periyar and karunadhi 350நமது நாட்டுப் பார்ப்பனர்கள் மகாத்மாவைக் காட்டி காசு பறிக்கிறார்கள் என்று பொதுவாய் எழுதி வந்தோம். இப்போது அது வாஸ்தவமாகவே நடைபெற்று விட்டது. அதாவது திருச்சியில் ஒரு கொட்டகையில் மகாத்மாவைக் கொண்டுபோய் வைத்து பார்க்க வருகிறவர்களிடம் டிக்கட்டு போட்டு பணம் வசூல் செய்கிறதாக சங்கதி எட்டுகிறது.

மேடை ரூ. 25-க்கு மேல் ரிசர்வெட் ரூ.15 முதல் 25 வரை, முதல் வகுப்பு ரூ. 10 முதல் 15 வரை, இரண்டாவது வகுப்பு ரூ. 5 முதல் 10வரை, மூன்றாம் வகுப்பு ரூ. 2 முதல் 5 வரை என்பதாகவும், டிக்கட்டுகள் சாஸ்திரி & கம்பெனியிலும் வைத்தியா & கம்பெனியிலும் கிடைக்கும் என்பதாகவும் திருச்சி டாக்டர் ராஜனால் துண்டு நோட்டீசு வினியோகிக்கப்பட்டது நமது பார்வைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

 மகாத்மாவின் பிரசங்கமும் அவர் தரிசனமும் அவர் தாமதிப்பதும் சங்கராச்சாரி போடும் வரிக்கு மேல் போய் விட்டது. அது செலவாவதும் சங்கராச்சாரி செலவு செய்வது போலவே பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாகப் போய்விட்டது. நாம் மூடர்களாயிருக்கும் வரை நமக்கு சுயமரியாதை வரும் வரை இது நடந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு யார் என்ன செய்வது?

(குடி அரசு - கட்டுரை - 18.09 1927)

மகாத்மாவுக்கு முதலியாரின் நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மகாத்மா காந்திக்கு ஒரு நற்சாக்ஷி பத்திரம் வழங்கினார். அதாவது மகாத்மா தன்னைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறாராம். 5, 6´க்கு முன் தான் மகாத்மாவின் பிரசங்கத்தை மொழிபெயர்த்தது மகாத்மாவுக்கு இன்னம் ஞாபகத்திலிருக்கிறதாம். அதனாலேயே மகாத்மாவுக்கு நல்ல ஞாபகக் குறிப்பு இருக்கிறதாம்.

ஆனால் அதே மகாத்மா ஒருசமயம் சென்னைக்கு வந்த காலத்தில் ஸ்ரீமான் சர். தியாகராயர் வீட்டில் இறங்கி கொஞ்சநாள் தங்கியும் இருந்து விட்டு போனபிறகு ஒரு விஷயத்தில் சர். தியாகராயரைப் பற்றி மகாத்மாவை கேட்டபோது தமக்கு அவரைப் பற்றி தெரியாது என்று சொல்லி விட்டாராம், கொஞ்சநேரம் பிரசங்கம் மொழிபெயர்த்ததைப் பற்றி ஞாபகத்தில் வைத்திருந்த மகாத்மாவுக்கு தாம் இறங்கி கொஞ்ச நாள் இருந்தவர் ஞாபகத்திற்கு வராமல் போனது என்ன காரணமோ என்பதை ஸ்ரீமான் முதலியார்தான் சொல்ல வேண்டும், மகாத்மாவுக்கு ஞாபக சக்தி அதிகம் என்று தீர்மானிப்பதானால் பார்ப்பனரின் அடக்குமுறை சக்தி அதைவிட அதிகமென்றுதான் தீர்மானிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீமான் முதலியாரிடம் மாத்திரம் அதிக ஞாபகம் என்று சொல்ல வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 18.09.1927)

 

Pin It