மகா மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர் ஊராய் பிரசங்கம் செய்து வருகிறார். இந்த முறையில் கோயமுத்தூருக்கும் வந்து மாணவர் சங்கத்திலும் “வகுப்புவாதத்தால் ஏற்படும் தீங்கு” என்பதைப் பற்றி பேசியிருக்கிறார். வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயகக் கட்சியென்றும், தேசீயக் கட்சி என்றும் சொல்லிக் கொள்வது தகாது என்றும், இதைப்போல் இந்திய ராஜீயத் துறையில் அதிகமான கேட்டை விளைவிப்பது வேறெதுவுமில்லை என்றும் கூறுகிறார்.

periyar maniammai 600இதில் எவ்வளவு புரட்டுகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். முதலாவது, ஸ்ரீமான் சாஸ்திரி இந்திய மக்களின் சார்பாக பேசுவதற்கே யோக்கியதை அற்றவர் என்பதே நமதபிப்பிராயம். அவர் நமது சர்க்காருக்கு உள் உளவாயிருந்து தனக்குப் பெரிய அந்தஸ்தும் பட்டமும் பதவியும் பெற்றுக் கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும் பெரிய பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொண்டவர். அல்லாமலும், தேசத்திற்காகவும் ஜனநாயக தத்துவத்திற்காகவும் பாடுபட வந்த அவதார மூர்த்தியாகிய மகாத்மா காந்தியை ‘அராஜகர்’ என்றும், அவரை சும்மா வைத்துக் கொண்டிருந்தால் ராஜ்யமே கெட்டுப் போய்விடும் என்றும், சர்க்காருக்கு உபதேசித்து அவரை ஜெயிலில் வைக்க சர்க்காருக்கு உதவியாயிருப்பதற்காக பதவி பெற்றவர். ஜனநாயக தத்துவம் முறையே அடைவதற்காக பாரதமாதா முடிவு செய்து கொண்டு அதன் மக்கள் பதினாயிரக்கணக்கான பெயரை ஜெயிலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளைக்காரர்களுக்கு அனுகூலமாய்ப் பேசிக் கொண்டும், மகாத்மாவை அடக்கினால்தான் இவ்வியக்கம் அடங்குமென்றும் சொல்லிக் கொண்டு, தான் மேல்நாடுகளில் உல்லாசப் பிரயாணம் செய்து வெள்ளைக்காரருடன் விருந்துண்டு கொண்டு கேளிக்கையாயிருந்தவர்.

ஜனநாயக தத்துவத்திற்காக நாளிதுவரை ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாஸ்திரியாரால் ஒரு காதொடிந்த ஊசிக்கு சமானமான உதவியாவது உண்டா? வகுப்புவாதம் கூடாது என்று சொல்ல பிராமணருக்கு யோக்கியதை ஏது? பிராமணன் வகுப்புவாதத்தையே அடிப்படையாகக் கொண்டவன். எப்பொழுது ஒரு மனிதன் தான் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிறானோ அப்பொழுதே அவனிடத்தில் தன்னுடைய வகுப்பு உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் தன்னிலும் தாழ்ந்த வகுப்பு என்கிற வகுப்புவாதம் இருக்கிறதா இல்லையா? முதலில், தான் அதை விட்டு விட்டுப் பார்ப்பனர்களையும் அதை விடச் செய்த பிறகு வகுப்புவாதம் கூடாது என்று உபதேசிக்க வந்தால் அப்போது ஸ்ரீமான் சாஸ்திரியாருக்கு பேச உரிமை உண்டு. தங்கள் வகுப்பு உயர்ந்த வகுப்பு என்பதைப் பற்றியும் யாரும் ஆட்சேபிக்கக்கூடாது; அது அப்படியே இருக்க வேண்டும்; அதற்கு வேண்டிய பிரயத்தனமும் செய்யவேண்டும்; மற்றவர்கள் மாத்திரம் வகுப்பைப் பற்றிப் பேசக்கூடாது; தாழ்ந்த வகுப்பாராகவே இருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கனவு கண்டால் அதற்கு மற்றவர்கள் இடம் கொடுப்பார்கள் என்று சாஸ்திரியார் நினைக்கிறார் போல இருக்கிறது.

அல்லாமலும் பிராமணனால்தான் வகுப்புவாதம் ஏற்பட்டது. ஆதலால் அவனிடத்தில் இருப்பதை ஒழித்தால் தான் வகுப்புப் பிசாசு நம் நாட்டை விட்டுத் தொலையும் என்று நாம் சொல்லும் போது பிராமணன் வந்து இதில் நியாயாதிபதியாயிருக்க இடமேது? திருடனையே தன் திருட்டுக்கு நியாயாதிபதியாய் வைத்தால் அவன் தன்னை தண்டித்துக் கொள்வானா? அதுபோல் பார்ப்பனன் குற்றவாளி என்றால் பார்ப்பனனே வந்து நான் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லிக் கொள்ள பாத்தியமேது? சாஸ்திரியார் பார்ப்பனன் என்கிற முறையில் வேண்டுமானால் தன்னிடம் குற்றமில்லை என்று வாதாடிக் கொள்ளலாமேயொழிய, தான் நடு நிலைமைக்காரர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு உபதேசம் பண்ண யோக்கியதை ஏது? என்று தான் நாம் கேட்கிறோம். ஆனால் இதிலும் அதிகமான பார்ப்பன சூழ்ச்சிகளைக் கண்டு தேறியிருக்கும் கோவை பார்ப்பனரல்லாத மாணாக்கர் முன்னிலையில் பார்ப்பன சாஸ்திரியாரின் உபதேசம் “கொல்லத் தெருவில் ஊசி விற்கப் போனதற்கு சமானமேயொழிய வேறில்லை” என்பதே நமதபிப்பிராயம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.10.1926)

Pin It