இந்த விழா நிகழ்ச்சி ஓட்டல் ஆண்டு விழாவாகும். இன்று ஓட்டல்களின் அவசியம் பற்றிப் பேசுவது முக்கியம். நம் நாட்டில் மதத்தின் பேராலும், ஜாதியின் பேராலும் ஒன்று சேருவதற்கு இல்லாமல் மக்கள் சிதறுண்டு கிடக்கின்றனர். இதனால் மதத்தையும், ஜாதியையும் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர் உயர் வாழ்வு வாழ்கின்றனர். பார்ப்பனர் உழைப்பினாலோ, ஒழுக்கத்தினாலோ வாழவில்லை. தங்களை மேல்சாதியாக ஆக்கிக்கொண்டதால்தான் அப்படி வாழ்கின்றனர். கோயில்கள், ஓட்டல்கள், அரசியல் காரியம், உத்தியோகம், படிப்பு, ஆசிரியர் வேலைகள் ஆகியவை எல்லாம் அவர்கள் கையில்தான்!

மற்றும் மதத்தலைவர்கள், ஆச்சாரியார் (இராஜாஜி) என்பவர் எல்லாரும் அவர்கள் கையில். மிஞ்சியது இழிசாதிதான் - இதுதான் நம் கையிலுள்ளது.

இந்தக் கீழ்ச்சாதியை ஒழிக்கப் பெரும் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. கீழ்ச்சாதிக்காரர்களிடம் ஒற்றுமை இல்லாததனால் ஏதோ இது சீக்கிரத்தில் முடிவதில்லை என்றாலும் இந்தக் கிளர்ச்சியின் காரணமாக மக்களிடம் ஓர் அளவு உணர்ச்சி வந்துதான் உள்ளது.

நம் சமூதாயத்தின் அவமானம் இரண்டு காரியங்களில் உள்ளது:

(1) பார்ப்பான் மணியடிக்கும் கோயிலில் போய் சாமி கும்பிடுவது. 

(2) பார்ப்பான் வைத்திருக்கும் ஓட்டல்கள்தான் உயர்வு என்று கருதி மானங்கெட்டத்தனமாக அங்கு பொய்ச் சாப்பிடுவது.

எங்களுடைய பிரச்சாரம் நடைபெற்றும் இன்னும் பார்ப்பான் ஓட்டலும், கோயிலும் இருந்துதான் வருகின்றன என்பதன் காரணம் நம் மக்களுக்குச் சரியானபடி அறிவு உணர்ச்சி ஏற்படவில்லை என்பதால்தான்.

இவை இரண்டும் என்று மாறுகின்றனவோ அன்றுதான் சாதி ஒழியும். படித்தவர், பட்டதாரி, அரசியல்வாதிகளாக இருந்தபோதிலும் இப்படி ஏன் இழிவு ஏற்படும்படியான காரியத்தில் இறங்குகின்றோம் என்று எவனும் சிந்திப்பதில்லை.

தான் ஈனசாதியாக இருப்பது பற்றி எவனாக இருந்தாலும் சிறிதளவாவது கவலை வேண்டாமா? பெரிய பதவியில் உள்ளவர்களாகவோ, அரசியல்வாதியாகவோ, மந்திரியாகவோ யாராய் இருந்தாலும் தான் ஈனசாதி என்று ஆக்கப்பட்டு இருப்பது பற்றிக் கவலை வேண்டாமா? இவற்றை ஒழிக்கத் திராவிடர் கழகம் ஒன்றுதான் பாடுபடுகின்றது.

திராவிடர் கழகத்தில் பார்ப்பான் ஓட்டலில் போய்ச் சாப்பிடக் கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்ப்பான் ஓட்டலில் உள்ள 'பிராமணாள்' என்று எழுதப்பட்ட போர்டை அழித்தோம். இதனால் ஓர் ஓட்டலில் மறியல் பண்ணி 1000- பேர் வரை சிறை சென்றோம். இப்படி இருந்தும் இன்னும் பார்ப்பான் ஓட்டல் இந்த நாட்டில் உள்ளதே ஏன்?

இன்று தமிழர்களும் சிறந்த முறையில் உணவுவிடுதிகள் நடத்தித் திறமையுள்ளவர்கள் ஆகிவிட்டனர்.

எங்கள் ஈரோட்டில் சிறந்த ஓட்டல் ஒரு முஸ்லிம் ஓட்டல்தான். இன்னும் பல பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) ஓட்டல்கள் 10, 15-க்கு மேல் உள்ளன. பார்ப்பனர்கள் எல்லாரும் நசித்துவிட்டனர். நம்மவர்களால் நடத்தப்படும் ஓட்டலை நம்மவர்கள் ஆதரிக்க வேண்டியது அவசியம்.

-------------------------------

26.08.1960 அன்று தஞ்சாவூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை” 01.09.1960
அனு்ப்பி உதவியவர் :- தமிழ் ஓவியா

Pin It