அன்பர்களே, நான் ஆரியர் - திராவிடர் என்ற வேற்றுமைகளையும் அதன் காரணமாக நாட்டிலேயுள்ள மடமைகளையும் எடுத்துக் கூறினால் நம்மிலே மிகப் பெரியவர்கள் என்று கருதப்படும் சிலர் ஆரியராவது திராவிடராவது என்று அலட்சியம் செய்கின்றனர். நான் கூறுகிறேன் பார்ப்பனர் உயர்ந்த ஜாதி என்பதால்தானே அவர்கள் பாடுபடாமலேயே கஷ்டப்படாமலேயே சுகம் அனுபவிப்பதும், அதே சமயத்தில் பாடுபட்டும், கஷ்டப்பட்டும், வரி கொடுத்தும், சுருங்கக் கூறின் நாட்டின் வாழ்வுக்கு அஸ்திவாரமான காரியங்களைச் செய்து வரும் நாட்டுக்குரியவர்களாகிய நமது இனத்தவர்கள் அதாவது திராவிடர்கள் - சூத்திரர் என்ற காரணத்தால் இழிவு படுத்தப்பட்டு வருகிறோம். இதைத்தவிர பார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது?  
 
இவ்வித வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்று எங்களை விட வேறு யார் கவலைப்பட்டு வருகிறார்கள். அக்காலத்திலேயிருந்த ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, மகான்களோ, கவலைப்படாதிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, இக்காலத்திலும் அதற்கு யார் பாடுபடுகின்றனர். 
  
கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளர செய்தார்களா?

சோஷலிஸ்டுகள் தானாகட்டும், உண்மையிலேயே, மக்கள் சமூதாயத்திலே சமதர்மம் நிலவ வேண்டுமானால் அதற்கானவற்றை செய்தார்களா? ஏதோ காங்கிரசின் பலம் சரியாதிருக்க அதற்கு முட்டுக் கொடுக்கும் வஸ்துக்கள் போலவே இந்நாட்டு சோஷலிசமும் இருந்து வருகிறதேயன்றி அதனின் உண்மைத் தத்துவம் வளர்க்கப்படுகிறதா?
  
தீவிரவாதிகளெனப்படும் கம்யூனிஸ்டு - சோஷலிஸ்டுகளின் நிலையே இவ்வாறு இருக்கும்போது நாம் காங்கிரசாரைப் பற்றி கூறத் தேவையேயில்லை. 
 
ஆனால், இவர்களுக்கெல்லாம் மக்களின் உண்மையான விடுதலைக்கு ஏற்ற மார்க்கங்கள் எவை எவை என்பது தெரியாததா? தெரிந்தும் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்றால் பொது மக்களிடத்திலே செல்வாக்கு இருக்காது. ஓட்டு வராது. அரசைக் கைப்பற்ற முடியாது என்று கருதியே பொது மக்களின் காதுக்கினிய வார்த்தைகளைக் கூறி அவர்களது கருத்தை அழிய வைக்கின்றனர்.
 
ஆனால் திராவிடர் இயக்கமானது கேவலம் பட்டம், பதவி, சட்டசபை வேலை, அதற்காக ஓட்டு ஆகியவைகளை லட்சியம் செய்யாமல் மனித சமூதாயத்திலே வளர்ந்துள்ள மடமையை ஒழிக்க சற்ற கடினமான மருந்து கொடுத்து வருகிறோம். நாங்கள் மக்களின் எதிர்ப்புக்கும், அதனால் ஏற்பட்ட பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியதால்தான் இன்றைய நிலையிலாவது மக்கள் ஓரளவுக்க அறிவு பெற்ற வருவதோடு, நான் எந்த கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினேனோ அது இன்று மக்கள் சமூதாயத்திலே வேறுன்றி விட்டது.
  
அச் சக்தியை இனி, எவராலும் அசைக்க முடியாது; அழிக்கவும் முடியாது; அழிக்கவோ, அசைக்கவோ முற்படுபவர்கள் யாராவராயிருப்பினும், கடவுளாயிருந்தாலுங்கூட தாங்களாகவே தங்களுக்கு அழிவு தேடிக் கொண்டவர்களாவார்களென்பதை எடுத்தக்காட்ட விரும்புகிறேன்.
 
மடைமையை மக்கள் சமூதாயத்திலே பரப்பி ஏமாற்றிப் பிழைத்து வந்த கூட்டத்தினர் மீது அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள் - ஜாதி - மதம் - புராணம் - இதிகாசங்கள் மீது இன்று மக்களுக்கு அவ்வளவு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை பார்ப்பனீயத்தை ஆயுதமாகக் கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து விரைவில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
 
இனி எங்களை வகுப்பு வாதிகள், தேசத் துரோகிகள், கடவுள் துரோகிகள் என்று எவரும் கூற முடியாது ஏன்?
 
இதுவரை, வகுப்பு வித்தியாசங்களைப் பிறவியின் பேரால் தனிப்பட்ட உரிமையை, ஜாதியின் பேரால் சலுகையை அடைந்துவந்த பார்ப்பனர்களே இந்நாட்டில் வகுப்புவாதிகளாயிருக்கின்றனர். வகுப்புவாதம் நம் நாட்டிலே தலைவிரித்தாடுவதற்குக் காரணமே பார்ப்பனர்கள்தானென்று நமது நிதி அமைச்சர் கனம் கோபால் ரெட்டியார் அவர்கள் சட்டசபையில் பார்ப்பன அம்மையார் ருக்குமணி லட்சுமதி அவர்கள் கேட்ட கேள்விக்கு விவரமாகப் பதிலளித்துள்ளதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
 
அவர் மட்டுமல்ல; மற்றொரு அமைச்சர் கனம் பக்தவச்சலம் கூட "இதுவரை பார்ப்பனர்கள் தங்கள் வகுப்பின் நலனுக்காக தனி உரிமையைப் பெற்று வாழ மிக சாமர்த்திமாக வகுப்புவாதத் தன்மையுடன் நடந்து கொண்டு அதே சமயத்தில் மற்றவர்களை வகுப்புவாதிகள் என்று கூறி வந்துள்ளனர்" என்று சில நாட்களுக்கு முன் சென்னை மவுண்ட்ரோட் சர்க்கார் மாளிகையிலே நடைபெற்ற பத்திரிகை செய்தியாளர்கள் மாநாட்டிலே கூறியிருக்கிறார்.
 
இவ்விதமாக காங்கிரஸ் மந்திரிகளும் பொதுவாக மக்களும், உணர ஆரம்பித்துவிட்டனர். யார் வகுப்புவாதிகளென்பதை.  
 
அதே போன்று கோயில் - மடங்கள் ஒழிய வேண்டுமென்று நான் கூறி வந்த போது என்னையும் எங்கள் இயக்கத்தாரையும் நாத்திகர்கள் என்று கூறி நாட்டிலே எங்களுக்குப் பொல்லாப்பை உண்டாக்கியப் பார்ப்பனர்களே! நீங்கள் இனி அத்துறையிலும் மக்களை ஏமாற்ற முடியாது. சர்க்காரே அச்சட்டத்தைக் கொண்டு வர முனைந்துவிட்டனர். முன்னாள் பிரதமர் ஓமத்தூரார் ஆட்சியின் கடைசி கட்டத்தில் கொண்டு வரப்பட்ட கோயில் - மட சொத்து பாதுகாப்பு மசோதாவின் போது பார்ப்பனர்களும் அவர்களின் கையாட்களான இரண்டொரு திராவிட விபீஷணர்களும் கொடுத்தத் தொல்லை எவ்வளவு? இதை நாட்டினர் அறிந்ததுதானே! எனினும் மக்களிடத்தில் அம்மசோதாவுக்கு பேராதரவு இருந்து வருகிறதென்பதைப் பார்க்கும்போது எங்களைக் கோயில் - மட எதிரிகள் என்று கூறி எங்களது கொள்கைக்கு அழிவுதேட எவராலும் முடியுமா?
 
எனவே, நான் கூறிவந்த கொள்கைகள் இனி ஒவ்வொன்றாக நடைபெற்றாக வேண்டிய கால நிலையை நாடும் மக்களும் அடைந்து விட்டனர். காலமாறுதல் மனப் புரட்சி என்னும் வேகத்திலே பழமையெனும் பித்தலாட்டங்கள் இனி எதிர்த்து நிற்க முடியாது என எச்சரிக்கிறேன். 
 
----------------------------------------

தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 13-04-1949 அன்று ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 19-04-1949
அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It