kuthoosi gurusamy 268(மாலை நேரம். நிம்மதி, எம்.பி., பி. எஸ்., நிம்மதி எம். ஏ., பில். எல்.- ஆகிய இருவரும் கடற்கரையில் நிம்மதியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.)

டாக்டர்:- என்ன வக்கீல் சார்! உங்கள் பாடுதான் யோகம்! நேற்று, நல்ல கொழுத்த கேஸ் ஒன்று கிடைத்தது. ஏராளமாகப் பணம். தட்டி விட்டீர்கள்! வழக்கு ஜெயிக்கிறதோ தோற்கிறதோ என்ற கவலையே கிடையாது! கடன் வாங்கியோ, சொத்தை விற்றோ, உங்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து விட்டான்! ஒருக்கால் கேஸ் ஜெயித்தால் ஏதாவது இனாம் கொடுத்தாலுங்கூடக் கொடுப்பான்! என்னைப்போல் ஏராளமாகச் செலவழித்துப் படித்துவிட்டு, பணத்துக்குக் கஷ்டப்பட வேண்டியதில்லை, நீங்கள்!

வக்கீல்:- உங்களுக்கா பணம் கஷ்டம்? நன்றாய்ச் சொன்னீர்கள், டாக்டர்! ஏண்டாப்பா நாமும் டாக்டர் வேலைக்குப் படித்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைப்பதுண்டு, நான். எங்கள் தொழிலில் ரொம்பக் கூட்டம் வந்து சேர்ந்து தொலைந்து விட்டதே! எங்கே சார், இந்த நாளில் நல்ல வருமானம் கிடைக்கிறது? கிடைப்பதாயிருந்தால் எங்களில் பல பேர் வேறு வேலைக்குப் போவார்களா? கணக்குப் போட்டுப் பார்த்தால் அல்லவோ தெரியும்? வக்கீல் பட்டம் பெற்றிருப்பவர்களில் இன்றைக்கு எத்தனைபேர் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று கணக்கெடுத்தால், 100 க்கு 70 பேர் வேறு வேலைகளில் இருப்பதையோ, அல்லது அதுவும் முடியாமல் சும்மாயிருந்து கொண்டு சதா கதாகாலட்சேபம் செய்து கொண்டிருப்பதையோ காணலாம்! உங்கள் தொழில்தான் சார், இந்தக் காலத்தில் நிம்மதியானது! நோயாளி காட்சியளித்து நாக்கை நீட்டியவுடனே “கன்சல்டேஷன்” தொகை கையில் வந்து விடுகிறது! சொந்தத்தில் “டிஸ்பென்சரி”யும் இருந்தால், ஒரே கொள்ளை! ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் பணமாகி விடுகிறது! நோயாளி குணப்படாவிட்டாலும் அல்லது (உங்கள் மருந்தினாலேயே) செத்துப் போனாலும்கூட “அவன் தலைவிதி” என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்!

டாக்டர்:- இதே ‘தலைவிதி’ உங்களுக்குத்தான் ரொம்ப உபயோகமாயிருக்கிறது. கட்சிக்காரன் சொத்தையிழந்தாலும் சரி, உயிரையே இழந்தாலும் சரி! “நான் நன்றாகத் தான் வாதாடினேன்! ஜட்ஜ் ஒரு பரம முட்டாள்! அவரைக் குற்றஞ் சொல்லித் தான் என்ன பயன்? அது அவன் ‘தலைவிதி’ என்று சொல்லி விடுவீர்கள்! “என் தலைவிதி” தான் காரணம் என்றாலும், நான் கொடுத்த பணத்தைத் ‘திருப்பிக் கொடுங்களேன்,’ என்று எவன் உம்மைக் கேட்கப் போகிறான்?

வக்கீல்:- உங்களுக்கும் அப்படித்தானே! இந்தத் “தலை விதி” மட்டும் இல்லாதிருந்தால் நம்மால் இந்த உலகத்திலேயே வாழ முடியாது, ஸார்!

(இந்தச் சமயத்தில் இவர்களுடைய நண்பராகிய நிம்மதி எம். ஏ., எல்.டி. இவர்களை நோக்கி வருகிறார்.) டாக்டரும் வக்கீலும்:- வாங்க! சார்! வாங்கோ! உங்கள் பாடுதான் ரொம்ப நிம்மதி!

ஆசிரியர்:- நீங்கள் கூடவா என் நிம்மதியைப் பற்றிப் பொறாமைப் பட வேண்டும்? நானும் உங்களைப்போலத்தான் பெரும் பட்டம் பெற்றிருக்கிறேன். ஆனால் என் கதியைப் பாருங்கள்! இதோ! ட்ராமுக்குக் காசில்லாமல் நாலு மைல் நடந்து வருகிறேன்! தரித்திரம் பிடுங்கித் தின்கிறது! உங்கள் பாடுதான் யோகம்! நல்ல வரும்படி! நான் பத்து வருஷம் சம்பாதிப்பதை நீங்கள் ஒரே மாதத்தில் கூட சம்பாதித்து விடுகிறீர்கள்!

டாக்டர்:- அதென்ன நியூஸ் பேப்பர் பொட்டணம்? புது வேட்டியா!?

ஆசிரியர்:- வேண்டியா! மாதக் கடைசியில் மனுஷனுக்கு ட்ராமுக்கே பணமில்லையென்றால், வேட்டியாவது புடவையாவது? இது என் செருப்பு! சாய்ந்திர நேரத்திலேயும் போட்டு நடந்தால் சீக்கிரம் தேய்ந்து போயிடுமே! அதற்காக தினம் மூன்று மணியானவுடனே இந்த மாதிரிச் செய்கிற வழக்கம்! (மற்ற இருவரும் சிரிக்கிறார்கள்!) உங்களுக்குச் சிரிப்பாய்த் தானிருக்கும்! ஆனால் இப்படிச் செய்வதால்தான் நாலரை வருஷமா ஒரு ‘ரிப்பேர்’ கூட இல்லாமல் இதை வைத்திருக்கிறேன்! இதோ பாருங்களேன்! பொட்டணத்தை அவிழ்த்து உள்ளும் புறமும் தேய்ந்த செருப்புக்களைக் காட்டுகிறார்!)

வக்கீல்:- அய்யோ, பாவம்! அது சரி! ஸ்கூல் பரீட்சையெல்லாம் முடிஞ்சுதா? உம் வகுப்புப் பையன்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள்?

ஆசிரியர்:- எப்படியோ தொலையட்டும்! என் கடன் முடிந்தது! அவ்வளவுதான்!

டாக்டர்:- இவரும் நம்மைப்போல ஒரு நிம்மதிதான், ஸார்! “ஒரு வருஷம் முழுதும் சொல்லிக் கொடுத்தாயே! உம் வகுப்புப் பையன்கள் இவ்வளவு மோசமாக ‘மார்க்’ வாங்கியிருக்கிறான்களே!” என்று இவரை யாராவது கேட்கப் போகிறார்களா? அல்லது “நீ வாங்கிய சம்பளத்தை யெல்லாம் திருப்பிக் கொடு” என்று தான் பெற்றோர்கள் கேட்கப் போகிறார்களா? அப்படியே கேட்டாலும், ஒரே வார்த்தையில் பதில்! “நானென்ன செய்யட்டும்? அவன் தலைவிதி,” என்று சொல்லி விடுவார்! (வக்கீலைப் பார்த்து) நம்மைப்போல இவருக்கு வரும்படி வராவிட்டாலும், “தலைவிதி” இவருக்கும்தான் துணை செய்கிறது!

ஆசிரியர்:- அதுவும் சரிதான்! ஆனால் எங்களுக்கு மேலேயுள்ள கல்வி அதிகாரிகளிடம் இந்தச் சமாதானம் செல்வதில்லையே! ஆனாலும் எங்கள் சம்பளத்தை இதற்காக யாரும் குறைத்துவிட முடியாது. 100க்கு 100 பையன்கள் பரீட்சையில் தவறினாலுங்கூட எங்கள் சம்பளம் காலா காலத்தில் எங்களுக்கு வந்து விடும்!

வக்கீல்:- அப்படியானால் நம் மூவர்களைவிட எஞ்சினியர்கள் பாடுதான் சார், ரொம்ப நிம்மதி! இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு பாலம் கட்டி அடுத்த மாதமே அது இடிந்து விழுந்தாலும் எஞ்சினியர் பழியேற்றுக் கொள்ள மாட்டார். “அது பாலத்தின் தலைவிதி” என்று நம்மைப் போலச் சொல்ல முடியாவிட்டாலும், மட்டமான சிமெண்ட், சர்க்கார் அவசரப்படுத்தியதால் அஸ்திவாரம் இறுகவில்லை - என்று இந்த மாதிரி! யார் மீதாவது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்வார்!

டாக்டர்:- இந்தக் காலத்தில் யாரையும் குற்றஞ் சொல்ல முடியவில்லை ஸார்! உலகமே இப்படித் தானிருக்கிறது! ஆனால் ‘தலைவிதி’ என்பதை ஒப்புக் கொள்ளாத ஆட்சிமட்டும் எதுவும் இந்த நாட்டில் ஏற்பட்டு விடாமல் நாமெல்லோரும் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்!

வக்கீல்:- ஆமாம்! அது தான் ரொம்ப முக்கியம் வாத்தியார் ஸார்! குறைந்த சம்பளத்தை நினைத்துக் குமுறாதீர்கள்! அது “உங்கள் தலைவிதி!”

-  குத்தூசி குருசாமி (18-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It