உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை; இயற்பியலில் அது தானாகவே உருவானது என்று உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்மையில் புதிதாக வெளியிட்டுள்ள ‘தி கிராண்ட் டிசைன்’ எனும் நூலில் எழுதியுள்ளார். அமெரிக்காவைச் சார்ந்த மற்றொரு இயற்பியல் விஞ்ஞானி லியோனார்டு லோடினோவ் என்பவருடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார். இந்த உலகம் (பிரபஞ்சம்) உருவாவதற்கு முன்பு மிகப் பெரும் வெற்றிடம் இருந்தது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை; கடவுள் உருவாக்கவும் இல்லை. தத்துவவாதிகள் (மதவாதிகள்) கூறுவது போல், உலகத்துக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. “கடவுள் வந்து, தடவிப் பார்த்து, உலகமே நீ உருவாகு’ என்று கூறுவது அபத்தமானது என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார்.

விண்வெளி ஆய்வுக்கு தனது ஆராய்ச்சிகள் வழியாக பெரும் பங்காற்றியவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். பூமியை உருவாக்குவதில் ‘கடவுளுக்கும்’ பங்கு இருக்கலாம் என்ற கருத்தையே ஏற்கனவே முன் வைத்தார். அந்தக் கருத்தை, இப்போது தாம் மாற்றிக் கொண்டு விட்டதாக புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய நூல் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போது வெளியிட்ட ஆய்வு நூலில், கடவுளுக்கும் பிரபஞ்சம் உருவானதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். புதிய நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“எனக்கு நானே இரண்டு கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறேன். முதல் கேள்வி, இந்த பிரபஞ்சம் உருவானதற்கான காரணம், நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காகவே கடவுள், இந்த உலகை உருவாக்கினாரா? இது முதல் கேள்வி. அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில், உலகம் (பிரபஞ்சம்) உருவானதா என்பது இரண்டாவது கேள்வி.

இதில் இரண்டாவது கேள்வியையே நான் ஆதரிக்கிறேன். இயற்பியல் கோட்பாடுகள்தான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று நான் கூறுவதை, நீங்கள் ஏற்கத் தயங்கினால், அந்த அறிவியலுக்கு, கடவுள் என்று நீங்களே பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதில், எந்தக் கடவுளும் உரிமை கோர முடியாது என்பதே எனது உறுதியான கருத்து” - என்று தனது நூலில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மதவாதிகளுக்கு, சரியான சம்மட்டி அடியை ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வு தந்துள்ளது. பிரபஞ்சம் உருவானதற்கான காரணம், பெருவெடிப்பு கொள்கைதான் என்பதும், அது குறித்து, விரிவான ஆய்வு நூல்களையும் ஏற்கனவே ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ளார். இது குறித்து 1998 இல் அவர் எழுதிய “தி பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்” என்ற நூல், உலகப் புகழ் வாய்ந்ததாகும். (இதன் தமிழ்மொழி பெயர்ப்பு ‘காலம்’ என்ற பெயரில் வெளி வந்துள்ளது. தோழர் நலங்கிள்ளி தமிழாக்கம் செய்துள்ளார்.) இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பிரபல ‘சண்டே டைம்ஸ்’ ஏடு, வெளியிட்ட சிறந்த புத்தக வரிசையில், தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தது இந்த நூல்.

கடவுள் மறுப்பாளரிடம் ஆசிபெற்ற போப்

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வருபவர் ஸ்டீபன் ஹாக்கிங். குழந்தைப் பருவத்திலேயே அவரது உடலில், உயிர் காக்கும் அணுக்கள் சாகத் தொடங்கிய நிலையில், இதைத் தடுக்கும் மருத்துவம் உலகில் கண்டு பிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கை விட்டனர். உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் சோதித்து, அவர் உயிரோடு வாழும் காலம் மிகக் குறுகியது என்பதால், வீட்டில் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்று கூறி விட்டனர். கை கால்கள் செயலிழந்தன; வாய்ப் பேச்சும் இல்லை; மனம் தளராத ஸ்டீபன் ஹாக்கிங், பெற்றோர்களைத் தேற்றி, தனக்கு ஆய்வு நடத்த தனி அறையையும், நூல்களையும் கேட்டு வாங்கிக் கொண்டார். அவர் சொல்ல விரும்பும் கருத்தை, எழுதிக் காட்டவும் முடியாத நிலையில், வாயிலிருந்து வரும் குரலைக் கொண்டு எழுதும் ஒரு கருவியை அவரே தயாரித்தார். அதைக் கண்டு விஞ்ஞானிகளும், பெற்றோரும் வியப்பில் மூழ்கினர்.

அதே கருவியைக் கொண்டு தான் இப்போதும் பேசி வருகிறார். உடல் உறுப்புகள் செயலிழந்து சக்கர நாற்காலியில் வலம் வருகிறார். அவரது மூளை மட்டும் அசாத்தியமாக இயங்குகிறது. பெற்றோர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள். ஆனால் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ள இவரோ உள்ளம் தளராத அழுத்தமான கடவுள் மறுப்பாளர். உடலின் ஊனம் அவரை கடவுள் நம்பிக்கைக்கு இழுத்துப் போகவில்லை. “பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காக அந்த பொய்யை, புத்தியுள்ள மனிதன் ஏற்கத் தேவை இல்லை” என்கிறார். விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒவ்வொரு புதுமையான கருத்துகளையும், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமைப்படுத்த வேண்டும். அதுவே இன்றைய அறிவாளிகளின் முக்கிய கடமை என்று வலியுறுத்தி வருகிறார்.

2009 ஆம் ஆண்டு உலக கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப், ரோம் நாட்டில், ‘கடவுளும், பிரபஞ்சமும்’ என்ற தலைப்பில் கிறிஸ்தவ தலைமைச் சபையில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அம் மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் ஹாக்கிங்கை, போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாது, ஹாக்கிங், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மாநாட்டுக்குச் சென்றார். உலகம் முழுதுமிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள், மதத் தலைவர்கள் போப்பிடம், தலை தாழ்த்தி ஆசி பெற்றனர். ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் சக்கர நாற்காலியில் அசைவற்று உட்கார்ந்து இருந்த நிலையில், போப் இறங்கி வந்து ஹாக்கிங் முன், முழங்காலிட்டு தலைகுனிந்து, தன்னை வாழ்த்தும்படி கேட்டார். போப் மண்டியிட்டு, ஆசி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. அதுவும் கடவுளை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்!

ஹாக்கிங் - மாநாட்டில், தான் கண்டுபிடித்த கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை. மதத் தலைவர்களாகிய நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது பொய் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என்று ஆணித்தரமாக, தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

இறுதியாகப் பேசிய போப்,“விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மறுத்து, அவர்களை மதம் தண்டித்து தவறு; அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்”என்றார். (பூமி தட்டை அல்ல; உருண்டை தான் என்று கலிலியோ கூறியதற்காக, அவரை கிறிஸ்துவ மதம் தண்டித்ததற்கு, போப் மன்னிப்புக் கேட்டது இந்தச் சூழ்நிலையில் தான்) ஆனாலும் விஞ்ஞானத்துக்கு அப்பால், அதிசயப் படைப்புகளைக் கொண்ட ஒரு சக்தி இருக்கிறது என்றும், அதிசயமாக உயிர் வாழும் ஹாக்கிங்கையும், அத்தகைய தெய்வம்தான் படைத்திருக்க முடியும் என்றும் மதவாதிகளுக்கே உரிய வலிமையற்ற வாதத்தையே போப் அப்போது முன் வைத்தார்.

போக் சந்திப்பைத் தொடர்ந்து, ஸ்டீபன் ஹாக்கிங் மற்றொரு கருத்தையும் முன் வைத்தார். “பூமிப் பந்தில் மட்டுமல்லாது, வேறு ஒரு கோளத்திலும், மனிதர்களைவிட சிறந்த அறிவுள்ள உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் நமது பூமியைக் கண்டறிவதற்கு முயற்சித்து வரலாம் என்று கருதுகிறேன். நம்மிலும் அறிவில் சிறந்த அந்த உயிரினம் இங்கே எப்போதாவது வரக்கூடும். அது பற்றி ஆராய்ந்து வருகிறேன். இது எனது கற்பனையல்ல; விஞ்ஞான கண்டுபிடிப்பு” என்று கூறியுள்ளார். வேறு சில விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுள்ளனர்.

நியுயார்க் நகரில் ஸ்டீபன் ஹாக்கிங்கைப் பாராட்டி, கடந்த ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் பாராட்டு விழாக்கள் நடந்தன. பல்துறை கலைஞர்களும், விஞ்ஞானிகளும் இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளின் வழியாக, பாராட்டி மகிழ்ந்து அந்த விஞ்ஞானியை கொண்டாடினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங், “கோளங்களில் இருண்ட குகைகள் இருக்கின்றன. அந்த இருட்டைவிட, விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் மிகவும் ஆபத்தானது” – என்று பேசினார். அறியாமை இருட்டைக் கிழித்து, அறிவு வெளிச்சம் பரப்பும் ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியல் பார்வையில் முன் வைக்கும் கருத்துகள், தமிழ்நாட்டில், கடவுள் மறுப்பை மக்கள் இயக்கமாக்கிய பெரியாரியலுக்கு மேலும் வலிமை சேர்க்கிறது!

Pin It