ஜனவரி 21, நாளிட்ட ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில், அதன் செய்தியாளர் கே. கார்த்திகேயன் எழுதியுள்ள செய்தி கட்டுரை:

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது திராவிடர் கழகத்துக்கு கிடைத்த பலத்த அடி. பெரியார் கொள்கையை உண்மையாகப் பின்பற்றுவோரால், திராவிடர் கழகமும், பெரியார் பெயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 1965 ஆம் ஆண்டிலேயே பெரியார், தமது சொந்த நிலத்தையும், ரூ.5 லட்சம் பணத்தையும், தமிழக அரசிடம் தந்து, அரசே கல்லூரியை உருவாக்கி, இலவசக் கல்வி வழங்குமாறு கேட்டுக் கொண்டதை, அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனமும் ஒன்று. கல்லூரி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக, மத்திய மனித வளத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் கல்வியாளர்களுக்கு பதிலாக, குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகிகளாக செயல்படுவதை, அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. தி.க. தலைவர், பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும், அவரது மகன் அன்பு ராஜு, நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெயர் கூறவிரும்பாத தி.க. தொண்டர்கள் எவ்வளவோ திறமையான பேராசிரியர்கள் இருக்கும்போது, வீரமணியும், அன்பு ராஜும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்” என்று கூறுகிறார்கள்.

“பெரியார் கொள்கைப் பாதையிலிருந்து இன்றைய திராவிடர் கழகம் விலகிப் போய்விட்டது என்பதற்கு இந்த அங்கீகார ரத்து சரியான சான்று” என்று, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவது அரசுக்குரிய கடமை என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர் பெரியார். அதனால் தான் அரசுக்கு கல்லூரிக் கட்டுவதற்கான நிலத்தையும், பணத்தையும் அன்பளிப்பாக வழங்கினார். வீரமணி பெரியாரின் உயரிய கொள்கையிலிருந்து விலகி விட்டார் என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் கூறுகையில், “பெரியார் பெயரிலுள்ள கல்வி நிறுவனமும், இந்த பட்டியலில் இடம் பிடித்து விட்டது வேதனையைத் தருகிறது” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “நிகர்நிலை பல்கலைக்கழகங்களே கூடாது” என்றார். இது குறித்து கருத்து கேட்பதற்கு கி. வீரமணியை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டும் முடியவில்லை.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (ஜன. 2) வெளி வந்த கட்டுரையின் ஒரு பகுதி.

திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ. ராமசாமி, அவரது துணைவியார் மணியம்மை பெயரில் உள்ள கல்லூரி நிறுவனமும், நிகர்நிலை அங்கீகாரம் ரத்தான நிறுவனங்களின் பட்டியலில் மாணவர்களை சுரண்டும் நிறுவனமாக இடம் பெற்றுள்ளது. அந்தத் தலைவர்கள் - கொள்கைகளையே இது அவமதிப்பாகும். பெரியார் எப்போதுமே கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் அரசே உயர் கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரியார் பாரம்பர்யத்தில் வந்த கி. வீரமணி, தொடங்கிய கல்லூரி குடும்ப நிறுவனமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கிறது. அண்மையில் வீரமணியின் மகன், திராவிடர் கழகத்துக்குள் (தலைமைப் பொறுப்பில்) கொண்டு வரப்பட்டுள்ளார். கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திலும், அவர் இடம் பெற்றுவிட்டார். கல்வியை வர்த்தகமாக்கி விட்டார்கள். இப்படி கருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் (பெயரில் நிகர்நிலை என்ற பெயரை ஒட்ட வைத்துக் கொள்ளக் கூடாது என்று பிறகு அறிவிக்கப்பட்டது) தங்களுக்கு, அத்தகைய அந்தஸ்து கோரியதற்கான காரணம், தரமான கல்வியைத் தருவதற்காக அல்ல; மாணவர் சேர்க்கைக்கான எல்லா இடங்களையும் விற்பனை செய்யலாம் என்பதே காரணம். இந்த நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்குமானால், ‘நேர்முக பேட்டி’ (கவுன்சிலிங்) வழியாக தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கணிசமாக இடங்களை ஒதுக்க வேண்டியிருந்திருக்கும். இதற்கு மாறாக, நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற அங்கீகாரத்தைப் பெற்று விட்டால், எல்லா இடங்களையும் அவர்களே நிரப்பிக் கொள்ளலாம்.

உண்மையில், இப்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள கல்வி நிறுவனங்கள், போட்டி அதிகமாக உள்ள பாடப் பிரிவுகளில் எவ்வளவு மாணவர்களை அதிகமாக சேர்க்க முடியுமோ, அவ்வளவு சேர்த்துள்ளனர். கல்விக் கட்டணத்தைக்கூட, இந்த நிறுவனங்களே தங்கள் விருப்பத்துக்கேற்ப நிர்ணயித்துக் கொள்கின்றன. கிராமங்களிலிருந்து வரும் பல பெற்றோர்கள் இந்த நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதைக்கூட தெரியாதவர்களாக, தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.

- ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில், ‘பட்டங்களை விற்கும் கடைகளை நடத்துவதில் தமிழ்நாடு - முன்னணி’ என்ற தலைப்பில் ஜி.பாபு ஜெயகுமார் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி. 

Pin It