எவனாவது உங்களைப் பார்த்து, ஒதுங்கிப் போ என்று சொன்னால், ஏனப்பா, நான் ஒதுங்க வேண்டும்; என் காற்றுப்பட்டால் உனக்கு என்ன காலராவா வந்துவிடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப் போய் விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால், அவனையும் சும்மா விடாதீர்கள்.

என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி எட்டிக் குதிக்கிறாய்? நான் என்ன மலமா, தொட்டால் நாற்றமடிக்க? அல்லது நான் என்ன நெருப்பா, தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்கிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள் இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா, அல்லவா என்று! நீங்கள், உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத - உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள். கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது. எஜமான் கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்? என்று நீங்கள் கேளுங்கள்.

நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள்; பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல.. ஆகவே, ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல்ஜாதி, அவன் ஏன் முதலாளி, நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள். கிஸான் தலைவர்களும் அர சாங்கத்தின் ஏவலாளர்கள்; மிராசு தாரரின் கையாள்கள்; பெரிதும் சுயநலமி கள்; நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள். அரசியலில் வோட்டுரிமை பெறவும், சமுக இயலில் இழிவு நீங்கவும், பொருளாதாரத்தில் முதலாளி ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள்.

நமது மக்கள் மாத்திரம் பெரிதும் பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா? யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ, கடவுளை நாம் மதிக்கவில்லை என்றோ, அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ நம்மீது குற்றம் கூற முடியுமா? அப்படியிருக்க, மற்ற சமு தாய மக்களுக்குள்ள வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன? இவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து. எனது வாழ்நாளில் கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான் ஆசைப்படுவதால், இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன்.

இழிவின் மூலகாரணத்தை நீக்குக

நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும். நம் ஊரில் காலராவோ, மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும் அசுத்தங்களை யும், கசுமாலங்களையும் நீக்கி, அந்நோய் பரவவொட்டாமல் செய்கிறோமோ, அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில கசுமாலங்களையும் நீக்க வேண்டும். நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும் மதந்தான் காரணமே தவிர, கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார். கடவுள் மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம். ஏனப்பா திருடினாய்? என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன செய்யட்டுமுங்க; கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று சொன்னால், மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா? எவனாவது ஒரு போக்கிரி உங்கள் பாக்கெட்டில் கைபோட் டால், எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது சும்மா இருந்து விடுவீர்களா?

கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு கிறானா? கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு, பணம் தேடா மல் தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க, நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்? நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை. யாரோ, சில சுயநல நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும், மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும் சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி, நம்மை ஒப்புக் கொள்ளும்படி சொன்னால் நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ன குற்றம் செய்தோம்?

நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக் கடவுள் சூத்திரனாகப் படைத்தார்? நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம் செய்வதும்? நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்? அப்படியிருக்க, நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு, சோம்பேறி வாழ்வு நடத்திய பார்ப்பான், எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்? பாடு பட்டு உழைத்த நம்மவர், எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த இழிவிற்குக் கடவுள்தான் காரணம் என்று உங்களுக்குத் தோன்றினால், அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம்; அதை உணராமல் நீ நன்றி மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய். பாடுபடாத உன்னை யும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர்ஜாதி ஆக்கிவிட்டாய்; ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந் திருக்குமானால், அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள். கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள் அஞ்சாதீர்கள்; அப்படி ஒன்று இருக்குமானால், அது அர்ச்சகருக்கே சரியாய்ப் போய்விடும். நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

----------------------------------------

தந்தை பெரியார் -- “விடுதலை”, 29.2.1948

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It