பூலாபாய் தேசாய் & சர்தார் சாதூல் சிங்
தோழர் பூலாபாய் தேசாய் அவர்கள் சென்ற மாதம் சென்னை மாகாணத்திற்குத் தருவிக்கப்பட்டு, பல இடங்களில் சொற்பொழிவாற்றும்படி செய்யப்பட்டதில் அவர் சொற்பொழிவிலிருந்து மிக மோசமான வாக்கியங்கள் காணப்பட்டதை வாசகர்கள் பல பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்.
அவற்றில் கவனிக்கத்தக்க ஒரு வாக்கியம் என்னவென்றால் "சென்னை மாகாணத்தில் சர்க்காரை ஆதரிக்க சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று இருந்து வருகின்றது" என்பது.
அதே மாதிரி தமிழ்நாட்டுக்கு வந்த மற்றொரு தோழர் சர்தார் சாதூல்சிங் என்பவர் "காங்கிரஸ் குதிரை போன்றது, மற்ற ஜஸ்டிஸ் கக்ஷி முதலியவைகள் கழுதை போன்றது" என்றும் பேசிவிட்டு போயிருக்கிறார். இவர்களைப் பற்றி நாம் பரிதாபப்படுகின்றோம். ஏனெனில் இவர்கள் தமிழ்நாட்டைப் பற்றியோ, ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியோ, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியோ ஒன்றும் அறியாதவர்கள்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் சர்க்கிஸ் மாஸ்டர்கள் மாதிரி வடநாட்டு ஆசாமிகளை சர்க்கிஸ் வளையத்துக்குள் ஆட்டுவிக்கும் மிருகங்களைப் போலப் பிடித்துக் கொண்டு வந்து ஆட்டுவிப்பதன் பயனாய் இம்மாதிரி அவர்கள் சரியாய் ஜீரணமாகாத ஆகாரங்கள் வாந்தி எடுக்கப்படுவது போல் கக்கிவிட்டுப் போக நேரிட்டதே ஒழிய, மற்றபடி வடநாட்டுத் "தலைவர்கள்" தங்கள் சுயபுத்தியுடனும் சுய அனுபவத்துடனும் சுயமரியாதையில் லக்ஷியம் வைத்தும் பேசின பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது.
இது போலவே முன் ஒரு தடவை தோழர் சர்தார் பட்டேல் என்று சொல்லப்படும் வல்லபாய் பட்டேலும், மற்றும் தோழர்கள் C.R.தாஸ், மாளவியா, லஜபதிறாய் முதலியோர்களும் நமது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காலத்தில் ஞானமில்லாமல் உளரிக்கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை நாம் வாசகர்களுக்கு மறுபடியும் ஞாபகமூட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.
தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குத் தங்கள் சொந்த போர்வை யுடனானாலும் சரி, காங்கிரஸ் போர்வையுடனானாலும் சரி பொது ஜனங்களிடத்தில் செல்வாக்கில்லாமல் முறியடிக்கப்பட்டும், தங்களது நயவஞ்சக தன்மைகளையும் சுயநலப் பித்தலாட்டங்களையும் பாமர மக்கள் அறிந்து அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் காலங் களிலும் மற்றும் வேறு இயக்கம் தோன்றி பார்ப்பனர்களின் சோம்பேறி வாழ்வுக்கு ஆபத்து வரும்படியான நிலை ஏற்படும் போதும் இப்படிப்பட்ட வடநாட்டு சோனகிரிகளைக் கூலிக்கு பிடித்துக் கொண்டு வந்து ஆட்டுவிப்பது அவர்களது பரம்பரை வழக்கமேயாகும்.
இவர்களில் சிலர் தென்னாட்டுக்கு வந்துபோன பின்பு பூர்வஞானம் ஏற்பட்டு தங்களது தப்பிதத்தை உணர்ந்து வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பதோடு தென்னாட்டு பார்ப்பனர்களையும் அளவுக்கு மீறிக் கண்டித்தும் இருக்கிறார்கள்.
தென்னாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி வடநாட்டுத் தலைவர்கள் இங்கு வந்து போனபிறகு கொண்ட அபிப்பிராயங்களை நாம் முன் பல தடவை எடுத்துக்காட்டி இருக்கின்றோம். ஆனாலும் இப்போதும் ஒரு தடவை எடுத்துக் காட்டுவது குற்றமல்ல என்றே நினைத்து சில குறிப்பிடுகின்றோம்.
விவேகானந்தர் கூறியதின் சுருக்கம் "பார்ப்பனர்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். அவர்கள் விஷத்தினால் பார்ப்பனரல்லாதார் அழிந்து போகுந் தருவாயிலிருக்கிறார்கள். இவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் பார்ப்பனர்கள் கக்கிய விஷத்தை தாங்களாகவே உருஞ்சிக் கொள்ள வேண்டும்" என்பதாக சொல்லி இருக்கிறார்.
தோழர் சர்.பி.சி. ரேய் அவர்கள் "பார்ப்பனர்களை வங்காளக் குடாக் கடலில் போடவேண்டும்" என்றும் சொன்னார்.
தோழர் C.R.தாஸ் அவர்கள் "எனக்கு சுயராஜ்ஜியம் கிடைத்து விட்டால் முதலில் இந்தப் பார்ப்பனர்களையும், பரிகாரிகளையும் ஒன்று படுத்திவிடுவேன்" என்றும் சொன்னதோடு, தான் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும், தலைவரையும் பற்றி பேசின சில வார்த்தைகளுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
லாலா லஜிபதிராய் அவர்கள் தென்னாட்டுக்கு வந்து போன உடன் தனது தவறை உணர்ந்து "சமூகத்தில் உள்ள ஆபாசங்களுக் கெல்லாம் மதமே காரணம்" என்றும் "கோவில்களுக்குள் மனிதத் தன்மை என்பதே கிடையாது" என்றும், "தமிழ்நாட்டைப் பொருத்த வரை தைரியமும், மன உறுதியும் கொண்ட எதற்கும் அஞ்சாத ஒரு சீர்திருத்தவாதி அவசரமாய் தேவை" என்றும் சொல்லியிருக்கிறார்.
தென்னாட்டைப் பற்றி அ, ஆ கூட தெரியாத தோழர் காந்தியும் கூட பார்ப்பனரல்லாதாரைப் பற்றி கண்டபடி உளரிவிட்டு கடைசியாகத் தன்னை கன்னியாகுமரி கோவிலுக்குள் விட மறுத்த பிறகே "கோவில்கள் குச்சுக்காரிகள் குடிசை" என்று சொன்னதுடன் "பிராமணர்கள் செய்த அக்கிரமங்களுக்கு அதன் பயனை அனுபவிக்க வேண்டியது அவசியம் தான்" என்று சொன்னார்.
பண்டித மாளவியாவும் தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் கோவிலுக்குள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஆகியவர்களுக்குத் தனி தனி இடம், அதாவது கோவிலுக்குள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்குத் தனிக் கோவிலே, அதாவது கோவில் விஷயத்தில் தனித் தொகுதியே இருக்க வேண்டும் என்றும், இதனால் எல்லாம் தேசியம் கெட்டுப் போகாதென்றும் சொன்னதோடு, ஜாதி உயர்வு தாழ்வு இருந்தாக வேண்டும் என்றும் அதை அழிக்க இதற்கு முன் எத்தனையோ பேர் எவ்வளவோ பாடுபட்டும் ஜாதி இன்னமும் உயிருடனிருந்து வருகின்றதென்றும், அது யாராலும் அசைக்க முடியாதென்றும் சொல்லிவிட்டுக் கடைசியாக தென்னிந்தியாவில் ஜாதியை ஒழிப்பதற்கு மாத்திரமல்லாமல் கடவுளைக் கூட அழிக்க ஒரு இயக்கம் தோன்றி இருக்கின்றதென்றும் பரிகாசமாய் பேசிவிட்டுப் போனார்.
போகும்போது இங்கு அவருக்கு நடந்த மரியாதைகளைப் பார்த்த பின்னர், அங்கு போன பிறகு தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்களைப் பற்றி நீலிக் கண்ணீர் வடித்துப் பேசவும் அவர்களுக்குக் கோவில் பிரவேச உரிமை விஷயத்தில் வழவழ என்று பேசவும் வேண்டிய தவசியம் ஏற்பட்டு விட்டது.
அது போலவே தோழர்கள் பூலாபாய் தேசாயும், சர்தார் சிங்கும் சீக்கிரத்தில் தங்கள் தப்பிதத்தை அறிந்து திருத்திக் கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் அவர்கள் இங்கு வந்த சமயம் உண்மைகளை எடுத்துக்காட்ட சந்தர்ப்பமில்லாமல் போனது விசனிக்கத்தக்கதே யாகும். என்றாலும் பொருப்பும், சுயமரியாதையும் உள்ள மக்களாய் இருந்தால் இந்தப்படி தங்களுக்கு பரீøக்ஷ இல்லாத ஒரு இடத்திற்கு வந்து பார்ப்பனர்களின் கையாளாகவும், ஆயுதங்களாகவும் இருந்து கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிக் கொடுத்ததைக் கக்கிவிட்டும் போயிருக்க மாட்டார்கள். இதிலிருந்தே காங்கிரசில் இருக்கும் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களுடைய யோக்கியதையும், நாணையப் பொருப்பும், சுயமரியாதையும் எவ்வளவு எப்படிப்பட்டது என்பதை உணரலாம்.
உண்மையிலேயே சுயமரியாதை இயக்கம் சர்க்கார் ஆதரவு பெற்ற இயக்கமா என்பதை அறிவும், நாணையமும், நடுநிலைமையும் உள்ள ஒவ்வொருவரையும் சிந்தித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.
ஏதாவது ஒரு இயக்கமோ, ஒரு கொள்கையோ பார்ப்பனர் களுக்கு விறோதமாகவோ அவர்களுடைய சோம்பேறிப் பிழைப்புக் குக் கெடுதியாகவோ இருந்தால் அதை யோக்கியமான முறையில் சமாளிக்க அவர்களுக்கு யோக்கிய சக்தி இல்லாமலிருந்தால் அவைகளை ஒழிக்க அவர்களுக்கு ஒரே ஆயுதம்தான் உண்டு. அதாவது "தேசத் துரோகம், தேசியத்துக்கு விரோதம், மதத் துரோகம், சர்க்காருக்கு அடிமை" என்பன போன்ற பெயர்களைச் சொல்லி அழிக்கப் பார்ப்பதுதான்.
இன்றைய சர்க்காரில் இந்தியாவில் சிறப்பாக சென்னை மாகாணத்தில் தேசத்துரோகமாய், தேசீயத்துக்கு விரோதமாய், சர்காருக்கு அடிமையாய், அதுவும் பரம்பரை அடிமையாய் இருந்து மக்களையும், நாட்டையும், நாட்டு செல்வங்களையும் பாழாக்கி வாழ்ந்து வருவது 100க்கு 90 பேர் பார்ப்பனர்களேயாகும்.
இன்றைய எந்த காங்கிரஸ்வாதி, தேசியவாதி, தேசத் தலைவர் ஆகியவர்களை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் சந்ததியார், பெண்டு, பிள்ளை, பெற்றோர் 100க்கு 95 பேர் சர்க்கார் அடிமையாய் இருந்து மக்களைக் காட்டிக்கொடுத்து, தேசியத்தைக் காட்டிக் கொடுத்து தேச செல்வத்தை கொள்ளை கொண்டு வயிறு வளர்த்து வாழ்ந்து வருவதை யாரும் பார்க்கலாம்.
வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு கூட்டம் தேசாபிமானமும், மற்றொரு கூட்டம் சர்க்கார் அபிமானமுமான தொழில்களில் ஈடுபட்டு வாழ்ந்து வருவதை உணர வேண்டுமானால் ஒவ்வொரு பார்ப்பனரும் அவரவர்கள் முன்பின் சந்ததிகளை கவனித்து அவர்கள் வாழ்க்கையைக் கவனித்தால் அவர்களே அறிந்து கொள்வார்கள். சர்க்கார் அடிமைக்கு விண்ணப்பம் போட்டு முயற்சித்து ஆகாயத்திற்கும், பூமிக்குமாகப் பாடுபட்டுப் பார்த்துக் கிடைக்காததாலும், திருப்தியடைய வழியில்லாததாலும்தான் பார்ப்பனர்கள் "தேசியவாதிகள்" "தேசிய பத்திராதிபர்கள்" "தேசாபிமானிகள்" ஆனார்களே ஒழிய, வேறு எப்படி தேசாபிமானிகள் ஆனார்கள் என்று அவர்கள் ஒவ்வொருவருடைய சரித்திரத்தையும் பார்த்தால் கண்ணாடியில் விளங்குவது போல் யாரும் எளிதில் அறிந்த கொள்ளலாம்.
இப்படிப்பட்ட யோக்கியர்கள் சுயமரியாதை இயக்கம், சர்க்கார் அடிமை இயக்கம், சர்க்கார் ஆதரவு பெற்ற இயக்கம் என்று சொல்லுவதற்கு சரியான பதில் சொல்ல அகராதியில் வார்த்தை இல்லையே என்றுதான் நாம் வருந்துகிறோம்.
பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை வையவும், தூற்றவும் பழிக்கவும், இழிவுபடுத்தவும் வேண்டுமானால் தாங்கள் யோக்கியர்கள் போல் மிதமான வார்த்தைகளால் விஷமத்தனமான விஷயங்களை எழுதிவிட்டு, பார்ப்பனரல்லாத கூலிகளைப் படித்து அவர்களுக்குக் கூலி கொடுத்து இழிவான முறையில் வையவும், எழுதவும் செய்து வருவதும் அவர்களது பரம்பரை வழக்கம் என்று இதற்கு முன் பல தடவை சொல்லி வந்திருக்கிறோம். இராமாயணம் முதலிய கதைகளையும் ஆதாரமாக எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம்.
உதாரணமாக சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்கவும், தோழர் ராமசாமியை வைது அவரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்யவும், காங்கிரசில் இருந்து பார்ப்பனரல்லாதாருக்கு 2000ரூ. கொடுத்து "தேசபந்து" என்னும் பத்திரிகையையும் ஆதரித்து வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அது போலவே இப்போதும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருடைய சில பத்திரிகைகளைப் பிடித்து 1000, 500 கூலியாகவும், லஞ்சமாகவும் கொடுத்து விஷமப் பிரசாரம் செய்யச் செய்து வருவது யாரும் அறியாததல்ல.
சுயமரியாதை இயக்கமானது இவைகளையெல்லாம் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்துதான் இரண்டில் ஒன்றுக்கு துணிந்து நிற்கின்றதே ஒழிய பயந்து நிற்கவில்லை என்றும், அது சுயமரியாதைக்காக மனித சமூக சுதந்திரத்துக்காக சர்க்காருக்கு மாத்திரமல்ல இன்னமும் இக்காலத்தில் ஒழுக்க விறோதம், நியாய விறோதம், தேசத் துரோகம் முதலிய பல காரியங்களுக்கும் அடிமை யாகத் தயாறாய் இருக்கிறது என்றும், இப்படிப்பட்ட சோம்பேறிகளும், சுயநலமிகளும், கூலிகளும், எதைச் சொன்னாலும் எப்படித் தூற்றினாலும் கவலையில்லை என்கின்ற நிலைமையில் தான் இருக்கின்றது என்றும் வினயத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(பகுத்தறிவு தலையங்கம் 02.09.1934)