ஜூலை 9 ஆம் தேதி தெற்கு சூடான் தனி நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. ‘சூடான் மக்கள் விடுதலை இயக்கம்’ என்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் படை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப் போரை நடத்தியது. இந்த விடுதலை இயக்கத்தை ஆணி வேராக இருந்து இயக்கிய அதன் தலைவர் டாக்டர் ஜான் கரங் - கடந்த 2005 ஜூலையில் விமானத்தில் பயணம் செய்தபோது சதித் திட்டத்தால் கொல்லப்பட்டார்.

ஆனாலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. தலைமறைவு போராளியாக காடுகளில் பதுங்கி போரிட்ட சல்வாகீர் தான் இப்போது தெற்கு சூடானின் அதிபர். எண்ணெய் வளமிக்க நாடு சூடான். மக்கள் மதத்தால் கிறிஸ்தவர்கள். 1989 இல் ராணுவப் புரட்சி மூலம் சூடானில் ஆட்சியைப் பிடித்த ஓமர் அல்பஷீர் நாடு முழுதும் இஸ்லாமிய சட்டத்தைத் திணித்தபோது தெற்கு சூடானில் வாழ்ந்த கிறிஸ்தவ பழங்குடி மக்கள் எதிர்த்து போராடினர்.

தெற்கு சூடானின் எண்ணெய் வளத்தையும் மக்களையும் சுரண்டிய வடக்கு சூடான் இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சூடான் அதிபர் உமர்பஷீர் இனப்படுகொலை செய்தார் என்பதை உறுதி செய்து அவரைக் கைது செய்ய ஆணையிட்டுள்ளது. ஆனால், அரேபிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் அவரை கைது செய்ய விரும்பவில்லை. பஷீர், இதற்குப் பிறகு சீனாவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தமது நாட்டின் எண்ணெய் வளத்துக்கான உரிமைகள் அனைத்தையும் சீனாவுக்கு தந்துவிட்டார் பஷீர். சீனா, சூடானில் விவசாயத் துறையிலும், மசகு, எண்ணெய் மற்றும் பதனிடும் நிலையங்களில் பெரும் முதலீடு செய்துள்ளது. எனவே இனப் படுகொலை செய்த ராஜபக்சேயை ஆதரிப்பது போலவே சூடான் அதிபரையும் சீனா ஆதரிக்கிறது.

2005 ஆம் ஆண்டில் அமெரிக்கா தலையீட்டினால் அமைதி உடன்பாடு ஏற்பட்டு, அதன்படி பிறகு 2011 ஜனவரி 15 இல் மக்களிடம் நேரடி வாக்கு எடுப்பு நடத்தப்பட்டது. 99 சதவீத மக்கள் தெற்கு சூடான் தனிநாடாக பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். தெற்கு சூடான் ஆப்பிரிக்காவின் 54வது நாடாகும். அய்.நா.வில் 193வது உறுப்பு நாடு. தெற்கு சூடான் விடுதலை இயக்கம் விடுத்த அழைப்பை ஏற்று, நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டு அமைச்சர்கள் தெற்கு சூடான் விடுதலை விழாவில் பங்கேற்றுள்ளனர். 2009 ஆம் ஆண்டு பில்டல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வில் தெற்கு சூடான் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி கலந்து கொண்டு தமிழீழ விடுதலை போராட்டத்துக்கும் தெற்கு சூடான் விடுதலை போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கிப் பேசியது குறிப்பிடத் தக்கது. தெற்கு சூடானின் கட்டுமானப் பணிகளில் தமிழீழப் பொறியாளர்களும் பங்கேற்று பணியாற்றி வருகிறார்கள்.

தெற்கு சூடானைத் தொடர்ந்து தமிழ் ஈழத்திலும் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை! அதற்கான இயக்கத்தை உலகு தழுவிய அளவில் முன்னெடுப்போம்!

உலகம் முழுதும் தேசிய இனங்களின் விடுதலைக் காகப் போராடும் மக்கள் சார்பில் சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான் நாட்டை நாமும் வாழ்த்துவோம்!

Pin It