திருச்சி "நகர தூதன்" பத்திரிக்கையில் தோழர் அவனாசிலிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் "கோயமுத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பாக அபேட்சகராய் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேக்ஷகராய் நிற்க மாட்டாராம். காங்கிரசின் பெயரால் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாரை முன் நிறுத்தி அத்தொகுதியைப் பண்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் இராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரிய வருகிறது" என்று ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது.periyar with garland"பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு" என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.

நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம் என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாயிருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்த வாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை.

ஆகவே தோழர் அவனாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாயிருந்தாலும் இருக்கலாம். அல்லது "பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம்" என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

(பகுத்தறிவு செய்தி விளக்கக் குறிப்பு 23.09.1934)

Pin It