ஆத்மா என்கின்ற விஷயத்தைப் பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும், உலகமே என்ன கருத்துக் கொண்டிருந்தாலும் அதை லட்சியம் செய்யாமல், நாம் நம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றோம். அதாவது, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி ஆகியவைகளை உடையதல்ல என்பதோடு, அது பெரிதும் அர்த்தமற்ற ஒரு வார்த்தை என்றே நமக்கு காணப்படுகிறது. இங்கிலீஷ் – தமிழ் அகராதியில் பார்த்தாலும் ஆத்மா என்பதற்கு இங்கிலீஷில் (Soul) ‘சோல்' என்றும், ‘சோல்' என்றால் அறிவு – யோசனை – ஆசை பிறக்குமிடம், ஊக்கம், உள் சக்தி, மனித வர்க்கம், உயிர் என்ற பொருள்கள் காணப்படுகின்றன.

தமிழ் அகராதிகளிலும் அதுபோலவே ஆத்மா அல்லது ஆன்மா என்றால் காற்று, அறிவு, உடல், உயிர், பிராணன், மூளை, முயற்சி, பிரம்மன், சுபாவம் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன. இந்த வார்த்தைகளில் இருந்து விளக்கப்பட வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான் ஆகும். பிராணன் அல்லது உயிர் என்பதற்குதான் அர்த்தம் விளங்க வேண்டியிருக்கின்றது. மற்ற வார்த்தைகள் எல்லாம் தானே அர்த்தம் புரியும்படியாயிருக்கின்றன. ஆகவே, பிராணன் என்பது என்னவென்று பார்த்தால், அது ஒரு காற்று – பிராண வாயு, இருதயத்தில் இயங்கிக் கொண்டிருப்பது என்பதாகத்தான் அகராதியில் காணப்படுகிறது.

இது இங்ஙனமிருக்க, இப்போது புழக்கத்தில் ஆத்மா என்றால், அது சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்து என்றும்; அது சூட்சும வஸ்து என்றும்; அதற்குப் பிறப்பு, இறப்பு இல்லை என்றும்; அது மனிதன் இறந்த பின்பு வெளிப்பட்டு மறுபடியும் சரீரம் எடுப்பது என்றும்; மற்றும் அது சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை – சரீரத்தை விட்டுப் பிரிந்து பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கிறதென்றும்; மற்றும் எத்தனையோ விதமாக அதைப் பற்றிப் பல மதங்களில் பலவிதமாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றதாய் அறிகின்றோம்.

உதாரணம் என்னவென்றால், அது மனிதனுக்குள் இருந்து மனித சரீரத்திற்கு வேறாய் ‘என் சரீரம்' என்று சொல்வதன் மூலம் – சரீரத்திற்கும் வேறுபட்டதென்றும் சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள் காட்டி, அந்த ஆத்மா சரீரம் விட்டுப் பிரிந்த பிறகு அடைய வேண்டிய, அடையக்கூடிய பலன் ஆகியவைகளைப் பிரதானமாகக் கருதி அதற்குத் தகுந்தபடி, அதற்காகவே மனிதன் வாழ வேண்டியது அவசியமென்று சொல்லப்பட்டு – அந்த மாதிரி ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையே மதங்கள் போதிக்கின்றன என்றும், அதற்காகவே உலகத்தில் மனித கோடிகளுக்கு அவசியமென்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்து, இந்து ஆகிய மதங்களில் பவுத்தம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான் ஆத்மாவையும், ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.

மனிதன் என்பதின் தன்மை விளக்கம் ‘தான்' ‘நான்', ‘என்' என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளேயாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை – ‘நான்' என்று சொல்லிக் கொள்ளும்போதும், ‘எனக்கு', ‘என்னுடைய' என்று சொல்லிக் கொள்ளும்போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகிறது? என்பதைக் கவனித்தால், ஆத்மத் தன்மை என்பது தானாகவே விளங்கும்.

அதாவது ஒரு மனிதன் ‘நான்' என்பதில் அந்த மனித சரீரத்தின் எந்தப் பாகம் தனித்து இருந்து நான் என்கின்றது? அல்லது, அந்த உடல் மொத்தமுமா அல்லது சரீரமில்லாமலா? சரீரத்தில் எதுவரை ‘நான்' என்கின்ற உணர்ச்சி இருக்கிறது? சரீரத்திலிருந்து எது போய்விட்டால் ‘நான்' என்பது போய்விடுகின்றது? என்கின்ற கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் ஒழிய ‘நான்' என்பது விளங்காது.

இந்த முறையில் நான் என்பதைக் கவனிக்கும் போது என் சரீரம், என் உயிர், என் ஆத்மா, என் ஆவி, என் ஜீவன், என் மனம், என் அறிவு, என் புத்தி, என் எண்ணம், என் சித்தம், என் கடவுள், என் ஆண்டவன், என் பிராணன், என் பிராணவாயு, என் சூட்சம சக்தி என்பன போன்ற – அதாவது, மனிதன் அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்பவைகளாகிய எது எதை நாம் மனிதனாக, ஆத்மாவாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றோமோ அவைகளை எல்லாந் தன்னில் இருந்து தனிப்படுத்தி அவைகளோடுகூட ‘என்' என்பதைப் பேசுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, என் (நான்) வேறு, மேற்கண்ட மற்றவைகள் எல்லாம் வேறு என்பதாக நினைக்கும்படியாக இருக்கின்றது. ஆதலால், இவைகள் எல்லாம் மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய ‘நான்' என்பது அல்ல என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

இந்த நிலையில் மனிதனாகிய நான் என்னும் தன்மை உணர்ச்சி செய்த காரியங்களுக்காக – நான் அல்லாத அதாவது என் ஆத்மா என்பதாகிய ஒரு வஸ்துவோ, ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ, ஆகிய சூட்சும ஜீவன் என்பது எப்படி அந்தப் பயனை அனுபவிக்க முடியும்? அனுபவிப்பதுதான் எப்படி நியாயமாகும்? நான் செய்த காரியத்திற்கு ஆத்மாவைத் தண்டிப்பதோ, கண்டிப்பதோ, சன்மானமாகியவைகளைக் கொடுப்பதோ எப்படிக் கடவுளின் நீதியாகும்? என்கின்றதான விஷயம் மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.

‘குடி அரசு' கட்டுரை – 21.4.1945

 

Pin It