சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் ராமசாமியின் முழக்கம்

"இன்று தோழர் ஷண்முகம் இக்கூட்டத்திற்கு வந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவருக்குத் தேக அசௌக்கியமேற்பட்டிருப்பதை முன்னிட்டு அவரால் வரமுடியவில்லை. நமது தேர்தல் விஷயமாக கவலைப்பட வேண்டாமென்று பலர் பலவிதமாக பத்திரிகைகளில் எழுதி வருவதை நம்ப வேண்டாமென்றும், தாம் வெற்றி பெறுவது நிச்சயமென்று அவர் உங்களுக்குத் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார். (பலத்த கரகோஷம்)

இன்று தொண்டர்களைக் கூட்டி அவர்கள் தேர்தலில் எப்படி நடந்து கொள்வதென்பது பற்றி அறிவுறுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். ஆனால் இப் பெரிய கூட்டத்தில் அது சாத்தியமல்ல வாகையால் தொண்டர்களாகச் சேர விரும்புவோரெல்லாம் ஞாயிற்றுக் கிழமை மாலை தியாகராய மெமோரியல் ஹாலுக்கு வந்தால் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் இதர விவரங்களையும் தெரிவிப்போம்.

தேர்தல் பிரசாரப் போக்கு

தோழர் ராமசாமி முதலியார் தேர்தல் விஷயத்தில் மிக்க ஊக்கமுள்ள ஏராளமான வாலிபர்கள் இங்கே கூடியிருப்பது நல்ல அறிகுறியாகும். தேர்தல் பிரசாரத்தின் போக்கு உங்களுக்கு நன்றாகத் தெரியும். புதிதாக கூற வேண்டியது ஒன்றுமில்லை என்று நினைக்கின்றேன். போட்டி ஏற்பட்டு விட்டாலேயே அபேட்சகர்களும் அவர்களது கோஷ்டியினரும் ஒருவர் மீது மற்றவர் தூஷணையாகப் பேசி வெற்றிபெற தம்மால் இயன்றவரையில் முயற்சி செய்வதென்பது வழக்கமாகவிருக்கிறது. நமது எதிர்கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனரென்பது பற்றியும் ஆபாசமான விஷயங்களைப் பறை சாற்றி வருகின்றனரென்பது பற்றியும் நீங்கள் வருந்தக் கூடாது. தேர்தல் பிரசார முறை அப்படியிருக்கிறது.periyar and pannerselvam

(பன்னீர் செல்வம், முத்தையா செட்டியார், பேரா.எம். இரத்தினசாமி ஆகியோருடன் பெரியார்)

உண்மையைத் தெரிந்து கொண்டு ஓட்டுப் போட வேண்டுமென்ற நோக்கம் நம் ஜனங்களில் பெரும்பான்மையோருக்கு இல்லை. பெரும்பான்மையோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அவர்கள் ஏதாகிலும் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் புரோகிதர்கள், வக்கீல்கள் முதலியோர் மூலமே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது தேச மக்கள் அறிவாளிகளென்று நாம் பெருமை பாராட்டிக் கொண்டபோதிலும் 100க்கு 2 விழுக்காடு பேர்களே படித்தவர்களாக விருக்கின்றனர். உயர் ஜாதியினர், பணக்காரர்கள், உத்தியோகஸ்தர்கள் இவர்களது புதல்வர்களே படிக்கின்றனர். விவசாயிகள் முதலிய பெரும்பான்மையோருக்கு எழுத்து வாசனையே இல்லை. இந்நிலைமையில் ஜனங்கள் உண்மையைத் தெரிந்து கொள்வது எப்படி? யாருக்கு அதிகமாகப் புளுகத் தெரிகிறேதோ, யாருக்கு தூஷணம் செய்யத் தைரியமிருக்கிறதோ அவரே தேர்தலில் வெற்றி பெறுவது சகஜமாக விருக்கிறது.

சென்னை மக்களது நிலைமை அப்படி அல்லவென்று நான் கருதுகின்றேன். இந்நகரிலுள்ளவர்கள் படித்தவர்கள்; விஷயம் தெரிந்தவர்கள். ஆனால் இவர்களிடம் பெரும் குறை ஒன்று உண்டு. கிராமவாசிகள் ஆபத்தென்றால் எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். படித்ததின் பலனாக நகர வாசிகள் அவ்விதம் ஒன்று சேருவதே கிடையாது. தங்களுக்கு அநுகூலமுண்டாவென்பதையே முக்கியமாகக் கவனித்து விட்டு, ஊர் வம்பில் தலையிடக் கூடாதென்று சும்மாயிருந்து விடுவார்கள். சிறுபான்மையோர் தங்கள் சமுதாய நன்மையைப் பொறுத்த விஷயத்தில் சிரத்தை கொண்டு ஒத்துழைக்கிறார்கள். பெரும்பான்மையோர் அவ்விதம் சிரத்தை கொள்வதேயில்லை. இதனால் முடிவில் சுயமரியாதையை இழக்கவும் நேரிடுகிறது. இதனை எதற்காக கூறுகிறேனென்றால் தோழர் சத்தியமூர்த்தி கோஷ்டியினர் பிராமண வாக்காளர்களது ஆதரவு நிச்சயமென்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கும்போது பெரும்பான்மையோரான பிராமணரல்லாதார் தங்களிடம் பதின்மடங்கு அதிக ஓட்டுகளிருந்தும், சிரத்தையும் தைரியமும் கொள்ளாமல் இருக்கின்றனரென்பது பற்றியே தேர்தலில் கட்சி குண தோஷங்களைப் பிரசாரஞ் செய்த போதிலும் போட்டியானது சமூக விரோதத்தையும் ஜாதி வித்தியாசத்தையுமே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. இதுவரையில் சமூக உயர்வு தாழ்வு, அனுகூலம் இவைகளையே குறியாகக் கொண்டே தேர்தல் நடந்து வந்துள்ளது. அவ்வப்போது பெயர்கள் மாறி வந்த போதிலும், அடிப்படைத் தத்துவம் சம்பந்தமாக வித்தியாசமே இல்லை. பிராமணர் பிராமணரல்லாதாரை நசுக்கிவிட்டு, உத்தியோகம் முதல் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் பெற தேர்தலைச் சாதனமாக உபயோகித்து வந்துள்ளனர். வெளிப்படையாக எதையும் சொல்லுவோர் காரியத்தில் கண்ணாக இருப்பதில்லை. பிராமணரோ அப்படியல்ல. அவர்கள் வாய் பேசாமல் காரிய சித்தியிலேயே கருத்துடையவர்களாக விருக்கின்றனர்.

காங்கிரஸ் பிரசாரப் போக்கு

இந்நகரில் தோழர் சத்தியமூர்த்தி காங்கிரசின் பெயரால் அபேட்சகராக நிற்கின்றார். தோழர் முதலியார் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் அபேட்சகராக நிற்கிறார். காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் எப்படி நடந்து வருகிறெதென்பதைக் கவனிப்போம். ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகக் கட்சியென்றும், தோழர் ராமசாமி முதலியார் தேசத் துரோகி என்றும், காங்கிரஸ் மகாசபையே ஜனப்பிரதிநிதித்துவம் வாய்ந்த சபை யென்றும், தேச மக்களுக்காகப் பாடுபடுகிறதென்றும், ஆகவே காங்கிரஸ் அபேட்சகருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ்வாதிகள் மட்டுமே தேசபக்தியும், தேசாபிமானமும் உடையவர்களென்றும் கூறி ஓட்டுக் கேட்கின்றனர்.

காங்கிரஸ் சாதித்ததென்ன?

காங்கிரஸ் பிரசாரகர்கள் கூறுவது எவ்வளவு தூரம் உண்மை யென்பதை நாம் ஆராய்ச்சி செய்வோம். சமீபத்தில் பம்பாயில் காங்கிரஸ் மகாநாடு நடந்ததென்றும், பலத்த விவாதம் நடந்ததென்றும், மகாநாடு வெற்றிகரமாக முடிந்ததென்றும், செய்திகளை நாம் பத்திரிகைகளில் படித்தோம். ஆனால் அம் மகாநாட்டில் என்ன நடந்ததென்பதைச் சுருக்கமாகக் கூற இயலுமாவென்று நான் கேட்கின்றேன். என்ன தீர்மானம் நிறைவேற்றினார்கள்? நாட்டுக்கு அம் மகாநாட்டில் என்ன நன்மை ஏற்பட்டது? ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டார்களே தவிர வேறு நடந்ததென்ன? இரண்டொருவருக்குப் பெரும் புகழ் ஏற்படுமாறு ஏற்பாடு செய்தனர். மற்றவர்கள் காங்கிரஸ் பிரவேசிக்காதபடி பந்தோபஸ்து செய்து கொண்டார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாதனங்கள் சிலவற்றைத் தேடிக் கொண்டனர். அம்மகாநாட்டில் நடந்ததென்ன வென்றால் மகாத்மா காந்தி காங்கிரசிலிருந்து விலகியது தான். இதற்காக ஒரு பெரிய மகாநாடு. லட்சக்கணக்கில் செலவு. காங்கிரசின் யோக்கியதை என்னவென்று காட்டவே நான் இதைக் குறிப்பிடுகின்றேன். இந் நாட்டில் காங்கிரஸ்தான் பிரதானமான சபையென்ற சமாதானம் மட்டும் போதுமா? அதனால் என்ன நன்மை ஏற்பட்டது. அது சாதித்ததென்ன? இவைகளைக் கவனிக்க வேண்டுமல்லவா?

"எனது அனுபவம்"

நான் காங்கிரசில் சேர்ந்து கண்ட அனுபவங்களையே எடுத்துக் கூறுகின்றேன், காங்கிரசிலிருந்த போது அதன் விதிகளையெல்லாம் முற்றிலும் அனுசரித்தவன். அப்போதே நாலைந்து தடவை சிறைப் பட்டிருக்கின்றேன். அநுபவப்பட்டு அதன் (காங்கிரஸின்) குண தோஷங்களைச் சொல்ல வந்தவனே தவிர வேறல்ல. சிறைபடும் போது நான் வெறும் ஆளாக இருக்கவில்லை. அப்பொழுது வியாபாரத்தில் மாத்திரம் நான் ரூ.800 வருமான வரி செலுத்திக் கொண்டிருந்தவன். இதர வரிகள் பலவும் 3000 ரூபாய் செலுத்தினேன். காங்கிரஸ் வேலைத்திட்டத்தை அனுசரித்தால் தேசத்துக்கு நன்மை ஏற்படுமென நம்பித் தொழிலை விட்டேன். கோர்ட்டுகளைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று வாயினால் மட்டும் பேசிவிட்டு நான் சும்மாயிருக்கவில்லை. ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதையும் லட்சியம் செய்யாமல் நான் கோர்ட்டுகளைப் பகிஷ்கரித்து வந்தேன். நான் ஒரு பத்திரத்தில் ரூபாய் 28000 வசூல் செய்யாமல் விட்ட விஷயம் பழந் தேசபக்தரான தோழர் விஜயராகவாச்சாரியாருக்குத் தெரியும். அவர்தாம் எனது சார்பில் வக்கீலாக ஆஜாராகி அப் பணத்தை வசூல் செய்வதாக எனது அனுமதி கேட்டார். அப்பணம் வீணாக விடாமல் வசூல் செய்து காங்கிரஸிற்காகவாவது உபயோகிக்கலாமென்றும் கேட்டார். மேற்கொண்ட கொள்கையைக் கடைசிவரையில் அநுசரித்தே தீரவேண்டுமென்ற உறுதியால் நான் அதற்கு உடன்படவில்லை. அது பற்றி தோழர் விஜயராகவாச்சாரியார் என்னை பைத்தியக்காரனென்று கூறினார்.

வெளி வேஷத்திற்காகவோ அதில் சம்பாதிக்கவோ நான் காங்கிரஸ்வாதியாக விருக்கவில்லை. இப்பொழுது என் மீது குறை கூறுவோர்களிடமிருந் தெல்லாம், நான் அப்பொழுது உயர்ந்த நற்சாட்சி பத்திரங்கள் வாங்கியிருக்கிறேன். நான் இந்த காங்கிரஸ்வாதிகளுக்கு அடிமை போலவும் அவர்களது சொல்லைத் தவராமலும் நடந்து, பலன் உண்டாவென்பதை பரீட்சித்துப் பார்த்தவன். காங்கிரஸ் நிர்வாகம் ஒரு சமூகத்தாரின் நன்மையைக் குறித்தே நடக்கிறதென்பதை உணர்ந்தே நான் அதிலிருந்து விலகினேன். எனக்கு அதில் மதிப்போ யோக்கியதையோ இல்லையென்று நான் விலகவில்லை. காங்கிரசுக்கு அதிகாரம் ஏற்படுமானால் பொது ஜனங்களுக்கு என்ன பங்கு ஏற்படுமென்பதைத் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று காஞ்சீபுரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் நான் தீர்மானம் கொண்டு வரவே இடமில்லாதபடி செய்தனர். காங்கிரசில் நியாயத்திற்கு இடமில்லை என்றும் தந்திரத்திற்கே இடமுண்டென்றும் உணர்ந்து நான் ஆரியா முதலியவர்களுடன் மகாநாட்டிலிருந்து வெளியேறினேன் . அதன் பிறகுதான் காங்கிரசையே தொலைக்க வேண்டுமென்ற ஊக்கம் ஏற்பட்டது. ஆனால் தற்போது காந்தியார் காங்கிரசிலிருந்து விலகி விட்டதனால் காங்கிரசைத் தொலைக்க வேண்டுமென்ற விருப்பமே எனக்கில்லை. ஏனென்றால் இனி பார்ப்பனருக்கு சிபார்சுக்கு அங்கு ஆளில்லை.

காஞ்சிபுரம் மகாநாட்டிலிருந்து விலகிய பிறகு நான் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தேன். இந்த கட்சி வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை ஆதரிக்கிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவமே கூடாதென்று காங்கிரஸ் மகாசபை கங்கணம் கட்டிக் கொண்டதால்தான் அது தற்போது சீர்குலைந்து விட்டது. சிறுபான்மையோருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு அவர்கள் விலக வேண்டியதாயிற்று. அதுவே காங்கிரசின் பலக் குறைவுக்குக் காரணம். எல்லா வகுப்பாருக்கும் சமநீதி வழங்க காங்கிரஸ் ஒருப்படுமானால் தனிப்பட்ட சமூக ஸ்தாபனங்களே தோன்றியிருக்காது. வண்டிக்கு முன்பாரம் அதிகமானால் பின்புறம் கற்களைத் தூக்கிவைப்பது போலவே பிராமணரல்லாதாரில் சிலரை உபயோகித்து வருகின்றனர். (கரகோஷம்) ஒரு ஸ்தாபனத்தின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கும் போது, அந்த ஸ்தாபனத்தால் தேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்கள் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியமென்பது பற்றியே நான் இதைக் கூறுகிறேன்.

பிரசாரம் செய்யாத குறை

ஜஸ்டிஸ் கட்சி தனது நோக்கங்களையும், வேலைத் திட்டத்தையும் சரியான பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு அறிவிக்காததாலேயே இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சியைத் தேசத்துரோகக் கட்சியென்று பிராமணர்கள் குறை கூறுகின்றனர்.

ஜஸ்டிஸ் கட்சி வேலை

ஜஸ்டிஸ் கட்சி செய்துள்ள வேலை போல அக்கட்சி இல்லாத இதர மாகாணங்களில் வேலை நடந்திருக்கிறதாவென்று கேட்கிறேன். ஜஸ்டிஸ் கட்சி இம்மாகாண மந்திரி சபையை ஏற்று அரசியல், சமுதாய அபிவிருத்திக்காகப் பாடுபட்டுள்ளது. புரோகித ஆதிக்கம் ஒழிந்து விவசாயிகள், பெண்கள் அரசியலில் கலந்து கொள்ள முடிந்தது. சென்னையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவற்றில் ஸ்தானமுண்டு. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையும் அமுலிலிருக்கிறது. இதர மாகாணங்களில் இத்தகைய அபிவிருத்திகள் ஏற்படவே இல்லை. ஜஸ்டிஸ் கட்சி செய்த பிரதிகூலம் என்னவென்று நான் கேட்கின்றேன்.

தொண்டர்களுக்கு தடியடி

ஜஸ்டிஸ் கட்சி மந்திரிசபை யிருந்ததாலேயே சட்ட மறுப்பு இயக்கம் நடந்த போது இம்மாகாணத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தடியடி, சிறைவாசம் ஏற்பட்டதென்று காங்கிரஸ் பிரசாரகர்கள் குறைகூறுகின்றனர். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளில்லாத இதர மாகாணங்களில் தொண்டர்களுக்கு அதிகாரிகள் தேங்காய் பழம் கொடுத்தார்களா அல்லது கலியாணம் செய்து வைத்தார்களாவென்று நான் கேட்கின்றேன். (சிரிப்பு) கைதிகளுக்கு மோர் கொடுக்க வில்லையாதலால் ஜஸ்டிஸ் கட்சி நாசமாகப் போக வேண்டுமென்று கூறுகிறார்கள். வேறு எந்த மாகாணத்திலாகிலும் சட்ட மறுப்பு கைதிகளுக்கு ஆடைத்தயிராக கொடுத்தார்களாவென்று நான் கேட்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த திவான் பகதூர் முதலியாரால் நெருப்பு பெட்டிக்கு வரி ஏற்பட்டதென்று கூறுவது எவ்வளவு இழிவான தென்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். சில பெண்கள் அற்பத்தனமாக சச்சரவிடுவது போலல்லவா இருக்கிறது காங்கிரஸ் தேர்தல் பிரசாரம்.

காங்கிரசின் சார்பில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் சிறைபட்டதால் கண்ட பலன் என்ன? அம் முறை தப்பான தென்று கண்டு பிடித்ததைத் தவிர வேறென்ன? இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு. காந்தியார் தமது முயற்சி பிரயோஜனமற்றதென்று உணர்ந்து புது முயற்சியில் ஈடுபட உத்தேசித்திருப்பதைப் பாராட்டி சுதேசமித்திரன் பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது. காந்தியார் தமது கொள்கைகளை நம்பாமலே காங்கிரஸ்வாதிகள் வாசா கைங்கரியமாக நடந்து வருகின்றனரென்றும் காங்கிரஸிற்குப் பலமும் பரிசுத்தமும் ஏற்படும் பொருட்டு அதிலிருந்து விலகியதாகவும் கூறுகின்றார். உள்ளேயிருந்து காரியத்தைச் சாதிக்காமல் வெளியே இருந்து எப்படி காரியத்தைச் சாதிக்கக் கூடுமென்று நான் கேட்கின்றேன்.

தேசத்துரோகி பட்டம்

காங்கிரஸிலிருந்து விலகிய என்னை தேசத் துரோகி என்று கூறுகின்றனர். காந்தியார் காங்கிரஸிலிருந்து விலகி விட்டாரே, அவரை தேசத்துரோகி என்று கூறாமல் அவர் பேரால் ஓட்டுக் கேட்கிறார்கள். காங்கிரஸ் பரிசுத்தமாக வேண்டுமென்று நானுந்தான் விரும்புகின்றேன். காங்கிரஸைச் சேராதவர்களெல்லாம் தேசத் துரோகிகளென்பது அயோக்கியத்தனமான வார்த்தையேயாகும்.

காங்கிரஸ் வேலைத் திட்டத்தை ஜனங்கள் நம்பி அநுசரித்தனர். உப்பு சத்யாக்கிரகத்திலும் சேர்ந்து சிறைப்பட்டனர். இதனால் கண்ட பலன் என்ன? சிறைபட்டவர்களை விடுதலை செய்ய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதே தவிர வேறு இல்லை. இதற்காக ஜனங்கள் மீது குறை கூறிவிட்டு காந்தியார் வெளியேறியது நாணையமாகாது.

கோயிலை இடிப்பவன்!

தோழர் ராமசாமி முதலியார், காங்கிரஸ்வாதிகள் கூறியதற்கெல்லாம் தக்க பதில் கூறிய பிறகு காங்கிரஸ்வாதிகள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் கோயிலை இடிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்கிறவனென்றும், அத்தகையவன் உதவியை நாடும் தோழர் முதலியாருக்கு ஓட்டுபோட வேண்டாமென்றும் கூறுகின்றனர். கோயிலை இடிப்பதால் கடவுளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். அக்கோயில்களால் வயிறு வளர்க்கும் கூட்டத்தார் வாயில் மண் விழுமே தவிர வேறில்லை. (சிரிப்பு) ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கோடிக்கணக்கில் ஆடம்பரச் செலவு செய்வதை மிக்க பிரயோஜனகரமான முறையில் உபயோகிக்கலா மென்பதே எனது கவலை.

உணர்ச்சி வேண்டும்

உங்களுக்கு உணர்ச்சி வேண்டும். தோழர் முதலியார் பிராமணரல்லாதார். அவருக்கு ஏற்படும் பெருமை உங்களுக்கும் உரியதாகும். நமக்கு ஏதாகிலும் காரியம் நிறைவேற வேண்டுமானால், இத்தகையவர்களாலேதான் அது சாத்தியமாக வேண்டும்.

சமூக சீர்திருத்தத்தின் அவசியம்

நமது சமுதாயத்தில் ஆபாசங்கள் நிறைந்திருக்கின்றன. சீர்திருத்தமே பிரதானமாகும். அதற்குச் சாதகமாக வேலை செய்வோரை ஆதரிக்க வேண்டுவது நமது கடமை. சமுதாயத்தில் உயர்வு தாழ்வு அகல வேண்டும். வெள்ளையர் ஆட்சி மட்டும் சீரழிந்தால் போதாது. சமத்துவம் ஏற்பட வேண்டும்.

தாலி அறுத்ததாக பழி

காங்கிரஸ் பிரசாரகர்கள் நாணயமற்றவர்களாக விருக்கின்றனர். காங்கிரஸ் போர்வையை உடுத்திக் கொண்டவர்களுக்கு பொய் பித்தலாட்டம் செய்ய லைசென்ஸ் ஏற்பட்டுள்ளது. சத்யாக்கிரகம் செய்த ஒரு பெண்ணின் தாலியை தோழர் ராமசாமி முதலியார் அறுத்தாரென்றும் வீண்பழி கூறுகின்றனர். பாமர ஜனங்களை இவ்விதம் ஏமாற்றி ஓட்டு பெற விரும்புகின்றனர். காங்கிரஸ்வாதிகன் புரட்டுக்குப் பிராமணரல்லாதார் அஞ்சாமல் வேலை செய்து வெற்றி பெற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ( கரகோஷம்)

(குறிப்பு: 02.11.1934 இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் சென்னை தொகுதியில் இந்திய சட்டசபைக்கு நிற்கும் ஏ.ராமசாமி முதலியாரை ஆதரிக்கும் கூட்டத்தில் பேசியது.

பகுத்தறிவு சொற்பொழிவு 11.11.1934)

Pin It