திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரைவில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதாவது அச் சமஸ்தானத்துத் திவானான ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணபிள்ளையவர்களை சமஸ்தானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாக தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம்.

“இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டியதென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சமஸ்தான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமையை சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்ததால் கலகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாதவர்கள் அந்த ரஸ்தாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்றபொழுது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம் இந்த வித்தியாசத்தைப் போக்க வேண்டுவது அவசியமென்று யான் அபிப்பிராயப்படுகிறேன்” .

இவ்வண்ணமாக திவான் அவர்கள் அபிப்பிராயம் கொடுத்த பிறகு, கூடிய விரைவில் மகாராணி அவர்களுடைய அனுகூலமான ஸ்ரீமுகம் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இதிலிருந்தே நமது முயற்சிகளை விட்டுவிட வேண்டுமென யாரும் நினைத்தல் கூடாது. திருவாங்கூர் அரசாங்கத்தாரிடமிருந்தே ஒருவேளை அரைகுறையான ஸ்ரீமுகம் வெளியாயினும் ஆகலாம். ஏனெனில் இரண்டு கட்சியாரையும் சமாதானப் படுத்த வேண்டுமென நினைத்து அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ததை யாம் அறிவோம். அம்மாதிரி திருடருக்கும் - திருட்டுக் கொடுத்தவருக்கும் நல்லவர்களாக வேண்டுமென நினைத்து ஏதாவது கொஞ்சம் இடம் வைத்துக் கொண்டு மேற்சொல்லியபடி ஸ்ரீமுகம் வெளியாகுமேயாகில் பூரண வெற்றி பெறும்வரை நமது நிலையினின்றும் தளரக்கூடாது. ஒருவேளை பூரண வெற்றி கிடைத்துவிடினும் அதனுடன் உலகத்தினிடை இம்மாதிரி நிறைந் துள்ள அக்கிரமங்களெல்லாம் ஒழிந்து விட்டனவென்று நினைக்கக் கூடாது. எங்கு எங்கு இவ்விதக் கொடுமைகள் உள்ளனவோ ஆங்காங்குச் சென்று நமது சத்தியாக்கிரகக் கொடியை நாட்டி இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க அஹிம்சையுடன் பாடுபடுதல் வேண்டுமென்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.06.1925

Pin It