periyar 350திரு. ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:-

கனவான்களே! மேற்படிக் கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 4. 7. 29 ம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது.

மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்குகளுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகிறேன்.

நிற்க, மேற்படி 4-ந் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்டத் தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவதானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும், மனிதத் தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோதமானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறி விடும்பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர வேறு வழியில்லாததாலும், அது கமிட்டியில் விவாதத்திலிருக்கும் சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.

ஆனால் எதிர்பாராதச் சம்பவங்களால் அந்தச் சந்தர்ப்பம் எனக்கில்லாமல் போய்விட்டது. ஆதலால், இந்த நிலையில் நான் இந்தக் கமிட்டியில் என்னுடைய மெம்பர் பதவியையும், வைஸ் பிரசிடெண்டு பதவியையும் ராஜிநாமா கொடுத்து கமிட்டியிலுள்ள எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை. எனவே திரு.பிரசிடெண்டு அவர்களும், கமிட்டி மெம்பர் கனவான்கள் அவர்களும் தயவுச் செய்து எனது ராஜிநாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

குறிப்பு : ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் தாம் வகித்து வந்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் .

(குடி அரசு - அறிவிப்பு - 14. 07. 1929)

Pin It