தலித் இலக்கியம் படைப்பவர்கள் தலித்தாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்கள் உணர்வுகளை உயிரோட்டமாய் வெளிப்படுத்த முடியும். அது போலவே பெண்ணியம் பேசும் எழுத்தாளர்கள் ஒரு பெண்ணாய் இருந்தால் மட்டுமே, அவர்களின் மன உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியும். இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதா அல்லது மறுப்பதா என்று அகிலனுக்குப் புரியவில்லை. என்றாலும் இது சரியாய் இருப்பதற்கும், தவறாக இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. அகிலன் ஒரு பெண்ணியவாதிதான். அவனுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது கூட அவன் ஒரு பாலியல் தொழிலாளியை சந்தித்து அவரின் நசுக்கப்பட்ட உணர்வுகளை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நகரத்திற்கு வந்திருந்தான்.அந்த நகரம் பற்றி அகிலன் நிறைய கேள்விப்பட்டிருந்தான்.
காவல் துறையின் கெடுபிடிகள் அங்கே அதிகம் இல்லை. போலீஸ் கமிஷ்னர் கூட விபச்சாரத்தை சட்டப்படி அனுமதித்து விட்டால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். பல உளவியல் நிபுணர்களும் அவர் சொல்வதை வரவேற்றார்கள். அதற்கு அவர் மும்பையின் Grand Road ஐ உதாரணம் காட்டினார். மும்பையின் floating poppulation க்கு Grand Road ஒரு வடிகாலாக அமைந்திராவிட்டால், அங்கே கற்பழிப்புக்கள், கொலைகள், யாவும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போயிருக்கும் என்றார். அது நிதர்சனமான உண்மைதான் என்று அகிலனுக்கும் தோன்றியது.
ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் ஆட்டோவில் ஏறிக் கொண்ட அகிலன் அந்தக் குறிப்பிட்ட லாட்ஜின் பெயரைக் கூறி அங்கே போகும்படிச் சொன்னான். ஆட்டோ டிரைவர், டிப் டாப்பாக இருந்த அகிலனை உச்சி முதல் பாதம் வரை அலட்சியமாக நோக்கினான். பின்..." டூ ஹன்ட்ரட் ஆகும் ஸார்" என்றான்.
லாட்ஜ் பேரைக் கேட்டதும், அவன் வேண்டுமென்றே ரேட்டை உயர்த்துகிறான் என்பதையறிந்த அகிலன் "சரி நீ நேரா கமிஷ்னர் ஆஃபீஸ் போ" என்றான். ஆட்டோ டிரைவர் ஒரு கணம் ஆடிப் போய் விட்டான். "ஸார்.. நீங்களா எவ்வளவு குடுத்தாலும் ஒகே ஸார்." என்றான் அசடு வழிய.
"சரியான ரேட் என்ன?"
"எயிட்டி ருப்பீஸ் ஸார்."
"சரி போ"
அகிலன் தன் மொபைலில் ஏதோ பார்த்தபடி வருவதை அடிக்கடி ரிவர்வியூ மிரரில் பார்த்துக் கொண்டான். அந்த லாட்ஜ் மரங்கள் அடர்ந்த ஒரு மறைவான பகுதியில் உள்ளடக்கமாக இருந்தது. வெளியே சாலையில் இருந்து பார்த்தால் அப்படியொரு லாட்ஜ் அங்கே இருப்பதே வாடிக்கையாளர் களைத் தவிர புதிதாக வரும் யாருக்கும் தெரியாது. ஆட்டோ லாட்ஜின் உள்ளே வந்து போர்ட்டி கோவில் நின்றது. அகிலன் நூறு ரூபாய் கொடுத்ததும் அவன் பாக்கி இருபது ரூபாய் தர சில்லரையைத் தேடினான். "பரவாயில்ல. வச்சுக்கோ!" என்று அகிலன் சொன்னதும் மகிழ்ச்சியோடு,"எஞ்சாய் ஸார்" என்றபடி ஆட்டோவைத் திருப்பி ரிவர்வியூ மிரரில் பார்த்தபடியே சென்றான்.
முதல் மாடியில் ஒரு AC டபுள் பெட்ரும் அறையை எடுத்துக் கொண்டான் அகிலன். கையில் சிறிய ப்ரீஃப் கேஸ் தவிர பெரிய லக்கேஜ் எதுவும் இல்லாததால் ஹோட்டல் பணியாளரைத் தவிர்த்து விட்டுத் தானே 104 ஆம் நம்பர் அறையின் Key ஐ வாங்கிக் கொண்டு லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல், படிக்கட்டில் ஏறி முதல் மாடிக்கு வந்தான். காரிடரில் நடந்தபடியே அறையைக் கண்டுபிடித்து, விசிட்டிங் கார்ட் போன்ற அறை சாவியை சென்ஸார் லாக்கில் காட்டிக் கதவைத் திறந்தான். key ஐ அதன் இடத்தில் பொருத்தியதும், விளக்குகள் எரிந்தன.அந்த அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. தலையணை மற்றும் படுக்கை விரிப்புக்கள் புதிதாக இருந்தன. உள்ளே நுழைந்ததுமே அடிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ரூம் ஸ்ப்ரே ரம்மியமாய் மனதைக் கவர்ந்தது.
ரூம் வாடகை கூட பெரிய அளவில் இல்லை. வேறு எதிலோ சரிக் கட்டிக் கொள்கிறார்கள் போல.மதியம் ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிட்டு விட்டு வந்து, நன்றாக உறங்கி எழுந்த அகிலன் குளித்து ஃப்ரஷ் ஆனான்.வந்த வேலையைப் பற்றி நினைக்கும் பொழுது, அதற்காக யாரை எப்படி அணுகுவது என்று குழப்பமடைந்தான். அப்போது, அறையின் அழைப்பு மணி ஒலித்தது.
"Yes Come in " என்றான் அகிலன். அவர்களாகவே அப்ரோச் செய்வார்கள் என்று தனக்கு சொல்லப்பட்டது வொர்க் அவுட் ஆகிறது என எதிர்பார்த்திருக்க, ஒரு பத்து வயது சிறுவன் உள்ளே வந்தான். தயக்கம் ஏதுமின்றி "ஸார் டிரிங்ஸ் ஏதாவது?" என்றான். பார்ப்பதற்கு ரொம்பவும் ஸ்மார்ட் ஆகவும் இருந்தான்.
"No thanks."
"ok sir." என்றவன் கதவைத் திறந்து வெளியே போனான். அவனிடம் "அது" பற்றிக் கேட்க மனசு வரவில்லை. அடுத்த நிமிடம் கதவைத் தட்டிவிட்டு உள்ளே எட்டிப் பார்த்து, "ஸார் வேற ஏதாவது? "அவன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்ற போதும், அவனிடம் சொல்ல தயக்கமாக இருந்தது.
"பயப்படாதீங்க ஸார். பாதுகாப்பு ஏற்பாடு கூட கிடைக்கும். வர்ரவங்க கைல மெடிக்கல் செக்கப் சர்ட்டிஃபிக்கெட் கூட இருக்கும்." அவன் பேசவில்லை. அனுபவம் பேசியது. என்றாலும் காலத்தின் கொடுமை படிக்க வேண்டிய வயசில் ஒரு சிறுவனை என்னவாய் ஆக்கிவிட்டிருக்கிறது.
"ம் அனுப்பு." என்றதும், மகிழ்ச்சியோடு "தேங்ஸ் ஸார்" என்றபடி கதவை அடைத்து விட்டுச் சென்றான். அகிலன் பேச்சிலர் தான். இது மாதிரி இடத்துக்கு வருவது கூட அவனுக்கு முதல் அனுபவம் தான். மைக், ரெக்கார்டர், வீடியோ, என்றெல்லாம் போனால் அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அவலமான காரியம் செய்து பிழைக்க நிர்பந்திக்கப்பட்டவர்கள், அந்த அவலத்தையே விற்க ஒருபோதும் துணிய மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் அவர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்டு பதில்களை செல்ஃபோனிலேயே ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். என்றாலும் அப்படி அவர்களை ஏமாற்ற அகிலனின் விரும்பவில்லை.
வரப் போவது யார்? வரப்போகிற பெண் எப்படி நடந்து கொள்ளப் போகிறாள் என்பதெல்லாம் அவன் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. ப்ரீஃப் கேசைத் திறந்து பெளலோ கொய்லோ-வின் "பதினொரு நிமிடங்கள்" என்கிற புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். படிக்க ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அநேகமாய் ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அழைப்புமணி ஒலித்தது. கதவை லாக் செய்யவில்லை.
"எஸ்.. கம் இன் ப்ளீஸ்." என்றான்.
கதவைத் திறந்து உள்ளே வந்தவள் மிகவும் பரபரப்போடு காணப்பட்டாள்.
"ஸார், If you don't mind எனக்காக ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமா? நான் கொஞ்சம் ரீ ஃப்ரஷ் பண்ணிக்கறேன்."
"ok" என்று சொல்லி விட்டு கையில் இருந்த புத்தகத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்தான் அகிலன். மனசு புத்தகத்தில் ஒன்றவில்லை. வந்திருந்த பெண்மணிக்கு 30 வயது இருக்கும் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். புடவை கட்டி ஒரு நல்ல குடும்பப் பெண் போல இருந்தாள். முகம் நயன்தாராவின் சாயலில் இருந்தது. கொஞ்சம் கூட மேக்கப் போட்டுக் கொள்ளவில்லை. அவள் தன் கையில் கொண்டு வந்த ஹேண்ட் பேகிலிருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு சொந்த வீடு போல Rest roomக்குப் போனாள். பத்து நிமிடத்தில் குளித்து மேக்ஸி போட்டுக் கொண்டு, லாட்ஜின் டவலால் தலை துவட்டியபடி எதிரில் உள்ள குஷின் சேரில் அமர்ந்தாள்.
"ஸார், First Show film போயிட்டேன். Phone வந்தப்ப நான் தியேட்டர்ல இருந்தேன். படம் பாக்கிறது எனக்கு ரொம்பப் புடிக்கும். எனக்குப் பிடிக்கிற எதையும் நான் பாதியில விட்டுட்டு வர மாட்டேன். அதான் லேட்! Sorry ஸார்."
ரொம்பவும் எதார்த்தமாகப் பேசினாள். அவள் பேச்சில் கொஞ்சம் கூடப் பகட்டோ போலித்தனமோ தெரியவில்லை. மறுபடியும் அகிலனைப் பார்த்து, "ரொம்ப ஹேண்ட்சம் ஆ இருக்கீங்க. Gym க்கு போவீங்களா?"
"ம். ரெகுலரா போவேன்."
"எனக்கு பசிக்குது. நீங்க சாப்பிட்டீங்களா?"
"நான் என் டின்னர் 7.30க்கே முடிச்சிருவேன். உங்களுக்கு என்ன order பண்ண?" என்று ரிசீவரை எடுக்க, "No thanks ஸார். லேட்டாகு தேன்னு நான் வர்ர வழியில பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திட்டேன். சாப்பிட்றவா?"
அகிலன் அவள் Body language ஐ கவனித்தான். அவள் முகபாவத்துக் கேற்ப மொத்த உடம்பும் மிக நளினமாக அவளுக்கு ஒத்துழைத்தது.
"ம். கேரி ஆன்." என்றான்.
அவள் தேங்ஸ் சொல்லிவிட்டு பிரியாணிப் பொட்டலத்தை எடுத்து டீ பாயின் மீது வைத்து விட்டு, "ட்ரிங் சாப்பிடறீங்களா?"
"எனக்குப் பழக்கமில்ல. உங்களுக்கு வேணும்னா ஆர்டர் பண்ணட்டுமா?"
"எங்கிட்டெ இருக்கு. எனக்கு உங்க பர்மிஷன் மட்டுந்தான் வேணும்." என்றவள் எழுந்து சென்று கண்ணாடி டம்ளரையும் ஃப்ரிட்ஜிலிருந்து, ஐஸ் க்யூப்ஸ் ஐயும் எடுத்து வந்து டிரிங்ஸை மிக்ஸ் செய்து, டிரிங்ஸ் கோப்பையை மேலே உயர்த்தி "சியர்ஸ் ஃபார் அவர் கம்பெனி" என்றவள் ஒரு பெக்கை அருந்தியபடியே, பிரியாணியை சாப்பிட ஆரம்பித்தாள்.
பின் இடையில் நிறுத்தி, "ஏன் ஸார் நீங்க எதுவும் பேச மாட்டீங்களா?"
அகிலன் தயங்கியபடியே, "எனக்கு இதான் ஃபர்ஸ்ட் டைம். அதான் என்ன பேசறதுன்னு தெரியல."
"நீங்க மேரீட்டா ?"
"இல்லெ."
"அப்ப, இது உங்க ஃபர்ஸ்ட் நைட்?" என்று அவள் சிரிக்க, "நீங்க தப்பா நெனைக்கலேன்னா, உங்க லைஃப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா?" என்றான் அகிலன். அவள் பலமாக சிரித்தாள். "ஏன் எனக்கு லைஃப் குடுக்கப் போறீங்களா? இந்த மாதிரி நிறைய கேட்டாச்சு. பாத்தாச்சு."
"Sorry. I didn't mean it. உண்மையெச் சொன்னா இது எனக்கு ஒரு ஃப்ரஷ் எக்ஸ்பீரியன்ஸ். Not more than that."
" கதை எழுதப் போறீங்களா?"
"ஒரு டாக்குமென்ட்ரி ட்ரை பண்ணப் போறேன்."
அவள் வெறுப்போடு, "ஷிட். ஒரு பொம்பளகிட்டத் தெரிஞ்சுக்க உங்களுக்கு உருப்படியான விஷயம் வேற எதுவும் கிடைக்கலையா?"
"உங்கள நான் டிஸ்டர்ப் பண்ணியிருந்தா மன்னிச்சிருங்க. நீங்க நெனைக்கிற மாதிரிப் பெண்களப் பத்தித் தரக்குறைவா எழுதி அத வியாபாரம் செய்யற Cheap ஆன ஆளில்ல நான்."
அவள் மெளனமாகப் பார்த்தாள் என்றாலும் அந்தப் பார்வையில் ஒரு அலட்சியம் தெரிந்தது. அகிலன் தொடர்ந்தான்.
"உலகத்தில பல நாடுகளிலயும் இத ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலா அங்கீகரிச்சிருக்காங்க. ஆனா இங்க மட்டுந்தான் இத செய்யறவங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்கறதில்ல. சட்டமே இது ஒரு குற்றமாத் தான் பாக்குது, தண்டனையும் வழங்கப்படுது. முறையான சம்பளம் கிடைக்கறதில்ல. புரோக்கர்கள் அவங்க உழைப்பெ அபகரிச்சிடறாங்க. சமூகத்தில அவங்களுக்கு எந்த மரியாதையும் இல்லாம இருக்கு. நம்ம கலாச்சாரமே கற்பெ பெண்கள் மேலதான் திணிச்சிருக்கு. இதையெல்லாம் வெளிப்படுத்தி அவங்க லைஃபில ஒரு விடியல் ஏற்படுத்தணும்னு தான் நான் என் டாக்குமெண்ட்ரிய எடுக்க ட்ரை பண்றேன்."
அகிலனின் பேச்சு அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மறுபடியும் ஒரு லார்ஜ் எடுத்து ஐஸ் மிக்ஸ் செய்து கண்களை மூடிக் கொண்டு குடித்தாள்.
"சரி, என் லைஃப் பத்தித் தானே சொல்லணும், சொல்றேன், எனக்கு அதுல ஒரு வெட்கக்கேடும் இருக்கறதா தெரியல.. ஆரம்பிக்கட்டா? " என்றவள் மீண்டும் ஒரு பெக் போட்டுக் கொண்டாள்.
அவள் சொன்ன கதை சினிமா மோகத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து ஒரு புரோக்கரிடம் ஏமாந்து போன ஒரு அபலைப் பெண்ணின் வழக்கமான கதை தான். அவள் அதை சொன்ன விதம் தான் அகிலனைப் பாதித்தது. அவள் யாருடைய கதையையோ சொல்வதைப் போல் சுவாரஸ்யமாக சிரித்தபடியே சொன்னாள். அப்போது அவள் முகத்தில் நவரசமும் வந்து போனது. கதை முடிந்ததும் "சமரசம் உலாவும் இடம் இதுதான்." என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். அந்த வார்த்தைகள் நெறி கெட்ட இந்த ஆணாதிக்கச் சமூகத்தை சாட்டையால் விளாசியதைப் போலிருந்தது.
அகிலானால் அவளின் நகைமுரணான உணர்வுகளை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் அழுது விட்டான். அகிலன் தனக்காக அழுதது அவளை மிகவும் பாதித்து விட்டது. அவள் அவனை மெளனமாகப் பார்த்தாள். கை கழுவிக் கொண்டு வந்தாள். கட்டிலில் அமர்ந்திருந்த அகிலனின் அருகில் வந்து நின்று, அவன் தலையைக் கோதி விட்டாள். அவனைத் தொடுவதற்கே அவள் விரல்கள் நடுங்கின. முதல் முறையாக ஒரு குற்றம் செய்வது போல் அவளுடைய இதயம் சீரற்றுத் துடித்தது. அவள் விரல்கள் அவனுடைய முகத்தை வருடியது. அவன் கண்ணீர் அவள் நெஞ்சை நனைத்தது. அவன் முகத்தைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் அவள்.
அகிலன் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்த போது காலை மணி ஏழு. அந்த அறையில் அவள் வந்து போனதற்கான சுவடு கூட இல்லை. டீப்பாயின் மீது மட்டும் அவன் அவளுக்குக் கொடுத்த 2000 ரூபாய் நோட்டின் மீது கண்ணாடி டம்ளர் வைக்கப்பட்டிருந்தது. அவள் பணத்தை எடுத்துச் செல்ல மறந்து போய் விட்டாளா? அழைப்பு மணி ஒலிக்க, ஒருவேளை அவளாக இருக்குமோ? என்று எண்ணியபடியே " எஸ், கம் இன்' என்றான் அகிலன்.
அந்தப் பத்து வயது புரோக்கர் சிரித்தபடியே உள்ளே வந்தான். தலையைச் சொரிந்தான். அந்த செய்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அகிலன், தன் பர்ஸை எடுத்து 500 ரூபாயை அவனிடம் கொடுத்தான்.
"Thanks ஸார். ஒன் டே மேட்ச் தானா? ரிசப்ஷன்ல சொன்னாங்க" என்றான்.
"ஆமா. நேத்து வந்தவங்கள கொஞ்சம் வரச் சொல்றியா?"
"அது முடியாது ஸார். அவங்க பகல்ல லாட்ஜ் பக்கம் வர மாட்டாங்க.?"
அகிலன் யோசிக்க, "என்ன லவ் மேட்டரா ஸார்?" நமட்டு சிரிப்போடு கேட்டான்..
"அதில்லடா, அவங்க பணத்தை மறந்திட்டுப் போயிட்டாங்க. அத குடுத்திறலாமேன்னு தான்."
"அட, இம்புட்டுத்தான் மேட்டரா. இதுக்கா இப்படி பம்முற. அத இப்படிக் குடு ஸார். நான் கொண்டு போய் குடுத்தர்றேன்."
அகிலன் அவன் மீது நம்பிக்கையின்றிப் பார்க்க அதைப் புரிந்து கொண்ட சிறுவன், "அட நீ ஒண்ணு ஸார். என் மேல நம்பிக்கையில்லையா? வந்துச்சே அது வேற யாருமில்ல. என் அம்மாதான்."
- மீ.தே.தமிழரசன்