periyar 336ராயல் கமிஷனுக்கு பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18-தேதி காலை 6-மணிக்கு “டிறா” என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள். அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதி நிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும் கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும் மற்றும் சென்னைப் பிரமுகர்களும் தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார் சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும், மகமதிய சமூகப் பிரதிநிதிகளும், ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும், வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும், மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும், பொது ஜனங்கள் சார்பாக அரசாங்கத்தில் மந்திரிகளாக நியமிக்கப்பட்ட மந்திரிமார்களும் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சகல திறப்பட்ட மக்களின் கூட்ட மும் ஏராளமாக வந்திருந்து ஒவ்வொரு பிரதிநிதி ஸ்தாபனங்களும் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து அநேக வகுப்பு மகாநாடுகளில் கமிஷனை வரவேற்கச் செய்த தீர்மானங்களையும் தெரியப்படுத்தி வரவேற்றார்கள்.

சைமன் துரையவர்களும் கமீஷன் சார்பாக இவ்வாடம்பரமானதும் பிரதிநிதித்துவமானதுமான வரவேற்பை ஏற்று அதற்குத்தக்க பதிலளித்த தோடு தங்களது நன்றியறிதலையும் தெரிவித்து அரசாங்க விருந்தினராய்ச் சிலரும் மந்திரிகள் விருந்தினராய் சிலரும் தனிப்பிரபுக்களின் விருந்தினர் களாகச் சிலரும் அவரவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவை தவிர மற்றும் அநேக பிரதிநிதித்துவ சபைகளினுடைய பத்திரங்களும் அழைப்புகளும் கமீஷனுக்கு ஏராளமாக இருந்தது என்றாலும் அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள கமீஷனர்களுக்கு போதிய சாவகாசம் இல்லை என்பதை முன்னமேயே அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டதின் மீது பல ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே, சென்னையில் தாங்கள் தான் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்றும் தங்கள் கருத்துத்தான் தேசமக்கள் கருத்தென்றும், தாங்களேதான் தேசத் தலைவர்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே விளம்பரம் செய்து கொண்டும் தங்களுக்குள் ளாகவே ஒருவருக்கொருவர் தலைவர் பட்டங்களை பரிமாரிக் கொண்டும் இருந்த - இருக்கின்ற - ஒரு சில ஆசாமிகள் கூடிக் கொண்டு சுமார் ஒரு வருஷகாலமாக பஹிஷ்காரக் கூச்சல் போட்டும் எவ்வளவோ சூழ்ச்சிகளும் விஷமப் பிரசாரங்களும் செய்தும் கடைசியாக சைமன் பஹிஷ்காரம் பொஸ் ஸென்று காலி வேட்டாய் போய் விட்டதுடன் சைமன் கமீஷன் வரப் போவதில்லை என்று தெரிந்த ஒரு தெருவில் நின்று தங்கள் செலவில் போட்டோ படம் பிடித்து தங்கள் தங்கள் பத்திரிகையில் போட்டுக் கொண்டதோடு பகிஷ்காரம் முடிவு பெற்றுவிட்டதென்றே சொல்லுவோம்.

ஒரு சமயம் பஹிஷ்காரக் கூச்சல்காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்ல வருவார்களானால் அவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பஹிஷ்காரக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களில் அதாவது, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஷாபிமகமது, குழந்தை, வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரம், இரத்தினசபாபதி, அமீத்கான், ஜெயவேலு முதலிய கூட்டத்தார்களை விட எந்த விதத்திலாவது அதாவது, தேசீயப் பொறுப்பிலோ ஒழுக்கத்திலோ தியாகத்திலோ செல்வத்திலோ குறைந்த யோக்கியதை உடையவர்கள் ஒருவராவது சைமன் கமிஷனை வரவேற்ற பதினாயிரக் கணக்கான கூட்டத்தில் இருந்தார்களா என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 24.02.1929)

Pin It