

மனுதர்மத்தை 2012-லும் நியாயப்படுத்தும் பார்ப்பனர்கள், பல உண்மைகளை மறைத்து விடுகிறார்கள். இது தொடர்பாக கடலாங்குடி நடேச சாஸ்திரிகள் தொகுத்த ‘மந்திரப்பிரச்சனம்’ என்ற நூலிலிருந்து சில உண்மைகளை சுட்டிக் காட்டுகிறோம்.

திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதும் மந்திரங்கள் ‘மனுதர்மம்’ அல்ல; ஆனால், எந்தெந்த ‘குலத்துக்கு’ எத்தகைய திருமண சடங்குகளை நடத்த வேண்டும் என்று ‘மனுதர்மம்’ தான் கூறுகிறது.மனுதர்மம் 8 வகையான திருமண முறைகளை ‘கட்டளையிட்டுள்ளது’ பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்யம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸசம், பைசாசம் - என்ற 8 வகை திருமண முறைகளில் ஒவ்வொரு குலத்துக்கும் பின்பற்ற வேண்டிய முறையை ‘மனுதர்மமே’ நிர்ணயிக்கிறது. இதன்படி -

தர்மத்தை விட்டு விலகாத உயர்வான திருமண முறைகளில் ஒன்று ‘பிராஜாபத்யம்’; இந்தத் திருமண முறை ‘பிராமணனுக்கு’ மட்டுமே உரியது; சத்திரியன், வைசியன், சூத்திரனுக்கு இந்த முறையைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது மனுதர்மம்.

சத்திரியர்களுக்கு காந்தர்வம், ராட்சம் என்ற திருமண முறை மட்டுமே உரியதாம். ஆணும் பெண்ணும் காதலிப்பதை மணமகன் தரப்பில் எதிர்த்தால், அவர்களை எதிர்த்து போரிட்டு வென்று பெண்ணை மண முடிப்பது ‘ராட்சசம்’ என்ற திருமண முறை.

‘பைசாசம்’, ‘ஆசூரம்’ என்ற இரண்டு திருமண முறைகளும் எக்காலத்திலும் செய்யக் கூடாதவை என்கிறது ‘மனுதர்மம்’. பெண்களை ஏமாற்றி உடலுறவு கொள்ள முயற்சிப்பதை ‘பைசாசம்’ என்கிறது மனுதர்மம். இத்திருமண முறைகளை  பார்ப்பன புரோகிதர்கள எவருக்குமே செய்யக் கூடாது என்று ‘மனுதர்மம்’ கூறுகிறது. ஆனால், மேற்குறிப்பிட்ட இரண்டு திருமண முறையும், வைசியர், சூத்திரர்களுக்கு மிகச் சிறந்தது என்று அதே மனுதர்மம் கூறுகிறது.

இப்போது புரோகிதப் பார்ப்பனர்கள் நடத்தும் திருமணங்களில் ஓதப்படுவது வேதங்கள்தான். ஆனால், எந்த சாதிக்கு எந்த வகையான திருமணம் என்று ‘மனுதர்மம்’ விதித்த கட்டளைப்படியே இன்றும் திருமண சடங்குகளை பார்ப்பன புரோகிதர்கள் நடத்தி வருகிறார்கள். ‘சூத்திரர்’ களுக்கு, பார்ப்பன புரோகிதர்கள் திருமணம் செய்து வைக்க ‘மனுதர்மம்’ தடை போட்டுள்ளதால், “சூத்திரர்”களை பூணூல் போட்டு, “இரு பிறப்பாளராக்கி” பார்ப்பன புரோகிதர்கள் சத்திரியர்களுக்கு உரிய திருமண சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.

ஆக, இப்போதும் ஒவ்வொரு புரோகிதப் பார்ப்பனர் நடத்தும் திருமண முறைகளை ‘மனு தர்மமே’ கட்டளையிட்டு வரு கிறது. ‘மனுதர்மம்’ சட்டப்படி தடை செய்யப்படாததால் தானே இந்த நிலை?

இப்படி குலத்துக்கு ஒரு திருமண முறையை பேசுவதே மனுதர்மம். அதிலும் “சூத்திரர்களை” திருமணத்துக்கு உரியவர்களாகவே அங்கீகரிக்காத ஒரு ‘இன ஒதுக்கலை’ வலியுறுத்துவது மனுதர்மம். இந்த மனுதர்மம் தடை செய்யப்பட வேண்டாமா?

அம்பேத்கரை அவமதித்து வெளியிட்ட கார்ட்டூனைத் தடை செய்யக் கோரும்போது அதைவிடக் கொடுமையான அம்பேத்கரால் தீயிடப்பட்ட ‘மனுதர்ம’த்தை தடை செய்யப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டாமா? - இரா

Pin It