தொடர்புடைய படைப்புகள்

பார்ப்பனப் பத்திரிகைகளின் விஷமமும் ஆத்திரமும்

செட்டிநாடு குமாரராஜா அவர்கள் மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரசாரம் செய்து மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் கலகம் ஏற்படாதா என்று ஆசைப்படுகின்றன. சில பத்திரிகைகள் பொப்பிலியின் சரணாகதி என்று எழுதின. சில பத்திரிகைகள் பொப்பிலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்று எழுதின.periyar karunadhini karunchettai feb142014கடைசியாக சேர்த்துக் கெள்ளப்பட்ட சம்பவத்தை ஒரு பத்திரிகை பொப்பிலியின் தோல்வி என்றும் எழுதியிருக்கிறது. ஏதாவது ஒரு பொதுநலத்தை உத்தேசித்து ஒற்றுமை ஏற்படுங்காலையில் யார் தோற்றார் யார் ஜெயித்தார் என்கின்ற பிரச்சினையைப் பற்றிய விஷமங்கள் அவ்வொற்றுமையின் விரோதிகளாலேயே தான் அதிகமாய் ஏற்படும்.

இந்த ஒற்றுமைப் பிரச்சினையானது மாஜி கவர்னர் சர். மகம்மது உஸ்மான் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டதாகும். அவரது முயற்சிக்கு உள்ள முக்கிய காரணம் இப்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

சர். உஸ்மான் அவர்கள், குமாரராஜாவை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், பழமை விஷயங்கள் சரியோ, தப்போ என்பதைப் பற்றி யாரும் கவனிக்காமல் மறந்துவிடவேண்டும் என்றும் சொல்லி ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களையெல்லாம் கேட்டுக் கொண்டார்.

அந்தப்படியே அதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. குமாரராஜா அவர்களும் அக்கூட்டத்துக்கு வந்தார்.

சர். உஸ்மான் அவர்கள் "தேசத்தின் நன்மைக்கு ஆக ஒற்றுமையுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள்" என்றும் சொன்னார்.

அதுபோலவே பொப்பிலி ராஜா அவர்கள் சர். உஸ்மான் அவர்கள் வேண்டுகோளை மதித்து, பழைய சங்கதிகளை மறந்து செட்டிநாடு குமாரராஜா அவர்களை வரவேற்பதோடு அவரது கூட்டுறவை பாராட்டுகிறேன் என்றும் சொன்னார்.

குமாரராஜா அவர்களும் பழைய சங்கதிகளை மறந்து பொப்பிலி ராஜாவின் சினேக உணர்ச்சியை பாராட்டி ஒத்துழைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். இதுதான் ராஜி சடங்கில் காணப்படுகிறது. இதில் யாருக்கு தோல்வி? யாருக்கு வெற்றி? என்று கேட்கின்றோம்.

குமாரராஜா ஜஸ்டிஸ் கட்சி கூட்டத்துக்கு வந்த பெருந்தன்மையை உத்தேசித்து அவரைப் பற்றிய ஜஸ்டிஸ் சட்டசபை கக்ஷி 11.12.34ந் தேதி நடவடிக்கைகளை புஸ்தகத்தில் அடித்து விடுவது என்று பெருந்தன்மையாய் தீர்மானித்துக் கொண்டார்கள்.

அதுபோலவே ஜஸ்டிஸ் ஆசிரியரும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் ஏதாவது எழுதி இருந்தால் பின் வாங்கிக் கொள்வதாகவும் வருத்தப்படுவ தாகவும் தெரிவித்திருக்கிறார்.

இவை எல்லாம் செட்டிநாட்டு குமாரராஜா அவர்கள் துணிந்து வந்துவிட்டதால் பிறகு அவரிடம் மனிதத் தன்மையை காட்டிக் கொள்ளவும், அவரை கௌரவப்படுத்தவும் ஏற்பட்டவைகளாகும். எப்படி இருந்தாலும் குமாரராஜா அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் கௌரவிக்கப்பட்டதும் எல்லாம் ஒரு பொதுநலத்தை உத்தேசித்தே ஒழிய மற்றபடி யாருடைய சுயநலத்தையும் உத்தேசித்தல்ல என்பது மாத்திரம் உறுதி என்பதை நாம் அழுத்தமாகக் கூறுவோம். இதற்கு ஆக பார்ப்பனப் பத்திரிகைகள் இம்மாதிரி விஷமத்தனமும், ஆத்திரமும் காட்டுவது அவைகளின் அற்ப புத்தியை தெள்ளென விளக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

(குடி அரசு துணைத் தலையங்கம் 15.12.1935)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.