periyar 600

தஞ்சை ஜில்லா போர்டைப் பற்றி பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் விஷமப் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள் என்பது பார்ப்பனப் பத்திரிகைகளைப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது. ஆனால், அதன் காரணம் என்ன என்பதை வெகு பேர்கள் அறியாமல், விஷமப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து போவார்கள் என்றே நினைக்கிறோம். தஞ்சை ஜில்லா போர்டுக்கு இப்பொழுது பிரசிடெண்டாய் இருக்கும் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்திற்கு முன் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் அதாவது ஸ்ரீமான் வி.கே. ராமாநுஜாச்சாரியார் என்பவர் பிரசிடெண்டாய் இருந்த காலத்தில் தஞ்சை ஜில்லா தாலூகா போர்டுகள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாகவும், பார்ப்பனர்கள் அக்கிரஹாரமாகவும், பார்ப்பனர்கள் சாப்பிடும் அன்ன சத்திரமாகவும் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. ஆனால், அந்தக் காலத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைப் புகழ்ந்தது வானம் கூட ஓட்டையாய்ப் போயிருக்கும். ஸ்ரீமான் பன்னீர் செல்வம் வந்த பிறகு பார்ப்பன தனி ஆதிக்கத்தை ஒழித்து எல்லோருக்கும் பங்கு இருக்கும்படி செய்து பார்ப்பனரல்லாதாருக்கும் சௌகரியமுண்டாகும்படி செய்திருக்கிறார். உதாரணமாக ஒரத்தநாடு சத்திரத்திலுள்ள ஒரு தர்மப் பள்ளிக்கூடமானது (அதாவது சாப்பாடு போட்டு
சம்பளமில்லாமல் சொல்லிக் கொடுக்கும் உயர்தரப் பள்ளிக் கூடம்) வெறும் பார்ப்பனப் பிள்ளைகளும் பார்ப்பன உபாத்தியாருமே அடைந்து இருக்கும்படி இருந்தது. இப்பொழுது எல்லா வகுப்புப் பிள்ளைகளும் சாப்பிடும்படியாகவும், உபாத்தியாயர்களாகும்படியாகவும் செய்யப்பட்டிருக்கிறது.

திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத காலேஜ் என்பது சாப்பாடும் போட்டு சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. இது முழுதும் அய்யங்கார் அக்கிரஹாரமாகவும் அய்யங்கார் பிள்ளைகள் சாப்பிடும் தர்ம சத்திரமாகவும் இருந்து வந்தது. இப்போது கொஞ்சம் பாகம் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் சாப்பிடவும், அய்யங்கார் அல்லாத பார்ப்பன உபாத்தியாயர்கள் பிழைக்கவுமாய் இருக்கிறது. மற்றும் பல பெண் பள்ளிக்கூடங்களும், பல சத்திரங்களும், பல உத்தியோகங்களும், பார்ப்பனரல்லாதாரும் பிழைக்கும்படி செய்யப்பட்டிருப்பதால் பார்ப்பனர்கள் ஒரே கூச்சல் போடுகிறார்கள். இதற்கேற்றார் போல், ராவணனைக் கொன்று விபீஷணனுக்கு பட்டம் தருவதாய் ராமன் வாக்களித்து ஆட்களைச் சேர்த்துக் கொண்டது போல் இங்கும் சில விபீஷணர்களுக்கு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் பட்டம் கட்டுவதாய் பார்ப்பனர்கள் வாக்குறுதி கொடுத்து அவர்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களது உதவியால் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தை ஒழித்து அய்யங்கார் ஆதிக்கத்தில் இருந்ததுபோல் தஞ்சை ஜில்லா போர்டையும் தாலூகா போர்டுகளையும் பார்ப்பன அக்கிரஹாரமும் அன்ன சத்திரமும் ஆக்கப் பார்க்கிறார்கள். மந்திரியும் இவர்களால் ஏமாற்றப்பட்டுப் போவார் போலவே காண்கிறது. இதற்கேற்ற விபீஷணர்கள் பலரும் பட்டத்திற்கு எதிர்பார்த்து தலையை நீட்டிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. பாமர ஜனங்கள் பைத்தியக்காரராயிருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கத்திற்கு யோகம்தான்.

(குடி அரசு - கட்டுரை - 09.01.1927) 

***

நல்ல இடி

சேலம் பார்ப்பனருக்கும் அவர்களது வால் பிடித்துத் திரிபவர்களுக்கும் நமது முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் நல்ல இடி கொடுத்ததாக தெரிந்து நாம் மிகவும் சந்தோஷப்படுகிறோம். ஆனாலும் காண்டா மிருகத்தோல் படைத்த அப்பார்ப்பனருக்கும் அவர்களது அடிமைகளுக்கும் அது கொஞ்சமாவது சொரணை உண்டாகுமா என்பதுதான் நமது கேள்வி?

அதாவது கனம் சுப்பராயனவர்களை சேலம் பார்ப்பனர்கள் தங்கள் டிக்கட் பாக்கட்டில் போடுவதற்காக “லிட்டரரி சொசைட்டி” என்கிற ஒரு பார்ப்பனக் கூட்ட நிலையத்தில் ஒரு கூட்டம் கூட்டி அவரை வானமளாவப் புகழ்ந்தும் இதற்கு முன் மந்திரியாய் இருந்தவர்களை ஆசைதீர வைதும் பேசினார்களாம். இதற்குப் பதிலளிக்குமுகத்தான் கனம் சுப்பராயன் இம்மாதிரி ஒருவரை, உத்தியோகம்விட்டுப் போனபின் வைவது இழிவு என்றும், நாளைக்கு என்னையும் இப்படித்தான் வைவீர்கள் என்றும், இப்படிச் செய்வது உங்களுக்கு யோக்கியதை அல்லவென்றும் சொன்னாராம். வைததில் பெருமை கொண்டவர்களும் வைததைக் கேட்டு ஆனந்தம் கொண்டவர்களும் வெட்கித் தலைகுனிந்தார்களாம். இதோடு இந்தப் புத்தியை விட்டு விடுவார்களா?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1927)

Pin It