சமீபத்தில் நடந்த திருப்பத்தூர் தாலூகா மகாநாட்டுக்காக வாணியம்பாடிக்குச் சென்றிருந்ததில் அங்குள்ள முனிசிபல் நிர்வாகம் மிக மோசமாய் இருக்கக் கண்டோம். முனிசிபாலிட்டியில் எப்பொழுதும் இந்து முஸ்லீம் உணர்ச்சி தகராறு இருப்பதால் அவ்விடத்திய அநேக முக்கிய காரியங்களை சரியாய் கவனிக்க முடியாமல் போகின்றதாய் தெரிகிறது. ஊர் ரோட்டுகள் மிக சீர்கேடாய் இருக்கிறது. சுகாதாரம் நடுத்தெருவில் ஜலதாரை (கசுமாலத் தண்ணீர்) ஓடுகிறது. ரோட்டின் இரு மருங்கும் கச்கூசாக உபயோகப் படுத்தப்படுகின்றன. வேறு பல உள்துரைப் புகார்கள் இருப்பதாகச் சொல்லப் படுவதைக் கவனிக்காவிட்டாலும், மத உணர்ச்சித் தகராறுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் கவனிக்காவிட்டாலும் இதன் பயனாகவே அல்லது வேராலோ நல்ல நிர்வாகம் கெட்டிருக்கிறது என்பது பிரத்தியட்சம். இதுசமயம் அங்கு காலரா பலமாக இருக்கிறது. 100 கேசுக்கு 80 கேசு இறந்து போகின்றது. இந்தக் கொடிய தொத்து வியாதிக்கு எவ்வித முயற்சி எடுத்துக் கொண்டதாகவும் காணப்படவில்லை. சுகாதார அதிகாரிகளைக் காணவே முடியவில்லை. தாலுகா ஜில்லா போர்டாவது கவனித்ததாகத் தெரியவில்லை.periyar 311இதுதவிர இந்து முஸ்லீம் ஜனசமூகம் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிசமமாய் இருந்தும் ரிவினியூ வரும்படியும் அதுபோலவே இருந்தும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை முஸ்லீம்களில் பகுதிதான் இருப்பதாகத் தெரிகின்றது. பெண்களுக்கு ஸ்தானமே ஒதுக்கப்படவில்லை. இந்தக் குறைகள் இந்துக்கள் என்பவர்கள் மனதில் புகைந்து கொண்டிருப்பதாலேயே நிர்வாகத்தில் கட்சியோ இல்லாவிட்டால் மனஸ்தாபமோ இருந்துவர காரணமாய் இருக்கிறது. மத வித்தியாசம் உள்ளவரை எங்கும் இப்படித்தான் இருக்குமானாலும் இவ்விதக் கட்சி மனஸ்தாபங்களும் நிர்வாக சீர்கேடுகளும் முதிர்ந்து பொதுஜனசமூகத்துக்கு பெருங்கெடுதிக்கு இடம் கொடாமல் இருப்பதற்காக சர்க்கார் இதை கவனித்து இவை உண்மை என்று உணர்வார்களானால் தயவு செய்து வாணியம்பாடி முனிசிபாலிட்டிக்கு உடனே ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டுமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தோழர் கனம் முதல் மந்திரி அவர்களும் இதை கவனிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை -15.10.1933)

Pin It