தமிழ்நாட்டு அருந்தவப்புதல்வர் ஸ்ரீமான் கிருஷ்ணசாமி சர்மா இம்மாதம் 24 - ந் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்குக் காஞ்சியிலுள்ள தமது இல்லத்தில் காய்ச்சலினால் இறந்துவிட்டாரென்ற செய்தியைக் கேட்க ஆற்றொணாத் துயர்க்கடலில் மூழ்கினோம். தேசம் தற்பொழுதுள்ள நிலைமையில் பாரதத்தாயின் உண்மை மக்கள் ஒவ்வொருவராக மடிந்து வருவது நாட்டின் தீவினையேயன்றி வேறல்ல. நமது சர்மா அவர்கள் ஏனைய தேசபக்தர்களைப் போன்று தனது வாழ்நாளில் வேறு ஒரு தொழிலிலிருந்து தேசசேவைக்குக் குதித்தவரன்று. மாணவராக இருக்கும்பொழுதே தேச சுதந்திரத்தில் நாட்டம் உடையவராய் தமது வாலிபகாலத்திற்கு முன்பே தியாகத்தின் வாயிலாய்ச் சிறைவாசம் ஏற்றார். சிறைச்சாலைக் கைதிகளை இக்காலத்தைப் போலல்லாது கொடுமையாகவும், இழிவாகவும் நடத்திவந்த காலமாகிய 1908-ம் ஆண்டிலேயே மாதக்கணக்கில்லாமல் வருடக்கணக்காய் தண்டனை அடைந்தார்.

சிறையினின்றும் வெளிவந்ததும் மீண்டும் தேசத்தொண்டிலேயே ஈடுபட்டு உழைத்ததனால் யுத்த காலமாகிய 1917- ஆண்டில் ஒருவருட காலம் வாய்ப்பூட்டப்பட்டிருந்தார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்ததின் பயனாக நமது அரசாங்கத்தாருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்து ஓராண்டு சிறையில் வதிந்தார். அவர் அரசியல் நூல்கள் எழுதுவதில் மிகத் தேர்ச்சி உடையவர். தற்பொழுது நமது கிராம மக்கள் அரசியல் அறிவுபெற அவரது நூல்களே ஆதாரமாகும்.

அவர் அகில இந்திய காங்கிரஸ் சபையின் அங்கத்தினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் சபையின் நிர்வாக அங்கத்தினராகவும் இருந்து காங்கிரஸிற்கு அரிய தொண்டாற்றி வந்திருக்கின்றார். கிலாபத்துக்காகவும் அதிக சேவை செய்துள்ளார். ஒத்துழையாமையின் ஒவ்வொரு தத்துவத்திலேயும் அவர் உண்மையான நம்பிக்கை கொண்டவர். பெல்காம் காங்கிரஸில் ஒத்துழையாமையை அடியுடன் ஒழிக்கும்வரை பூரண ஒத்துழையாதாரராகவே இருந்து முடிவுவரை தமது தொண்டை ஆற்றி வந்தவர். காங்கிரஸின் தற்கால நிர்மாணத் திட்டமாகிய கதர், தீண்டாமை இவ்விரண்டையும் மேடைத் திட்டமாய்க் கொள்ளாமல் உண்மைத் திட்டமாகவே கருதி மனப்பூர்வமாக ஏற்று உழைத்தவர். குருகுல விவாதத்தில் பிராமண சமூகத்தாரிலேயே நமதண்பர் சர்மா ஒருவர்தான் தனது அபிப்பிராயத்தை தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறியவர். இப்பேர்ப்பட்ட ஓர் பக்தரை, தமிழ்நாடு தனது சோதனை காலத்தில் இழந்தது பெருத்ததோர் நஷ்டமாகும். சர்மாவின் குடும்பத்தாருக்கு எமதனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைக!

குடி அரசு - இரங்கலுரை - 28.06.1925

Pin It