2003 ஆம் ஆண்டு நடந்த உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்பதற்கு சோதி டத்தை முன் வைத்து கணிப்புகளை வெளியிட்டார்கள். சோதிடம் பொய்த்துப் போனது. மனித உரிமைப் போராளியும் எழுத்தாளருமான அ.ஸ்டீபன் எழுதிய இந்திய கிரிக்கெட் (ஓர் அகழ்வாராய்ச்சி) என்ற சிறு நூலை 2003 ஆம் ஆண்டு மதுரை அய்டியாசு மய்யம் வெளியிட் டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி.

இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வழக்கமாக தொடர்புச் சாதனங்களும் கிரிக்கெட் வல்லுநர் களும்தான் ஏற்படுத்துவார்கள். இம் முறை அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு முன்னணியில் நின்றது சோதிடக் கணிப்புகள். இவற்றில் சிலவற்றைக் காண்போம்.

20 ஆண்டு இடைவெளி வித்தி யாசம் என்பது இந்தியாவிற்கு ராசி யான எண். கபில்தேவ் தலைமை யிலான இந்திய அணி கடந்த 83 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இப் போது 2003 ஆம் ஆண்டு நடக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் உள்ள இடைவெளி வித்தியாசம் 20. எனவே, இந்தியா உலகக் கோப்பையை வெல் லும். (தினகரன், மதுரை 14.03.2003).

1983, 2003 என இரண்டு ஆண்டு களின் எண்களுமே 3 இல் முடிவது இந்தியாவின் இறுதி வெற்றியை உறுதி செய்கிறது.

1979 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவு அணியின் தலைவர் லாய்ட் இடது கை ஆட்டக்காரர். அதன்பின் 83 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைவர் கபில்தேவ் வலது கை ஆட்டக்காரர். இவ்வாறாக 79-லிருந்து இடது கை ஆட்டக்காரர், வலது கை ஆட்டக் காரர் என்று உலகக் கோப்பை மாறி மாறி வந்திருக்கிறது. கடந்த முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் வாக் வலது கை ஆட்டக்காரர். இப்போது இந்திய அணியின் தலைவர் கங்குலி இடது கை ஆட்டக் காரர். எனவே, இந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவுக்குத் தான்.

ஆந்திராவில் குண்டூரில் உள்ள சோதிட ஆய்வு மையமும் தனது கணிப்பைச் சொல்லியுள்ளது. காலக் கிரக நிலைகளின் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கடக ராசியில் குரு பகவான் உச்சத்தில் இருக்கிறார். இது மேற்கு இந்தியத் தீவு அணிக்கு உதவியாக இருப்பதால், இதுவே கோப்பையை வெல்லும். மேலும், மார்ச் 23 ஆம் தேதி இந்தியாவும் மேற்கு இந்திய தீவும் நேருக்கு நேர் நிற்கும். எண் சோதிடப்படி, மேற்கு இந்திய தீவு நாட்டின் எண்ணும் இறுதிப் போட்டி நடக்கும் தேதியும் சாதகமாக இருக்கும்.

ஆஸ்திரேலியா அணித் தலைவர் ரிக்கி பான்டிங்க்கு பிப்ரவரி மாதம் முழுவதும் ராசி நன்றாக இருக்கும். மார்ச் மாதத்தில் அவரது ராசி அவ்வளவு நன்றாக இருக்காது. 

ஆனால், நடந்ததெல்லாம் இந்தக் கணிப்புக்கு முரணானவையே. சோதிடம் பரிதாபமாக மண்ணைக் கவ்வியது. பா.ஜ.க. அரசு பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்திய சோதிடக் கல்விக்கான பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் முன்கூட்டியே ஏதாவது செய்து, சோதிடத்திற்கு ஏற்பட்ட இந்தப் பரிதாப முடிவைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். 

ஏனென்றால், இந்திய அணியின் தோல்வியைவிட, சோதிடத்தின் தோல்வி மிகப் பரிதாபமானது. எதற்கும், இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்திக்கும் படி பாகிஸ்தானியர்கள் பில்லி, சூன்யம் வைத்து விட்டார்களா என்று கண்டுபிடிப்பது நல்லது.

Pin It