அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்: ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?

----------------------

தந்தை பெரியார், "குடிஅரசு" 28.10.1944

**** 

யோசித்துப் பாருங்கள்

மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் `பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான். ஆனால், மிருகம், பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு, பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும், கொத்தியும் துரத்தி விடுகின்றன.

அவற்றைப்பற்றிய கவலையோ, ஞாபகமோ கூட அவற்றுக்குக் கிடையாது.

மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம்; இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால், அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும், கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும், கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு, இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால், கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும், அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

----------------------

தந்தை பெரியார் "உண்மை", 14.8.1971

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It