ஆங்கிலேயர் ஆட்சியில் 1843 ஆம் ஆண்டின் அடிமை ஒழிப்புச் சட்டம் V மற்றும் 1861 ஆம் ஆண்டின் இண்டியன் பீனல் கோடு சட்டம் XIV ஆகியவற்றின் மூலம் “சண்டாளர்கள்'' என அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டபூர்வ விடுதலை கிடைத்தது என்றாலும் நடைமுறையில் அவர்களுக்கு விடுதலை இல்லை. சமூக ரீதியில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். இந்நிலையில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் 20 ஆம் நாள் கோவை மாவட்டம், அரசம் பாளையத்தில் அயோத்திதாசர் பிறந்தார். இவர் இயற்பெயர் காத்தவராயன்.
இவர் சிறு வயதாக இருந்தபோதே இவரின் தந்தை கந்தசாமி தமது இருப்பிடத்தை நீலகிரிக்கு (ஊட்டி) மாற்றினார். இவருக்குக் கல்வி போதித்த குருவின் பெயர் அயோத்திதாசர். குருவின்பால் கொண்ட அன்பின் காரணமாகத் தன் பெயரை அயோத்திதாசர் என பெயர் மாற்றம் செய்தார்.
1870இல் தனது 25ஆவது வயதில் “அத்வைதானந்த சபை'' ஒன்றைத் தொடங்கி தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்துச் சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். மலையினப் (தோடர்) பெண்ணைக்கலப்பு மணம் செய்து கொண்டார்.
பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் “இந்து'' என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தார். இந்த அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் “சாதியை'' ஏற்றுக் கொண்டதாகப் பொருள் என்றார்.
இவர் சில காலம் இரங்கூனில் (பர்மிய நாடு) வாழ்ந்தார். இங்கு தனது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அவரது துணைவியாரும் நோயினால் இறந்து போயினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரிக்குத் (ஊட்டி) திரும்பியவர், தனது உறவினர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார்.
1881 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, தாழ்த்தப்பட்டவர்களை "ஆதித் தமிழன்' என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார். சாதியைச் சொல்லி அழைக்கும் காலம் அது. சாதி தான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தது. சாதியின் பெயரால் அழைக்கப்பெற்ற தமிழரை சாதியற்ற தமிழர்களாக பதிவுசெய்தார்.
1882 ஆம் ஆண்டு “திராவிடர் கழகம்'' என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்த ஜான் ரத்தினம், 1885 ஆம் ஆண்டு “திராவிட பாண்டியன்'' என்ற இதழைத் தொடங்கினார். அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று – தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்.
1986 ஆம் ஆண்டு “ஆதித்தமிழர்கள்'' (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.
1890 ஆம் ஆண்டு நீலகிரியில் “திராவிட மகாஜன சபை'' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்தார். திராவிட மகா ஜன சபை சார்பில் 1891 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்திப் பல தீர்மானங்களை இயற்றி அதனைக் காங்கிரசு கட்சி செயலாளருக்கும் (அப்போது இருந்த ஒரே கட்சி) ஆங்கிலேய அரசுக்கும் அனுப்பி வைத்தார். அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடத்தக்கது. “பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வலியுறுத்தியது. பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி கோரியது பொது கிணறுகள் மற்றும் குளங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி கோரியது ஆகியவைகளாகும்.
1892 ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மகா ஜன சபை மாநாட்டில், நீலகிரியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்று குரல் கொடுத்தார். இதன் மூலம் அங்கு கலந்து கொண்ட ஆதிக்கச் சாதியினரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். மேலும் அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். பதில் சொல்ல முடியாத ஆதிக்க சாதியினர் அவரை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுத்தனர்.
பிரம்ம ஞான சபை ஆல்காட் அவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தாழ்த்தப்பட்டோருக்குச் சென்னையில் 5 பள்ளிக் கூடங்களை நிறுவி அவர்கள் கல்வி கற்க வழிவகுத்தார். 1902 ஆம் ஆண்டு தென்னிந்திய பவுத்த சாக்கி சங்கத்தை ஏற்படுத்தினார். 1907 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 19 ஆம் நாள் “ஒரு பைசாத் தமிழன்'' என்ற பெயரில் ஒரு வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில் தொடங்கி வெளியிட்டார். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டுமென அப்போது கோரிக்கை வைத்தார்.
1908 ஆம் ஆண்டு இதழின் பெயரைத்”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார். தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் தமிழன் இதழ் மூலம் பிராமணிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூக நீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார்.
குறிப்பாக மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆள வேண்டும். சுதந்திரம் அளித்தால், அதனை மண்ணின் மைந்தர்களிடமே வழங்க வேண்டும். நேற்று குடியேறியவர்களையும் முன்னர் குடியேறியவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்களிடம் (ஆரியர்கள்) ஆட்சியை வழங்கினால். நாடு பாழாகிச் சீர் கெட்டுவிடும் என்று எழுதினார்.
இவரின் தந்தையின் தந்தை கந்தப்பன் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தவர். பழைய ஓலைச் சுவடிகள், தமிழ் ந>ல்கள் ஏராளம் வைத்திருந்தார். நமக்குக் கிடைத்த “திருக்குறள்'' இவரின் தாத்தா பாதுகாத்து வைத்திருந்த நூல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அயோத்திதாசர் தனது தாத்தா கந்தப்பனைப் போலவே சிறந்த மருத்துவராக, சிறந்த தமிழ்ப் பண்டிதராக விளங்கினார்.
அயோத்திதாசர், தமிழ் நாட்டின் பகுத்தறிவு இயக்கத்திற்கு முன்னவராக இருந்தார். பார்ப்பனர்களுக்கு அடிமை இந்துக்கள். இந்துக்கள்தான் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சூத்திரர்கள் அல்ல. அவர்களுடைய வேதம், புராண நூல், கோயில், சாதி முதலியன தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமானது அல்ல. தாழ்த்தப்பட்டோர் ஒருவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று பிரகடனம் செய்தார். அயோத்தி தாசரே தமிழகத்தில் “நாம் தமிழர்'' என்னும் உணர்வை ஏற்படுத்தியவர் ஆவார். அவர் தமிழர்களுக்கு மொழி உணர்வை ஊட்டினார்.
தந்தை பெரியார் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பகுத்தறிவு சமதர்ம பிரச்சாரத்தைத் தொடங்கியவர் அயோத்திதாசர் ஆவார்.
திரு.வி.க. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டார். அயோத்திதாச பண்டிதர் தன் சித்த மருத்துவத்தில் அவரைக் காப்பாற்றினார். இருப்பினும் அதை மறந்து மதத்தின் மீது தான் வைத்திருந்த பற்றால் அயோத்திதாசரை எதிர்த்ததை வருந்தி அயோத்திதாசர் 1914 ஆம் ஆண்டு மே திங்கள் ஐய்தாம் நாள் மறைந்த போது அவரைப் பாராட்டிக் கீழ்கண்டவாறு திரு.வி.க. பதிவு செய்துள்ளார்.
“பண்டிதர் வாழ்வை நீத்தபோது யான் ஈமம் வரை சென்று திரும்பினேன். அயோத்திதாசர் என் குடும்ப மருத்துவர். அவர் தம் சங்கம் என் மத வெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று''
அம்பேத்கர் புத்த மதம் மாறுவதற்கும், அயோத்திதாசர் அவர்களின் ஆழ்ந்த கருத்துக்களே காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அயோத்திதாசரின் சிந்தனைகளைப் போற்றுவோம். அவர் போற்றிய பௌத்தத்தை நிலைநாட்டுவோம். நாம் தமிழர்களாக வாழ்வோம்.