‘தேசியம்’ என்றால், அது அனைத்துப் பிரிவினரும் உரிமை வழங்கக்கூடிய கொள்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று சமூக ஆய்வாளர் கே.என். பணிக்கர், இப்போது எழுதியிருக்கும் கருத்தை, பெரியார், 1931 ஆம் ஆண்டிலேயே முன் மொழிந்து எழுதிய கட்டுரை.
இந்தியர்களின் அடிமைத்தன்மைக்கும், இழி நிலைக்கும், மதமும், சாதியும், வகுப்பும் அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும் இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும். இதன் காரணமாய் மக்கள் வலுவிழந்து, சுய மரியாதையிழந்து, சுதந்திரமற்று, நடைப் பிணங்களாகவும் பகுத்தறிவற்ற மிருகத் தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு உதாரணமாக சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால் சுமார் மூன்றே முக்கால் கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் 385 சாதிகளாகவும் மற்றும் பல உள்பிரிவு சாதி களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள். நாளேற நாளேற நாகரிகத்தின் காரணமாகவும், செல்வநிலையின் காரணமாகவும் இன்னும் அதிகமான சாதிப் பிரிவுகளும் ஏற்படும் நிலையிலேயே தேசம் போய்க் கொண்டிருக்கின்றதே தவிர, ஒன்றுபடத் தக்க முயற்சியோ அறிகுறியோ இல்லை.
இந்தியாவில் 8 இல் ஒரு பாகம் கொண்ட சென்னை மாகாணத்திலேயே 385 சாதிகள் என்றால், மீதி 7 பாக மக்கட் தொகையில் எத்தனை சாதிப் பிரிவுகள் இருக்கக் கூடும்? இந்த சாதிப் பிரிவுகள் மாத்திரமல்லாமல் உயிரினும் தேசத்தினும், முக்கியமாய்க் கருத வேண்டியதான ‘தாய் பாஷை’ப் பிரிவுகள் எவ்வளவு?
இவ்வளவு சாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல், தங்களுக்குள் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ணமும், வெளி நடவடிக்கைகளும், வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?
இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக்காமலும் யாரோ சில சோம்பேறிகளும், சுயநலக்காரரும் தேசியம் என்று சொல்லி, மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத்தால், நாடு எப்படி nக்ஷமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம்தான் இந்தத் தேசிய வயிற்றுப் பிழைப்பு, வியாபாரம், நடத்த முடியுமேயொழிய இது என்றும் நிலைத்திருக்க முடியாது.
வகுப்புவாதம் சொல்லக் கூடாது என்பதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வழியற்ற தேசியவாதிகளையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்ட லாமேயொழிய, வகுப்புப் பிரிவுகளாலும் உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா? வகுப்புவாதம், மதவாதம், சாதிவாதம் பேசி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப் போகின்றது என்று ‘திப்பிலி, தேசாரம், சதகுப்பை’ இவைகளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கிவிட்டதைக் கண்டு நாம் சிறிதும் இலட்சியம் செய்யவில்லை.
அந்தப்படி பேசும், எழுதும் யோக்கியர்களில் 100க்கு அரைப் பேராவது தங்கள் மதத்தையும், உள் மதத்தையும், சாதியையும், வகுப்பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம். ஆகவே தேசியம் என்பதும், தேசியப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் செய்து விடுகிறது? எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்டதில் என்ன தப்பிதமோ, அயோக்கியதனமோ இருக்க முடியும்? வகுப்புவாதம், மதவாதம், சாதிவாதம் கூடாது என்கின்ற யோக்கியர்கள் ஒருவராவது மதத்தையும், சாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கிறார்களா? அது மாத்திரமல்லாமல், பார்ப்பனர் முதல் பறையர் வரை அவரவர் வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கிறார்களே ஒழிய, ஒருவராவது சாதிமத வகுப்புகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா?
வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ் மக்கள் தன்மையல்லவா அது?
தேசம், உயிரினங்களுக்குப் பொதுவானதாகும்; தேச ஆட்சியும் மக்களுக்குப் பொதுவானதாகும், எந்த மனிதனுக்கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தைத் தெரிவிக்கவும், ஆட்சியில் பங்கு பெறவும் உரிமை உண்டு என்பதை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில வஞ்சகக்காரர்களது செல்வாக்குக் காலத்தில் அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈனமுள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும், கொடுங்கோன்மைகளாலும் சாதிமத வகுப்பு ஆணவங்கள் ஏற்பட்டு, ஒரு சாதி மத வகுப்பை, மற்றொரு சாதிமத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு சாதி மத உழைப்பில் மற்றொரு சாதிமத வகுப்பு சோம்பேறியாய் இருந்துகொண்டு உண்டு வாழும்படியாயும் செய்யப்பட்டு விட்டதனாலேயே, எல்லாக் காலங்களிலும் எல்லா அரசாட்சிகளும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கு உதவியாகவே இருக்க வேண்டுமா என்றும், யாரோ சிலருக்குப் பிழைப்பதற்கு வேறு வழியில்லாததனாலேயே அந்த ஈனர்களுக்குக் கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடைய வேண்டுமா?
ஏதாவது ஒரு மனிதன், தன்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், தன்னுடைய சாதி வலுவிழந்த சாதி என்றும், தன்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டதென்றும் சொல்லி அதன் காரணமாக ஆட்சியில் தனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, ‘என்னை நீ அடக்கியாள முடியாதபடி செய்து விடு’ என்று சொல்வதில் என்ன தப்பு? இதற்குப் பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது, ‘குலாம் தன்மை’ என்றும், தேசத் துரோகத்தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை எப்படிச் சொல்லுவது? ‘வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை’ என்று ஏன் சொல்லக் கூடாது? தன் பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுருவது திண்ணம்.
(பெரியார், ‘குடிஅரசு’ 8.11.1931)