பன்னீர்செல்வம்
உயர் திருவாளர் றாவ் பகதூர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் முன்னமேயே வாசகர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம்.
ஆனால் அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்மந்தமான ஆட்சேபனைகளைக் கிளப்பி எதிர் அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாத காலம் அந்த தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார்கள்.
ஆனாலும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை.
ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்லவென்று எதிர் அபேக்ஷகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின்றார்கள். அதன் கதிரிம் அனேகமாய் முடிவில் இப்படியே தான் ஆகி மூன்று வெற்றி ஏற்படக் கூடுமென்று இப்போதே முடிவு கட்டி விடலாம்.
எலக்ஷன்கள் நடந்ததும் எதிர் அபேக்ஷகர் தனது திருப்திக்கும் தனது கட்சியார்களின் திருப்திக்கும் இம் மாதிரி ஆக்ஷேபங்கள் கிளப்புவதும் அநேகமாய் எங்கும் இயற்கையாகவே இருந்து வருகின்றது.
ஆனால் 100 -க்கு தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தேர்தல் ஆக்ஷேபங்கள் தோல்வி அடைந்தே வருவதும் சகஜமாகவும் இயற்கையாகவுமே இருந்து வருகின்றது.
எனினும் இம் மாதிரி சம்பவங்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி மகிழ்ச்சியடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் தோல்வி அடைந்தவர்கள் ஏமாற்றம் அடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் அளித்து வருவதும் அனுபவத்தில் கண்டதேயாகும். சுகமும் துக்கமும் மாறி மாறியும் தொடர்ந்து தொடர்ந்தும் வருவது இயற்கையேயாகுமன்றோ!
எம். கே. ரெட்டி
உயர் திருவாளர் திவான்பகதூர் எம். கே. ரெட்டியவர்களும் செங்கல் பட்டு ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கின்ற சேதியைக் கேட்க வாசகர்கள் மிகுதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.
திரு. எம். கே. ரெட்டி அவர்களின் ஜில்லா போர்டு நிர்வாகமும் திரு. பன்னீர்செல்வத்தின் நிர்வாகமும் பார்ப்பனரல்லாதார் சமூக நன்மையையும் சுயமரியாதைக் கொள்கையையே பெரிதும் தழுவி நடந்துவந்த காரணமே அவ்விரு போர்டு தலைவர் தேர்தலுக்கும் சற்று எதிர்ப்பும் சூக்ஷியும் பலமாய் இருக்க நேரிட்டது. ஆனாலும் அவ்விரு போர்ட் தலைவர்களும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டதானது நமது இயக்கத்திற்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.04.1930)