சென்ற மாதம் 22 -ந் தேதி பாட்னாவில் கூடிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தையும், அதைப்பற்றி மகாத்மாவின் தனி அபிப்பிராயத்தையும் நிதானமாய் யோசனை செய்து பார்த்தோம். அவற்றுள் காணப்படும் தத்துவத்தை சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரஸை சுயராஜ்யக் கட்சியார் வசம் ஒப்படைத்து விடவேண்டும் என்பதாக முடிவு செய்துக்கொண்டு, அந்தப்படியே ஒப்புவித்துவிட்டாரென்றுதான் சொல்ல வேண்டும்.

தீர்மானத்தின் சாரம் என்னவென்றால் நான்கணா கொடுத்தவர்களெல்லாம் காங்கிரஸ் மெம்பராகலாம். காங்கிரஸில் பதவி வேண்டியவர்கள் காங்கிரஸ் காரிய சமயங்களில் கதர்கட்டிக் கொண்டிருக்க வேண்டும். சட்ட சபை முதலிய தேர்தலுக்கு நிற்கிறவர்கள் சுயராஜ்யக்கட்சியாரின் தயவைப் பெறவேண்டும். இந்தத் தீர்மானத்தின் மேல் மகாத்மாவின் அபிப்பிராயமோ, இதற்குச் சம்மதமில்லாதவர்கள் காங்கிரஸை விட்டு விலகிக்கொள்ள வேண்டுமேயல்லாமல், உள்ளே இருந்துகொண்டு சுயராஜ்யக் கட்சியின் வேலைகளுக்கு இடையூறாயிருக்கக் கூடாதென்பதுதான். அத்துடன் பழைய நிலை ஒன்றும் மாறவில்லையென்றும், நிர்மாணத்திட்டம் பாதிக்கப்பட வில்லையென்றும் கூறுகிறார். மற்ற விஷயங்களைப்பற்றி நாம் அதிகக் கவலைப்படாவிட்டாலும் நிர்மாணத் திட்டம் பாதிக்கப்படவில்லையென்பதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறோம். ஏனெனில் பாட்னா காங்கிரஸின் அதிகாரத்தை சுயராஜ்யக் கட்சியார் கையில் முற்றிலும் ஒப்படைத்தாகிவிட்டது என காந்தியடிகளே அக்டோபர் 1 - ந் தேதி “யௌவன இந்தியாவில்” கூறியிருக்கின்றார்.

சுயராஜ்யக் கட்சியாருக்கோ நிர்மாணத் திட்டங்களாகிய கதரிலும், தீண்டாமையிலும் முழு நம்பிக்கையுமில்லை. இந்த நிலைமையில் நிர்மாண திட்டம் எப்படிப் பாதிக்கப்படவில்லையென்பது நமக்குப் புரியவில்லை. சுயராஜ்யக் கட்சியினரல்லாத காங்கிரஸ் வாதிகளுக்கோ சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் நம்பிக்கையில்லை. இருந்தால் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்திருப்பார்கள். தங்களுக்கு நம்பிக்கையில்லாததும் தேச நன்மைக்கு ஏற்றதல்ல என்று நினைப்பதுமான திட்டத்தை தேசத்தில் நடத்துவிப்பதற்கான முயற்சிகள் செய்யப்படுவதை, காங்கிரஸில் இருக்க வேண்டுமே என்னும் ஒரு காரியத்திற்காகச் சகித்துக் கொண்டிருப்பதைவிட, அதை எதிர்க்க வேண்டுமென்றும், அவசியமுள்ளவர்கள் காங்கிரஸை விட்டு வெளியில் போய் தங்கள் மனசாக்ஷிப்படி நடந்து கொள்ளலாமென மகான் சொல்லுவதை காங்கிரசும் ஒப்புக்கொள்ளுமானால் அப்படி செய்வது மேலானதென்றே நினைக்கிறோம்.

அதற்கடுத்தாற்போல், நிர்மாணத்திட்டத்தில் ஒரு பாகமாகிய கதரை உத்தேசித்து நூற்போர் சங்கம் ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பெரும்பாலும் மாறுதல் வேண்டாதாருக்கும், ஒத்துழையாதார் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கும் தேச நன்மையை உத்தேசித்து அதிக திருப்தியைக் கொடுக்குமென்பதில் ஆக்ஷபனையில்லை.

ஆனால், சுயராஜ்யக் கட்சியார் இதையாவது ஒழுங்குபெற நடக்க விடுவார்களாவென்பதுதான் நமது சந்தேகம். நூற்பதில் நம்பிக்கையில்லாதவர்களும் நூற்பதைக் கேவலமாகக் கருதுபவர்களும் கதரில் நம்பிக்கையில்லாதவர்களும் உறுதிமொழியில் கையெழுத்திட்டு, உள்ளே வந்து புகுந்து இதிலும் சிறிது சிறிதாக மகாத்மாவை விட்டுக்கொடுத்துக் கொண்டே போகச்சொல்லுவார்களோவென்று நாம் சந்தேகப்படாமலிருக்க முடியவில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை, நூற்போர் சங்கம் ஏற்படுத்தியதால் நிர்மாணத் திட்டத்தில் ஒரு பாகமாகிய கதர் திட்டம் பாதிக்கப்படவில்லையென்று சொல்வதானாலும் தீண்டாமை விலக்குத் திட்டம் சுயராஜ்யக் கட்சியார் கருத்துப்படியேதானே மறைந்து போய்விட்டது. பெல்காமில் மதுவிலக்கு மறைந்தது. பாட்னாவில் தீண்டாமை விலக்கு மறைந்தது. இனி கதரின் தலையெழுத்து எந்த ஊரில் முடியப்போகிறதோ தெரியவில்லை. ஆனாலும், சுயராஜ்யக் கட்சியார் அதை ஒழிக்கவும் ஒரு ஊர் மனதில் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் செய்ய வேண்டியது என்னவென்பதை யோசிக்க வேண்டும். நம் நாட்டில் சுயராஜ்யக்கக்ஷியாரில்லாமல், காங்கிரஸ்காரருக்குள்ளேயே சுயராஜ்யக்கக்ஷியை ஆதரிக்கிறவர்களும், அதன் திட்டமானது தேசத்திற்கு கெடுதியை விளைவிக்கக்கூடியதென்று நம்பி காங்கிரஸ் அதன்வழி செல்லவிடாமல் தடுத்து, உண்மையான வழியில் நிறுத்த வேண்டுமென்று அந்தரங்க சுத்தியுடன் வேலை செய்பவர்களுமிருக் கிறார்கள். இதில் யார் பெரும்பான்மையோர், சிறுபான்மையோர் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களிருவருக்கும் காங்கிரஸில் இடமிருக்கின்றதா? இல்லையா? இரண்டாவதவர்களுக்கு இடமில்லையென்ற தீர்மானம் ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டியது என்பதைப் பற்றியும் அல்லது தனிச் சங்கமொன்று கண்டு அதன் மூலமாக உண்மை ஒத்துழையாமைத்திட்டத்தையும் நிர்மாணத்திட்டத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்வதா? என்கிற விஷயத்தைப் பற்றியும் கஞ்சீவரம் மகாநாட்டிலும், கான்பூர் காங்கிரசிலுமே நாம் முடிவு செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். இது விஷயத்தை தமிழ் நாட்டிலுள்ள தேசீயவாதிகளும் தேசத்தொண்டர்களும் ஆழ்ந்து யோசித்து ஓர் முடிவுக்கு வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

லாலாஜி அவர்களும் தமது “பீபிள் ” பத்திரிகையில் பாட்னா தீர்மானங்களை ஆக்ஷபித்து விரிவாக எழுதியிருக்கின்றார்.

(குடி அரசு - தலையங்கம் - 11.10.1925)

Pin It