தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 213 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், 104 கிராமங்களில் இன்னும் இரட்டைக்  குவளை முறை இருப்பது மதுரை ‘எவிடன்ஸ்’ அமைப்பு மூலம் தெரிய வந்துள்ளது. 

மதுரையில் 13 கிராமங்கள், திண்டுக்கல்லில் 24 கிராமங்கள், சிவகங்கையில் 15 கிராமங்கள் என,  213 கிராமங்களில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை, இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், 104 கிராமங்களில் டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இன்னும் இருப்பது கண்டறியப்பட்டது. சில கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத் தினருக்கு கண்ணாடி குவளையும், ஆதி திராவிடர் களுக்கு சில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கப் படுகிறது. தமிழகத்தில் 208 கிராமங்களில், சாதி ரீதியாக சுடுகாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 97 கிராமங்களில் ஆதி திராவிடர் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்து செல்ல முடியாது. 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாது. ஆதி திராவிடர் சுடுகாடுகளில் தண்ணீர், மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் இல்லை.  

சலூன் கடைகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுகிறது. 142 கிராமங்களில் ஆதி திராவிடர்களுக்கு முடிவெட்டக் கூடாது என தடையுள்ளது. சில கிராமங்களில் முடிவெட்டும் கருவிகள் இரண்டு ‘செட்’ வைத்துக் கொண்டு, அதில் ஒன்றை ஆதி திராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதேபோல், ரேஷன் கடைகள், மருத்துவமனைகள், சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது. 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகியுள்ளனர். 

Pin It