மைசூர் அரசாங்கத்தில் பார்ப்பனரல்லாதார் விஷயம் கொஞ்சம் கவனிக்கப்பட்டு அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட்டு வருகிறது. இதை ஒழிக்க அங்கும் பல பார்ப்பனர்கள் பிரயத்தனப்பட்டு சட்ட மூலமாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத் தடுக்க தீர்மானங்கள் கொண்டு வந்த வண்ணமாயிருக்கிறார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டாம் என்பதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் சொல்லும் காரணம் எல்லாம் திறமையைப் பார்த்து உத்தியோகம் கொடுக்க வேண்டுமே அல்லாமல், வகுப்புக் கணக்குப் பார்த்துக் கொடுக்கக் கூடாது என்பதுதான். அப்படியானால் உலகத்தில் பார்ப்பனர்களைத் தவிர திறமைசாலிகள் வேறு வகுப்பில் இல்லை என்பதே இவர்களுடைய அபிப்பிராயமாய் இருக்கிறது. இந்த அகம்பாவம் என்றைக்குப் பார்ப்பனர்களிடமிருந்து ஒழிகிறதோ, அன்று தான் இந்தியாவில் பார்ப்பனர்களும் வாழலாம் என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அதில்லாமல் இருவரும் ஒத்து வாழ்வதென்பது முடியாத காரணம் என்றே சொல்லுவோம்.
நிற்க, எந்த உத்தியோகத்தில் பார்ப்பனரல்லாதாரைவிட பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? இதுசமயம் சென்னை மாகாணத்தில் எந்த உத்தியோகத்தில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் திறமை வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது? அல்லது ஒழுக்கத்திலாவது கண்ணியத்திலாவது பார்ப்பனரல்லாதார் எந்த விதத்தில் பார்ப்பனர்களை விட அதிகமாக குற்றம் சொல்லக் கூடியவர்களாயிருக்கிறார்கள்? காங்கிரஸ் என்கிற பார்ப்பனர் உத்தியோகம் சம்பாதிக்கும் இயக்கம் ஆரம்பிக்கு முன்பு நமது நாட்டில் 100 -க்கு 90 பேர் பார்ப்பனரல்லாதார்களாகவே உத்தியோகங்களில் அமர்ந்திருந்தார்கள். காங்கிரஸ் ஏற்பட்ட பிறகுதான் பார்ப்பனர் ஏகபோகமாய் இவ்வளவு அதிகமான உத்தியோகங்கள் உற்பத்தி செய்யவும் அடையவும் நேர்ந்தது . அதற்கு முன் திறமையைப் பற்றி பேச்சே இல்லாமலிருந்தது. ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி ஆனது’ போல் பார்ப்பனரல்லாதாருக்கு திறமை இல்லை என்று சொல்லக்கூட நமது பார்ப்பனர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. அல்லாமலும் பார்ப்பனர்கள் நமது நாட்டிற்கு வருமுன் இந்நாட்டின் ராஜிய பாரமே பார்ப்பனரல்லாதாரிடம் இருந்ததை நமது பார்ப்பனர்கள் நன்றாய் அறிவார்கள். அந்த ராஜாக்களிடம் இந்தப் பார்ப்பனர்கள் பிச்சை வாங்கி உண்டதற் கும் இன்னமும் ஆதாரம் வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க இப்போது திறமையைப் பற்றி பேசும்படியான ஆணவம் வந்து விட்டதானது பார்ப்பனரல்லாதாரின் பைத்தியக்காரத்தனத்தைக் காட்டுகிறது.
சர். சங்கர நாயர், சர். அப்துல் ரஹீம் போன்றவர்கள் எந்த பார்ப்பன ஜட்ஜிக்கு இளைத்தவர்கள்? ஸ்ரீமான் பி.வி. மாணிக்கம்நாயக்கர் எந்த பார்ப்பன இன்ஜினீயருக்கு இளைத்தவர்? ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா எந்த பார்ப்பன கலெக்டருக்கு இளைத்தவர்? டாக்டர் குருசாமி முதலியார் எந்த பார்ப்பன டாக்டருக்கு இளைத்தவர்? ஸ்ரீமான் சி. ஆர். ரெட்டி எந்த பார்ப்பன கல்வி இலாக்கா அதிகாரிக்கு இளைத்தவர்? சர். மகமது அபீ புல்லாவும், சர்.மகமது உசுமானும் எந்த பார்ப்பன நிர்வாக சபை மெம்பர்களுக்கு இளைத்தவர்கள்? ஸ்ரீமான் எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை எந்தப் பார்ப்பன கல்வியாளருக்கு இளைத்தவர்? டாக்டர் நாயர் எந்த பார்ப்பன தேசீயவாதிக்கு இளைத்தவர்? இவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வேண்டுமென்றே பிரகாசமடையாமல் செய்துவிட்டு அகம்பாவத்தாலும், அயோக்கியத்தனத்தாலும் திறமை, திறமை என்று பேசி இன்னமும் ஏய்க்கப் பார்க்கிறார்கள். ஆதலால் இத்திறமையை காட்டவாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பஞ்சமர்கள் என்று சொல்லப்படுவோர்கள் முதற் கொண்டு சற்று நமது பார்ப்பனர்களுக்கு அறிவுருத்த வேண்டியது சுயமரியாதை உள்ளவர்கள் கடமை என்றே சொல்லுவோம்.
(குடி அரசு - கட்டுரை - 26.12.1926)