இந்த நிகழ்ச்சி பெருமளவில் நம் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாறுபாடாகத் தோன்றலாம். இந்த முறை ஏன் மாற்றப்பட்டது? இதற்கு முன் நமக்கு எந்த முறை இருந்து வந்தது? எந்தக் காலம் முதற்கொண்டு இருந்து வந்தது? இந்த முறையின் தன்மை என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

periyar 392எனது ஆராய்ச்சி எனக்குப் பல பெரிய புலவர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், நண்பர்களாக இருந்து இருக்கின்றார்கள். அவர்களிடம் கேட்டும், அறிந்து இருக்கின்றேன்.

என்னுடைய ஆராய்ச்சிப்படி சொல்கிறேன். நம் இலக்கியம் முழுவதும் எந்த இலக்கியமானாலும் சரி, குறள், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலியவை யாவும் பார்ப்பனர்கள் வருகைக்குப் பின்தான் ஏற்படுத்தப்பட்டவை. நம் தமிழ் இலக்கியங்கள் யாவும் ஆரியர் இந்த நாட்டிற்கு வந்த பின் தான் தோற்றுவிக்கப்பட்டன. தமிழனுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி முறை இருந்திருக்க வேண்டுமானால், அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி முதலாவதாக யாருக்கு நல்ல பலன் அளிக்கிறது என்றால் பெண்களுக்குத் தான். பெண்கள் தான் பழைய முறை மூலம் அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு நிரந்தரமான அடிமையாவது தான் இந்தத் தத்துவம். இதனால் இந்த நாடு, சமுதாயம் பெண்களால் அடையும் நலன்களை அடைய முடியாமல் போய்விட்டது. பெண்களின் அடிமை நிலையை நினைத்தால் ஜாதிக் கொடுமையை விட, சமுதாயத்தில் இருக்கும் தீண்டப்படாதவர்களை விட கொடுமையானதாகும்.

இப்போது மாறுதல் நிகழ்ச்சியின் பயனாகப் பெண்கள் அடிமை நீங்கி, ஆண்களால் இந்த நாட்டிற்கு எவ்வளவு பயன் ஏற்படுகிறதோ அந்த அளவு பயன் பெண்களால் நாட்டிற்கு ஏற்பட வேண்டுமென்கிற தன்மை ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்கின்ற பெயரோ, திருமணம் என்கின்ற பெயரோ இல்லாவிட்டால் மீதி உள்ளவையாவும் வடமொழிச் சொற்களேயாகும். கல்யாணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கணவன் - மனைவியாக வாழச் செய்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு உரிய சொல் அல்ல. மங்களகரமான காரியம் என்று தான் அர்த்தம். விவாகம் என்ற சொல்லும் மேல் - கீழ் என்ற தன்மையை உடையதே தவிர, நிகழ்ச்சிக்குரிய சொல் அல்ல.

ஒரு காரியத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஏன்? எதற்காக? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

இந்தக் காரியத்திற்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. சொல் இல்லை என்றால், அதற்கு முன் இந்நிகழ்ச்சி நம்மிடையே இல்லை என்றுதான் அர்த்தமாகும். இப்போது காஃபி குடிக்கிறோம். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் காஃபி - காஃபி என்று தான் சொல்கிறார்கள். ஆனால், அது தமிழ்ச் சொல் அல்ல. ஆங்கிலச் சொல். ஆங்கிலச் சொல் மட்டும் அல்ல; 10- மொழிகளின் சொல்லாகும். கிரீஸ், ஸ்பெயின், ஃபிரெஞ்சு எல்லாம் சேர்ந்தது அய்ரோப்பிய மொழிகள்; அவை எல்லாவற்றிலும் காஃபி என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. அதையே தமிழிலும் அழைக்கிறோம்.

ஆரியனுக்கும் இந்தத் திருமண வழக்கம் இல்லை. மத்தியில் கொண்டு வந்து புகுத்திய முறையேயாகும். அதற்கு முன் ஆண் - பெண் இல்லையா? அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கேட்கலாம். இருந்தார்கள். ஆனால், இப்போது போல் அடிமையாக இல்லை. சுதந்திரமாக இருந்தார்கள். இந்த அமைப்பை வைத்துப் பெண்களைக் கீழ்மையாக்கி விட்டார்கள்.

நமக்கெல்லாம் புத்தி இல்லையா என்பீர்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். நமக்கெல்லாம் அறிவு இல்லை, மானம் இல்லை, புத்தி இல்லை என்பதற்கு (ஆரியன்) பார்ப்பான் வந்த பின்தானே நாம் "சூத்திரன்?" அதற்கு முன் நாம் "சூத்திரனாக" இருந்ததில்லையே. அரசியலில் இருக்கும் முதல்மந்திரி (திரு. பக்தவத்சலம்) சூத்திரன் என்பதற்குக் கவலைப்படவில்லையே! அதை ஒரு ராவ்பகதூர் பட்டமாகக் கருதுகிறாரே! கடவுள் அப்படிச் சொல்கிறார் - மதத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது - சாஸ்திரத்தில் இருக்கிறது என்று இந்த மூன்றையும் தான் எந்தக் காரியமானாலும் எடுத்துக் காட்டுகிறானே தவிர, என் அறிவு இப்படிச் செல்கிறது என்று எவனும் சொல்லுவதில்லையே!

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மூட நம்பிக்கை - முட்டாள்தன காரியங்களுக்கு மதம் - சாஸ்திரம் - கடவுள் - இவற்றைத் தான் காட்டுகின்றனர். பார்ப்பானின் தயவினால் தான் இன்று நம்மை மலம் தின்னாமல் வைத்திருக்கின்றான். நான் சொல்லுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இன்று உங்களை சாணியைத் தின்ன வைத்திருக்கின்றானா இல்லையா? பார்ப்பான் நம் வீட்டில் நடைபெறும் காரியங்கள், திவசம், சாந்திக்கு வந்தால் நமக்கு முன்னாலேயே சாணி, மூத்திரம், நெய், பால், தயிர் இவற்றைக் கலந்து "பஞ்சகவ்வியம்" குடி என்கிறான்! நம் மடையன் பயபக்தியோடு கையில் வாங்கி குடித்துவிட்டு, தலையில் கூடத் தடவிக் கொள்கிறான். இது மதத்தின் பெயரால் நடைபெறுகிறது தானே?

மனு தர்மம், பாரதம், இராமாயணம் இவற்றை நாம் படிக்கிறோம் என்றால் படிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். இவற்றின் மூலமே நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றான். நம் மக்களும் இதையே நம்பிக் கொண்டிருப்பதால் இன்றும் சூத்திரர்களாக, இழி மக்களாக இருந்து வருகின்றனர். இத்தன்மையால், இதில் மாற்றம் வேண்டுமென்று எவனுமே நினைக்கவில்லை. நாம் தான் முதன்முதலில் இதைப் பற்றிச் சிந்தித்து இதில் மாற்றம் வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். எதனால், எங்களால் மட்டும் இதைக் கூற முடிகிறது என்றால், கடவுள் - மதம் - சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது. ஆகவே தான் துணிந்து எங்களால் இவற்றை எல்லாம் எடுத்துக் கூற முடிகிறது.

உலக நாடுகள் எப்படி முன்னேறிக் கொண்டிருக்கின்றன? வெளிநாட்டில் உள்ளவன் சந்திர மண்டலத்திற்குச் சென்று திரும்புகின்றான். எல்லா ஜீவன்களையும் விடச் சிறந்த பகுத்தறிவு மனிதனுக்கு இருக்கிறது. மற்ற நாட்டு மக்கள் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி மிக விரைவில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நாம் இன்னும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத காரணத்தால் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். சூத்திரர்களாக பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கின்றோம்.

இன்னும் 10-ஆண்டுகளில் இந்த முறையே இருக்காது. எங்களின் கடைசி இலட்சியமும், அடுத்த இலட்சியமும் இதுதான். எதற்காக இந்தக் கணவன் - மனைவி முறை? இது இல்லாவிட்டால் என்ன கெட்டுவிடும்? மேல்நாடுகள் பலவற்றில் இந்த முறை இல்லையே! அதனால் அந்த நாடு என்ன கெட்டு விட்டது? இந்த முறை ஒழிந்தால் மற்ற மக்களுக்குத் தொந்தரவு அற்ற நிலை ஏற்படும். குடும்பக் கவலை இன்று பிறருக்குத் தொண்டு செய்யவும் முடியும்.

பெண்களுக்குப் பிழைக்க வழி இல்லை என்பதால் பெண்ணுக்கு ஆணின் துணை தேவை இருந்தது. பெண் வாழும்படியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் அவள் தேவைக்கு அவள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அப்பறம் எதற்குத் துணை தேவை?

பகுத்தறிவுவாதிக்கு எந்தப் பற்றும் இருக்கக் கூடாது. எந்தப் பற்று இருந்தாலும் அவன் பகுத்தறிவுவாதியாக முடியாது. பகுத்தறிவுவாதியாக வேண்டுமானால் அவனுக்குக் கடவுள்பற்று - மதப்பற்று - சாஸ்திரப்பற்று - தேசப்பற்று - மொழிப்பற்று எதுவுமே இருக்கக் கூடாது. மக்கள் வளரணும் - மக்கள் வளர்ச்சியடையணும் என்ற பற்றுத் தான் இருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் நிர்வாணமாகப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மனித சமுதாயத்திற்குக் கேடாக அமைந்திருக்கிற பெண்ணடிமை - மூடநம்பிக்கை - ஜாதி இழிவு - இவை ஒழிய வேண்டும். இவை ஒழிந்தால் தான் சமுதாயம் வளர்ச்சியடைய முடியும்.

இந்த மாறுதல் நிரந்தரமான மாறுதல் அல்ல இது 1966-ஆம் ஆண்டு மாடல். அவ்வளவுதான்! 1987-இல் இந்த முறை எப்படி மாறுமோ? 1980-இல் கணவன் மனைவி என்ற முறையே மாற்றமடையும். பெண்களுக்கு முழு சுதந்திரம் வந்தது என்றால் நிச்சயம் இம்முறை மாற்றமடைந்தே தீரும். அது முடியுமா என்பீர்கள்! இதுவரை ஆண்களுக்கு இந்த உரிமை இருக்கிறதா இல்லையா? இப்போது பெண்கள் 100-க்கு 20-பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் 10-ஆண்டுகளில் 100-க்கு 100-ம் படித்தவர்களாகி விடுவார்கள். அப்போது கட்டாயம் இந்த முறை மாற்றமடைந்தே தீரும். இந்த ஆட்சி ஒழுங்கான ஆட்சியாக இருப்பின் பகுத்தறிவையே ஒரு பாடமாக்கி இருக்கும்.

ஜாதியின் காரணம் தான் - மக்கள் மூட நம்பிக்கைக்காரர்களாக - இழிஜாதி மக்களாக - சமுதாயத்தில் கீழ்ப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு முக்கிய அடிப்படையாகும்.

மணமக்கள் கூடுமான வரையில் தங்கள் வரவிற்குள் செலவிடப் பழக வேண்டும். மனிதன் அயோக்கியனாவதே வரவிற்கு மேல் செலவிடுவதால் தான். மக்கள் ஆடம்பரமான வாழ்வை விரும்பக் கூடாது. சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். மற்றும் குழந்தைகள் பெறுவதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 100-க்கு 97-பேராக நாம் இருந்தாலும் 7- பேருக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை நடத்தக் கூடிய வருவாய் வருகிறது. மிச்சம் 90-பேருக்கு வயிற்றுக் கணக்குப் பார்த்துத் தான் மற்றும் பற்றாமல் வருவாய் வருகிறது. இந்த நிலையில் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் வருவாய் போதாமை ஏற்பட்டு அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, ஒன்றிரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவுவாதி கவலையற்று வாழ முடியும். பகுத்தறிவு அற்றவனுக்கு எவ்வளவு செல்வமிருப்பினும், கவலையும் அவனோடு இருந்து கொண்டுதான் இருக்கும்.

இதுவரை நடைபெற்ற ஆட்சி மனுதர்ம ஆட்சி. இப்போது நடைபெற்று வருவது மனித தர்ம ஆட்சியாகும். இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது இந் நாட்டின் பெருங்குடி மக்களான நம் கடமையாகும்.

----------------------------

02.09.1966- பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" 27.09.1966
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It