30.4.25 தேதியில் திருச்சிராப்பள்ளி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் திருவாளர் மு.கா. விஸ்வநாதம் செட்டியார் அவர்கள் அக்கிரா சனத்தின் கீழ் சேரன் மாதேவி குருகுலத்தை சீர்திருத்த பிராமணரல்லாதாரின் மகாநாடு நடைபெற்றது. அடியில் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின :

(1) சேரமாதேவி குருகுலத்துக்குப் பணவுதவி செய்தது ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களை நம்பியேயாதலால், ஐயரவர்கள் பணங் கொடுத்தவர்களைக் கூட்டி ராஜினாமாக் கொடுக்க வேண்டியது நியாயமாயிருக்க, அவ்வாறு செய்யாமல் அங்கு வேலை செய்பவரிடம் தமது தலைமை ஸ்தான ராஜினாமாவைக் கொடுத்ததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

(2) ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவே சிறிதும் அதிகாரமில்லாத சிலர் அதனை ஏற்றுக்கொண்டதோடும் அமையாது குருகுலக் கிளர்ச்சிக்கே பெருங் காரணமாயிருந்த ஸ்ரீ மகாதேவய்யரவர்களைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்ததை இக்கூட்டம் பலமாகக் கண்டிக்கிறது.

(3) குருகுல நடைமுறையானது நேரான வழியில் நடைபெறவில்லையாதலால், அதனைத் திறம்பட நடத்துவதற்குப் பின்வரும் கமிட்டியை இக்கூட்டம் அமைக்கிறது. இக்கமிட்டியாரிடம் குருகுல சம்பந்தமான சகல பொறுப்புக்களையும் ஒப்புவித்துவிட வேண்டுமென்றும், இதற்கு ஐயரவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இணங்காராயின் வாங்கிய பணத்தைக் கேட்பவர்கட்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்றும், ஐயர் அவ்வாறு செய்யாவிட்டால், ஐயரவர்களிடமிருந்து குருகுலச் சொத்துக்களைப் பெறுவதற்குரிய முறைகளை இக்கமிட்டியார் அநுஷ்டிக் கலாமென்றும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது. கமிட்டி அங்கத்தினர்கள் பின்வருமாறு :

ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடு, வயி.சு.ஷண்முகம் செட்டியார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், மு.காசிவிஸ்வநாதம் செட்டியார், ராய.சொக்கலிங்கம் செட்டியாரை இக்கமிட்டிக்கு காரியதரிசியாகவும் நியமிக்கிறது.

(குடி அரசு - 02.05.1925)

Pin It