VI

இந்த விஷயம் குறித்து மகாபாரதத்திலும் கூறப்பட்டிருக்கிறது. மனுதான் சிருஷ்டி கர்த்தா என்ற கோட்பாட்டை அது விவரிக்கிறது:

ambed 350 2வனபருவத்தில் (முயிர், தொகுதி I, பக்கங்கள் 199-201) கூறப்பட்டிருப்பதாவது:

“மனு என்ற ஒரு மாபெரும் ரிஷி இருந்தார். அவர் வைவசுவதனின் புதல்வர். ஆற்றலிலும், மனத்திடத்திலும், வாழ்வு வளத்திலும், கடுமையாக தவம் செய்வதிலும் தம்முடைய தந்தையையும் பாட்டனையும் விஞ்சியவர். பதரியில் இரு கைகளையும் மேலே உயர்த்தியவாறு, ஒற்றைக் காலில் நின்றபடி கடுமையாகத் தவம் செய்தவர். அது மட்டுமல்ல, தலைகீழாக நின்றபடி, கண் இமைக்காமல் 10,000 ஆண்டுகள் தவம் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

ஒரு சமயம் அவர் நனைந்து போன கந்தை துணி உடுத்தி, சிக்கு பிடித்த தலை மயிருடன் சிரிணி ஆற்றங்கரையில் ஏதோ பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, ஒரு மீன் அவரிடம் வந்து பின்வருமாறு கூறியது: ‘மாமுனிவரே, நான் ஒரு சின்னஞ்சிறு மீன்; வலிமை மிக்க பெரிய மீன்களைக் கண்டு நான் பயப்படுகிறேன். அவற்றிடமிருந்து நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். பலமான மீன் பலவீனமான மீனை விழுங்கி விடுகிறது; காலம் காலமாக இதுதான் எங்கள் தலைவிதியாக இருந்து வருகிறது. நான் மூழ்கிக் கொண்டிருக்கும் அச்சம் என்னும் இந்த வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.

இந்த உதவிக்கு நான் கைம்மாறு செய்வேன். இதைக் கேட்டதும் மனு இரக்கம் கொண்டு அந்த மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார்; நிலா ஒளிபோல் பளபளப்பாக இருந்த ஒரு ஜாடிக்குள் அதை இட்டார். அந்த ஜாடிக்குள் மீன் மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வளர்ந்து வந்தது; மனு அதனை தனது மகன் போல் பாவித்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

நீண்ட காலத்துக்கு பிறகு அது மிகப் பெரியதாக வளர்ந்து விட்டது. அந்த ஜாடி அதற்குப் போதவில்லை. பின்னர் மனுவைப் பார்த்து மீன் பின்வருமாறு கேட்டுக் கொண்டது: ‘நான் நன்றாக வளர்வதற்கு என்னை வேறு இடத்தில் கொண்டுபோய் விட்டு விடுங்கள்’, மனு அவ்வாறே மீனை ஜாடியிலிருந்து வெளியே எடுத்து ஒரு பெரிய தடாகத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார். அங்கு மீன் மிகப்பல ஆண்டுக்காலம் வளர்ந்து வந்தது.

அந்தத் தடாகம் இரண்டு யோஜனை நீளமும் ஒரு யோஜனை அகலமும் கொண்டதாக இருந்த போதிலும், தாமரை ஒத்த கண்களைக் கொண்ட அந்த மீனுக்கு அந்த இடம் போதவில்லை.

எனவே அது மீண்டும் மனுவிடம் பின்வருமாறு கூறிற்று: ‘சமுத்திர ராஜனின் அன்பு ராணியான கங்கையில் கொண்டுபோய் என்னை விட்டு விடுங்கள், அங்கு நான் மகிழ்ச்சியோடு வளர்கிறேன். அல்லது உங்கள் விருப்பம் போல் எங்கேயேனும் கொண்டு போய் விடுங்கள், உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிய நான் கடமைப்பட்டவன், ஏனென்றால் உங்களால்தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்து பெரியவனாகி உள்ளேன்.’ மனு அவ்வாறே மீனை எடுத்துச் சென்று கங்கையில் விட்டார். அங்கு அது சிறிதுகாலம் வாழ்ந்து வந்தது.

பின்னர் அது மீண்டும் மனுவிடம் பின்வருமாறு இறைஞ்சிக் கேட்டுக் கொண்டது: ‘எனது பெரிய உடலை வைத்துக் கொண்டு என்னால் கங்கையில் இங்குமங்குமாக நீந்தித் திரிய முடியவில்லை. எனவே, கருணை கூர்ந்து என்னை மா கடலில் கொண்டு போய் விட்டுவிடுங்கள்! மனு அவ்வாறே மீனை கங்கையிலிருந்து வெளியே எடுத்து, மா கடலில் கொண்டு போய் விட்டார். மீன் மிகப் பெரியதாக இருந்த போதிலும், எளிதாக சுமந்து செல்லக்கூடியதாகவும், தொடுவதற்கும் முகர்வதற்கும் உகந்ததாகவும் இருந்தது.

மாகடலில் விடப்பட்டதும் மனுவிடம் மீன் பின்வருமாறு கூறிற்று: ‘மகரிஷியே, நீங்கள் எல்லா வகைகளிலும் என்னை பாதுகாத்தீர்கள், உரிய காலம் வரும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது கூறுகிறேன், கேளுங்கள். இந்த உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் அசையும் அசையா பொருள்களும் விரையில் அழிந்துபோகும். உலகங்களைத் தூய்மைப்படுத்த வேண்டிய தருணம் இப்போது வந்து விட்டது. எனவே உங்கள் நன்மைக்காக இதைக் கூறுகிறேன். இந்தப் பிரபஞ்சம் அழியும் காலம் வந்துவிட்டது. நீங்கள் ஒரு வலுவான கப்பலைக் கட்டுங்கள். அதனுடன் ஒரு வடக்கயிறைக் கட்டுங்கள். ஏழு ரிஷிகளுடன் அதில் ஏறிக் கொள்ளுங்கள்.

அனுபவமிக்க பிராமணர்கள் வருணித்திருக்கும் எல்லா வகையான மரபினங்களையும் அதில் பத்திரமாக சேகரித்து வையுங்கள். கப்பலில் ஏறிக் கொண்டதும் என்னைத் தேடிப்பாருங்கள், என் கொம்பைக் கொண்டு என்னை அடையாளம் கண்டு கொள்ளலாம். நான் இல்லாமல் இந்த பெருநீர்ப்பரப்பை உங்களால் கடந்து செல்ல முடியாது. என் வார்த்தையை நம்புங்கள்.’

‘நீ கூறியபடியே செய்கிறேன்’ என்று மனு பதிலளித்தார். பரஸ்பரம் விடை பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது வழியே பிரிந்து சென்றனர். ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி பல்வேறு மரபினங்களுடன் அழகிய கப்பலில் மனு அந்த அலைகடலில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு மீனின் ஞாபகம் வந்தது.

மீனும் அவரது விருப்பத்தை தெரிந்து கொண்டு தனது கொம்பு வெளியே தெரிய மின்னல் வேகத்தில் அங்கு வந்து சேர்ந்தது. மலை போன்ற அந்த மீனை மனு கண்டதும் கப்பலின் வடக்கயிற்றை அதன் கொம்புடன் இறுகக்கட்டினார். இவ்வாறு கட்டப்பட்டதும் கப்பலை அதி வேகத்துடன் இழுத்துச் சென்றது. அந்த உப்பு நீர் மாகடலில் அதன் மலை போன்ற அலைகளுடன் சேர்ந்து கப்பல் நடனமாடுவது போல் தோன்றிற்று. கடலுடன் சேர்ந்து அது பேரொலி எழுப்புவது போல் தோன்றிற்று. சூறாவளியால் கப்பல் முன்னும் பின்னுமாக அலைந்தாடிக் கொண்டு சென்றது. குடிவெறியில் ஆடும் ஒரு பெண்ணைப் போல் அது சுழன்று சுழன்று சென்றது.

கரையோ திசைகளோ தெரியவில்லை. எங்கும் தண்ணீரையும் காற்றையும் வானத்தையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. இந்த உலகில் மீனும் ஏழு ரிஷிகளும் மனுவும் மட்டுமே தென்பட்டனர். இவ்வாறு மிகப் பல ஆண்டுக்காலம் மீன் சலிக்காமல், சளைக்காமல் கடலில் இழுத்துச் சென்றது. முடிவில் ஹிமவத்தின் மிக உயர்ந்த சிகரத்திற்குக் கப்பலை கொண்டு வந்து சேர்த்தது.

பின்னர் புன்னகைத்தப்படியே ரிஷிகளிடம் பின்வருமாறு கூறிற்று: ‘தாமதம் செய்யாமல் உடனே கப்பலை மலை சிகரத்துடன் கட்டுங்கள்.’ அவர்கள் அவ்வாறே செய்தனர். எனவேதான் ஹிமவத்தின் அந்த மிக உயரமான சிகரம் இன்றளவும் நௌபந்தனம் (கப்பலுடன் கட்டுதல்) என்று அழைக்கப்படுகிறது.

பின்னர் அந்த நேசமிக்க மீன் (அனிமிஷன் என்னும் தேவன்) ரிஷிகளிடம் பின்வருமாறு கூறிற்று: ‘நான் தான் பிரஜாபதி பிரம்மன். மீன் வடிவமெடுத்து இந்த மாபெரும் அபாயத்திலிருந்து உங்களைக் காப்பாற்றினேன். மனு இனி எல்லா உயிர் ராசிகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், அனைத்து உலகங்கள், சகல அசையக்கூடிய, அசையாத பொருள்கள் முதலியவற்றைப் படைப்பார்.

என் அருளாலும், கடும் தவத்தாலும் தனது படைப்புத் தொழிலில் முழு நுண்ணறிவுத் திறத்தைப் பெறுவார், எவ்வகையிலும் மனம் குழம்ப மாட்டார், (முய்ர், தொகுதி I, பக். 122-126) இவ்வாறு கூறிவிட்டு மீன் உடனே மறைந்து விட்டது. பிறகு மனு கடும் தவம் புரிந்து, எல்லா உயிர் ராசிகளையும் படைக்கத் தொடங்கினார்.

மகாபாரதம் ஆதி பருவத்தில் சிருஷ்டி பற்றிச் சான்று வேறுபட்ட விவரம் காணப்படுகிறது: (முய்ர், தொகுதி I, பக். 122-126)

“வைசம்பாயணர் பின்வருமாறு கூறினார்: சுவாயம்புவை வணங்கிய பிறகு, தேவர்களும் ஏனைய உயிர் ராசிகளும் எவ்வாறு படைக்கப்பட்டனர் என்பதையும், பின்னர் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். மரீசி, அத்திரி, ஆங்கிரசன், புலத்தியன், புலகன், கிருது ஆகிய இந்த ஆறு மாபெரும் ரிஷிகளும் பிரமாவின் மானச புத்திரர்களாவர். கசியபர் மரீசியின் புதல்வர், கசியபரிடமிருந்து தான் உயிரினங்கள் எல்லாம் தோன்றின. தக்ஷனுக்கு பதின்மூன்று புதல்விகள் பிறந்தனர். அவர்கள் பின்வருமாறு: அதிதி, திதி, தனு, காலா, தனயு, சிம்மிகை, குரோதவசை, பிராதை, விசுவை, வினதை, கபிலை, கத்துரு, முனி, கத்துருவை, இவர்களுக்கு வீரதீரமிக்க புதல்வர்களும், எண்ணற்ற பேரப்பிள்ளைகளும் இருந்தனர்.

புகழ் பெற்றவரும், சாந்த சொரூபியும், கடும் தவம் புரிவதில் தலை சிறந்தவருமான ரிஷி தக்ஷன் பிரம தேவனின் வலது கட்டை விரலிலிருந்து தோன்றினார். இடது கட்டை விரலிலிருந்து அந்த மாபெரும் முனிவருடைய மனைவி தோன்றினாள். அவள் மூலமாக ரிஷிக்கு ஐம்பது புதல்விகள் பிறந்தனர். இவர்களில் பத்துப் புதல்விகளை தருமனுக்கும், இருபத்தியேழு புதல்விகளை இந்துவுக்கும் (சோமன்), பதின்மூன்று புதல்விகளை கசியபருக்கும் மணம் முடித்து வைத்தார்.

பிதா மகரின் வழித்தோன்றலும், உயிரினங்களின் அதிபதியும், படைப்பாளருமான மனு அவருடைய (யார் என்று தெளிவாகத் தெரியவில்லை) புதல்வர். அட்ட வசுக்கள் மனுவினுடைய பிள்ளைகள். பிரமதேவனின் வலது மார்ப்பைப் பிளந்து கொண்டு மானுட வடிவத்தில் தருமன் (நேர்மை) பிறந்தான்.

அவன் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தான். அவனுக்கு சமன், காமன், ஹர்ஷன் (சாந்தி, அன்பு, மகிழ்ச்சி) ஆகிய மூன்று புகழ்பெற்ற புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் உவகை ஊட்டுபவர்களாகத் திகழ்ந்தார்கள். தங்கள் வலிமையால் உலகைத் தாங்கி நின்றார்கள்.. மனுவின் புதல்வியான அருஷி பிருகுவின் புதல்வரான சியவனனின் மனைவி ஆவாள்..

பிரம தேவனுக்கு தாத்ரியன், வைதாத்திரன் வேறு இரண்டு புதல்வர்களும் உண்டு. இவர்கள் மனுவுடன் இருந்தனர். இவர்களுடைய தங்கைதான் லட்சுமி தேவி, தாமரை மலர்தான் அவளுடைய உறைவிடம். அவளுடைய மானசப் புதல்வர்கள்தான் வானில் திரியும் புரவிகள்.. உணவுக்காக அலைந்து திரிந்த உயிரினங்கள் ஒன்றையொன்று விழுங்கியபோது அதர்மம் தோன்றிற்று. இவனுடைய மனைவி நிர்ரிதி.

எனவேதான் ராட்சதர்கள் நைரிதாக்கள் அல்லது நிர்ரிதியின் வழித் தோன்றல்கள் என அழைக்கப்படுகின்றனர். நிர்ரிதிக்கு மூன்று பயங்கரமான பிள்ளைகள். எப்போதும் தீய செயல்களில் ஈடுபடுவதே அவர்களது தொழில். பயம், மகா பயம், மிருத்தியு (மரணம்) ஆகியவர்களே அம் மூவரும். இவர்களில் மிருத்தியுவுக்கு மனைவி, மக்கள் கிடையாது. ஏனென்றால் அவன்தான் உயிரினங்களின் முடிவு.”

“மாபெரும் முனிவர்களைப் போல் சீரும் சிறப்புடன் பிறந்தவர்கள் பிரசேதசர்கள்; இவர்கள் பதின்மர் சகோதரர்கள்; நல்லொழுக்கமும் தூய்மையுமிக்கவர்கள்; ஒரு சமயம் இவர்களது வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மதிப்பு வாய்ந்த உயிரினங்கள் எரிந்து போயின. இவர்களுக்குப் பிறந்தவன்தான் தக்ஷ பிரசேதசன். உலகின் மூலமான இவனிடமிருந்துதான் உயிரினங்கள் தோன்றின.

முனி தக்ஷன் விரிணியுடன் கூடி வாழ்ந்து, தன்னைப் போல் சமயக் கோட்பாடுகளை வழுவாது பிறழாது பின்பற்றுவதில் புகழ் பெற்ற ஆயிரம் புதல்வர்களைத் தோற்றுவித்தான். நாரதர் அவர்களுக்கு முக்தி சித்தாந்தத்தையும், சாங்கிய ஞானத்தையும் போதித்தார். சந்ததியைப் பெருக்கும் நோக்கத்தோடு பிரஜாபதி தக்ஷன் அடுத்து ஐம்பது புதல்விகளைப் பெற்றான். இவர்களில் பத்துப் பேரை தருமனுக்கும், பதின்மூன்று பேரை கசியபருக்கும், இருபத்தி ஏழு பேரை இந்துவுக்கும் (சோமன்) திருமணம் செய்து வைத்தான்…

மரீசியின் புதல்வரான கசியபர் தன்னுடைய பதின் மூன்று மனைவிகளில் மிகச் சிறந்தவளான தக்ஷயாணி மூலம் இந்திரன் தலைமையில் ஆதித்தியர்களையும், விவஸ்வதனையும் ஈந்தெடுத்தார். விவஸ்வதனுக்கு வல்லமைமிக்க யம வைவஸ்வதன் மகனாகப் பிறந்தான். மார்த்தாண்டனுக்கு (விவஸ்வதன் அல்லது சூரியனுக்கு) வல்லமையும் மதிநுட்பமும் மிக்க மனுவும் அவனுடைய சகோதரனான யமனும் பிறந்தனர். அறிவுக் கூர்மையும் நேர்மையுமுடைய இந்த மனுவை ஆதாரமாகக் கொண்டு ஓர் இனம் உருவாயிற்று.

எனவே இந்த இனம் மனு இனம் என்று பெயர் பெறலாயிற்று. பிராமணர்களும், சத்திரியர்களும் ஏனையோரும் இந்த மனுவிடமிருந்து உதித்தனர். இவர்களில் பிராமணர்கள் வேதங்களையும் வேதாங்கங்களையும் கற்றுத் தேர்ந்தனர். வேணன், திரிஷ்னு, நரிஷ்யந்தன், நபாகன், இக்ஷ்வாகு, கருஷன், சர்யாதி, இளை, சத்திரியர்களுக்குரிய கடமைகளில் ஈடுபாடு கொண்ட பிரிஷத்ரன், நபாகரிஷ்டன் ஆகியோர் மனுவின் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. இவர்களை அன்றி மனுவுக்கு மேலும் ஐம்பது புதல்வர்கள் இருந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அழிந்து போயினர். பின்னர் இளையிடத்து விவேகமிக்க புரூரவன் பிறந்தான். இளைதான் தாயும் தந்தையுமாக இருந்து அவனை ஒப்பற்ற அறிஞனாக, வீரனாக வளர்ந்து ஆளாக்கினாள்.”

VII

உலகப் படைப்பு குறித்த விஷயம் ராமாயணத்திலும் இடம் பெற்றிருக்கிறது. இரண்டாவது காண்டத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது: (முய்ர், தொகுதி I, பக்கம் 116)

“ராமர் சினமடைவார் என்பதை உணர்ந்து கொண்டு வசிஷ்டர் பின்கண்டவாறு பதிலளித்தார்: ‘இந்த உலகின் அழிவையும் புனருத்தாரணத்தையும் பற்றி ஜாபாலிக்கும் தெரியும். ஆனால் நீ நாடு திரும்புவதற்குத் தூண்டும் பொருட்டே அவர் இவ்வாறு பேசினார். பூவுலகின் அதிபதியே, உலக சிருஷ்டி பற்றிக் கூறுகிறேன், கேள். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லாமலிருந்தது. அதில் பூமி உருவாகிக் கொண்டிருந்தது.

பின்னர் பிரமன் சுயவம்பு தெய்வங்களுடன் தோன்றினார். அடுத்து அவர் வராக உருவெடுத்து, பூமியை மேலே உயர்த்தி, ஞானிகள், தம்முடைய புதல்வர்கள், பிரம்மா முதலியோருடைய அனைத்து உலகையும் என்றும் நிலையான, மாறாத, அழியாத விசும்பிலிருந்து படைத்தார். பிரம்மனிடமிருந்து மரீசி தோன்றினார். அவருடைய புதல்வர் கசியபர், கசியபரிடமிருந்து விவஸ்வன் உதித்தார். அவரிடமிருந்து மனு தோன்றினார். அவர் முன்னர் பிரஜாபதியாக இருந்தவர். இக்ஷ்வாகு மனுவினுடைய புதல்வர். இந்த வனம் கொழிக்கும் பூமி அவருக்கு அவருடைய தந்தையால் வழங்கப்பட்டது. இந்த இக்ஷூவாகு முன்னர் அயோத்தியின் மன்னராக இருந்தவர்.”

இது தவிர, உலகப் படைப்பு குறித்து ராமாயணத்தில் மற்றொரு தகவலும் காணப்படுகிறது. மூன்றாவது காண்டத்தில் இடம் பெற்றுள்ள அந்தத் தகவல் வருமாறு:

“ராமர் கூறியதைக் கேட்டதும் ஜடாயு பறவை தனது சொந்த இனத்தையும், தன்னையும், உயிர் இனங்கள் அனைத்தின் தோற்றத்தையும் எடுத்துரைத்தது. ஆரம்ப காலத்தில் தோன்றிய பிரஜாபதிகளைப் பற்றிக் கூறுகிறேன் கேள். கர்த்தமன்தான் முதல் பிரஜாபதி; பின்னர் விக்ரிதன், சேஷன், சம்ஸ்ரயன், பஹூபுத்ரன், ஸ்தாணு, மரீசி, அத்ரி, கிருது, புலஸ்தியன், ஆங்கீரசன், பிரசேதசன், புலகன், தக்ஷன், விவஸ்வதன், அரிஷ்தநேமி, கடைசியாக புகழ்பெற்ற கசியபர் ஆகியோர் தோன்றினார். பிரஜாபதி தக்ஷனுக்கு அறுபது புத்திரிகள்.

இவர்களில் எழில்மிகு எட்டு மங்கையர்களை கசியபர் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் வருமாறு. அதிதி, திதி, தனு, கலகை, தமிரை, குரோதவசை, மனு, அனலை, கசியபர் தன் மனைவிகளை அழைத்துப் பின்வருமாறு கூறினார்: ‘மூவுலகங்களையும் பராமரிக்கக்கூடிய என்னைப் போன்ற புத்திரர்களை நீங்கள் எனக்குப் பெற்றுத் தர வேண்டும். ‘அதிதி, திதி, தன, கலகை ஆகியோர் இதற்கு சம்மதித்தனர். மற்றவர்கள் இதற்கு இணங்கவில்லை.

ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்ரர்கள், இரு அசுவினிகள் ஆக முப்பது மூன்று தேவர்கள் அதிதிக்குப் பிறந்தனர். கசியபரின் மனைவியான மனு மனிதர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களை ஈன்று தந்தாள். ‘பிராமணர்கள் வாயிலிருந்தும்; சத்திரியர்கள் மார்பிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதங்களிலிருந்தும் பிறந்தனர்’ என்று வேதம் கூறுகிறது. கலகை தூய பழங்களைத் தரும் எல்லா மரங்களையும் பெற்றெடுத்தாள்.”

VIII

இது சம்பந்தமாக புராணங்கள் என்ன கூறுகின்றன என்பதற்கு விஷ்ணு புராணத்திலிருந்து ஒரு பகுதியை இங்கு தந்திருக்கிறேன். (முய்ர், தொகுதி I, பக்.220-221)

“எல்லா உலகங்களின் சாசுவதமான மூலகராகவும், பிரமாவின் வடிவமாகவும், உட்பொருள் சாரமாகவும், விஷ்ணுவை தன்னுடன் கொண்டவராகவும், ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களாகத் திகழ்பவருமான இரணியகர்ப்பனின் வலது கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தக்ஷன் தோன்றினான். தக்ஷன் புதல்வி அதிதி. அவளிடமிருந்து விவஸ்வதன் பிறந்தான். அவனிடமிருந்து மனு உதித்தான். மனுவுக்கு இக்ஷ்வாகு, நிரிகள், திரிஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், பிராம்சு, நாபகனெதிஷ்டன், கருஷன், பிரிஷத்ரன் ஆகிய புதல்வர்கள் இருந்தனர்.

மேலும் ஒரு மகன் வேண்டி மனு மித்திரனுக்கும் வருணனுக்கும் வேள்வி நடத்தினான். ஆனால் வேள்வியை நடத்திய புரோகிதன் வேண்டுதல் வாசகத்தை தவறாக உச்சரித்ததன் காரணமாக இளை என்னும் மகள் பிறந்தாள். எனினும் மித்திரன், வருணன் ஆகிய இருவரின் கிருபையால் அவள் மனுவின் புதல்வனாக மாறி சுத்தியுமனன் என்ற பெயரைப் பெற்றாள்.

எனினும் ஈஸ்வரனது (மகாதேவன்), கோபத்தால் மீண்டும் பெண்ணாக மாறி சோமனுடைய (சந்திரன்) புதல்வனான புதனது ஆசிரமத்துக்கு அருகே அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அப்போது புதன் அவளிடம் மனத்தைப் பறிக்கொடுத்தான். இருவருக்கும் புரூரவன் பிறந்தான். அவன் பிறந்த பிறகு, வசிஷ்டர் மற்றம் இதர ரிஷிகளின் பிரயத்தனத்தால் இளை புருஷ ரூபம் பெற்று மீண்டும் சுத்தியுமனன் ஆனாள்.”

அடுத்து, விஷ்ணு புராணம் மனுவின் புத்திரர்கள் குறித்துப் பின்கண்ட விவரங்களைத் தருகிறது:

1) பிரிஷத்ரன் தன்னுடைய சமய குருவின் பசுவைக் கொன்ற காரணத்தால் சூத்திரன் ஆனான்.

2) கருஷனின் வழித்தோன்றல்களாக கருஷர்கள் அதாவது மகத்தான வலிமை படைத்த சத்திரியர்கள் தோன்றினார்கள்.

3) நெதிஷ்டனின் மகனாகிய நாபகன் வைசியனானான்.

இதுதான் சூரிய வம்சத்தின் வரலாறு. விஷ்ணு புராணத்தில் சந்திர வம்ச வரலாறும் கூறப்பட்டிருக்கிறது. இதன்படி சூரிய வம்சம் மனுவிடமிருந்து தோன்றியது போன்றே சந்திர வம்சம் அத்ரியிடமிருந்து தோன்றியது. அதன் வரலாறு வருமாறு:

“அத்ரி பிரமதேவனின் புதல்வன், சோமனின் (சந்திரன்) தந்தை. பிரமா சோமனை தாவரங்கள், பிராமணர்கள், நட்சத்திரங்களின் அதிபதியாக ஆக்கினார். சோமன் ராஜசூய யாகத்தைச் செய்து முடித்த பிறகு மிகுந்த இறுமாப்புப் பிடித்தலைத்தான். இந்த வெறியில் தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையைக் கவர்ந்து சென்றான். பிரமாவும் இதர தேவர்களும் ரிஷிகளும் நயமாகக் கண்டித்து எவ்வளவோ புத்திமதி கூறியபோதிலும் சோமன் தாரையைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்க மறுத்துவிட்டான். உசனர்கள் சோமனுக்கு ஆதரவாக இருந்தனர்.

ஆங்கீரசனிடம் படித்த ருத்ரன் பிரகஷ்பதிக்கு துணையாக நின்றான். இரு தரப்பாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தேவர்களும் தைத்தியர்களும் இந்த மோதலில் பங்கு கொண்டனர். பின்னர் பிரமா தலையிட்டு சோமனை நிர்ப்பந்தித்து தாரையை அவளுடைய கணவனிடம் ஒப்படைக்கச் செய்தார். இதற்கிடையில் தாரை கர்ப்பமுற்று புதன் என்ற புதல்வனைப் பெற்றாள்.

பெரிதும் வலியுறுத்தியதன் பேரில் சோமன்தான் இக்குழந்தையின் தந்தை என்பதை ஒப்புக் கொண்டாள். இந்த புதனுக்கு மனுவின் புத்திரியான இளையிடம் பிறந்தவன்தான் புரூரவன் (புரூரவனுக்கு ஊர்வசிக்கும் இடையே ஏற்பட்ட காதல் பற்றி சதபத பிராமணத்திலும் xi:5.1.11; விஷ்ணு புராணத்திலும் vi.6.19; பாகவத புராணத்திலும் ix.1; ஹரிவம்சம் பகுதி 26லும் கூறப்பட்டுள்ளது. புரூரவனுக்கும் பிராமணர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி மகாபாரதம் ஆதிபருவம் 75ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.) புரூரவனுக்கு (விஷ்ணு புராணம், iv 7.1) ஆறு புதல்வர்கள். மூத்தவன் ஆயு. இவனுக்கு நகுஷன், க்ஷத்திரவிருத்தன், இரஜி, இரம்பன், அநேனசெனன் என ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.

க்ஷத்திரவிருத்தனின் புதல்வன் சுனஹோத்ரன், இவனுக்கு காசியன், குலெசன், கிருத்தினமதன் என மூவர் புத்திரர். கடைசியாகக் குறிப்பிடப்பட்டவனிடமிருந்து தோன்றியவன் சௌனகன். இவன்தான் நான்கு சாதிகள் அமைப்பை உருவாக்கியவன். காசியன் புதல்வன் காசிராஜன். அவனுடைய மகன் தீர்க்க தன்மன்; தன்வந்தரி தீர்க்கதன்மனுடைய புத்திரன்.”

உலகப் படைப்பு குறித்த இந்த சித்தாந்தங்களை இயல் 2ல் விவரிக்கப்பட்டிருக்கும் சித்தாந்தாங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் என்ன காண்கிறோம்? இந்த ஒப்பீட்டின் முடிவை பின் கண்டவாறு தொகுத்துக் கூறலாம் என்று கருதுகிறேன்: (1)ஒன்று சமய சார்புடையதாக இருக்கிறது, மற்றது சமய சார்ப்பற்றதாக இருக்கிறது; (2)ஒன்று மனு என்ற மனிதனை உயிரினத்தின் மூல கர்த்தா என்று வருணிக்கிறது, மற்றது பிரம தேவனை அல்லது பிரஜாபதியை சிருஷ்டி கர்த்தா என்ற விவரிக்கிறது; (3)ஒன்று அதன் போக்கில் வரலாற்றுத் தன்மை கொண்டதாக இருக்கிறது, மற்றது இயல் நிலை கடந்த தெய்வீக அரு நிகழ்வாக, தெய்வீக ஆற்றலாகச் சித்திரிக்கப்படுகிறது; (4)ஒன்று ஊழி வெள்ளைத்தைப் பற்றிப் பேசுகிறது, மற்றது இது குறித்து முற்றிலும் மௌனம் சாதிக்கிறது; (5)ஒன்று நான்கு வருண ஏற்பாட்டை விளக்கும் குறிக்கோளைக் கொண்டிருக்கிறது, மற்றது சமுதாயத்தின் தோற்றத்தை மட்டுமே விளக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த வேறுபாடுகள் அதிகமாக இருப்பதோடு அடிப்படையானவையாகவும் உள்ளன. அதிலும் குறிப்பாக சதுர் வருண அமைப்பு முறை குறித்த வேறுபாடு மிகவும் அடிப்படையானதாக உள்ளது. சமய சார்புடைய சித்தாந்தம் இந்த ஏற்பாட்டை அங்கீகரிகிறது. ஆனால் சமய சார்பற்ற சித்தாந்தமோ அதனை நிராகரிக்கிறது. மனுவின் சந்ததியினர் எவ்வாறு நான்கு வருணங்களாகப் பரிணமித்தனர் என்பதை விளக்குவதன் மூலம் இவ்விரு சித்தாந்தங்களையும் இணைத்துப் பிணைப்பதற்கு முயற்சி நடைபெற்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ராமாயணத்திலும் புராணங்களிலும் இது தான் நடைபெற்றிருக்கிறது. இது இவ்விரு சித்தாந்தங்களையும் ஒரே சித்தாந்தமாக உருவாக்கும் முயற்சியே தவிர வேறல்ல என்பது தெள்ளத் தெளிவு. இது வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியே ஆகும்.

எனினும் இவ்விரு சித்தாந்தங்களுக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் அடிப்படையானதாக இருப்பதால், என்னதான் முயற்சி செய்தபோதிலும் அவை இரண்டும் தனிச் சித்தாந்தங்களாகவே தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதனால் இன்று சதுர்வருண ஏற்பாட்டிற்கு ஒரு விளக்கத்துக்குப் பதிலாக இரண்டு விளக்கங்கள்க அளிப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒன்று புருஷன் உருவாக்கிய இயல் நிலை கடந்த தெய்வீக சதுர் வருணம், மற்றது மனுவின் புதல்வர்கள் உருவாக்கிய இயல்பான சதுர் வருணம். இதன் விளைவு மிகவும் ஏடாகோடமானதாக, அலங்கோலமானதாக இருப்பது இரண்டு சித்தாந்தங்களும் அடிப்படையிலேயே பெரிதும் வேறுபட்டவை, எவ்வகையிலும் ஒத்துப் போக முடியாதவை என்பதையே உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டுகிறது. இத்தகைய இரண்டு சித்தாந்தங்கள் பிராமணீய இலக்கியத்திலேயே இருந்து வருவதை இவ்விஷயம் குறித்து ஆராய்ந்த வரும் அறிஞர்கள் கவனிக்கத் தவறியது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

எனினும் இத்தகைய வேறுபட்ட, முரணான சித்தாந்தங்கள் இருந்து வருவதையும் அதன் முக்கியத்துவத்தையும் உதாசீனம் செய்துவிட முடியாது. இவ்வாறு அடிப்படையிலேயே அறவே வேறுபட்ட, இணைந்து போக முடியாத இரண்டு சித்தாந்தங்கள் இருந்து வருவதன் முக்கியத்துவம் என்ன? இந்த இரு சித்தாந்தங்களும் இரண்டு வேறுபட்ட ஆரிய இனங்களின் சித்தாந்தங்கள் என எனக்குத் தோன்றுகிறது. ஒரு ஆரிய இனம் சதுர்வருணத்தில் நம்பிக்கை வைத்திருந்தது, மற்றொரு ஆரிய இனம் அவ்வாறு நம்பிக்கை வைக்கவில்லை என்பது என் கருத்து. இந்த இரு ஆரிய இனங்களும் பின்னால் ஒரு கட்டத்தில் ஒன்றிணைந்திருக்கக்கூடும் என்றும் எண்ணுகிறேன். இந்த வாதம் வலுவானதாக இருக்குமாயின் பிராமணிய இலக்கியம் வெளிப்படுத்தியுள்ள இந்த சித்தாந்த வேறுபாடு புதிய கோட்பாட்டுக்கு மேலும் சான்று வழங்குவதாக உள்ளது எனலாம்.

IX

என் கருத்துக்கு ஆதரவான அசைக்கமுடியாத மூன்றாவது சான்றை இந்திய மக்களிடம் உடலமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு வழங்கியுள்ளது. இத்தகைய ஆய்வு 1901ல் முதல் முறையாக சர் ஹெர்பர்ட் ரிஸ்லேயால் மேற்கொள்ளப்பட்டது. மண்டை ஓட்டு அமைப்புக் குறியீட்டின் அடிப்படையில் இந்திய மக்கள் பின்கண்ட நான்கு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு அவர் வந்தார்: (1)ஆரியர்கள், (2)திராவிடர்கள், (3)மங்கோலியர்கள், (4)சித்தியர்கள். இவர்கள் பெருவாரியாக எங்கு வாழ்கின்றனர் என்பதை நிர்ணயித்துக் கூறுமளவுக்குக்கூட அவர் சென்றார். இந்த ஆய்வு தோராயமானது. அவரது முடிவுகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பதை 1936 – ஆம் ஆண்டில் டாக்டர் குஹா சோதித்துப் பார்த்தார்.

இந்த விஷயம் குறித்த அவரது அறிக்கை மனித இன ஆராய்ச்சித் துறையில் மிகவும் பெருமதிப்பு வாய்ந்த ஓர் ஆவணமாகத் திகழ்கிறது. இந்திய மக்கள் அவர்களது மண்டை ஓடுகள் அளவுகளின்படி எங்கெங்கு பரவியிருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு டாக்டர் குஹா தயாரித்திருந்த தேசப்படம் (பின் இணைப்பு V பார்க்க) இந்திய மக்களின் இன இயைபு குறித்து ஏராளமான தகவல்களை அளிக்கிறது. இந்திய மக்கள் இரண்டு இன மூலகங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஓர் இனத்தினர் நீண்ட தலையை உடையவர்கள். இவர்கள் இந்தியாவின் உட்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர். இன்னொரு இனத்தினர் குறுகிய தலையைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது டாக்டர் குஹா கண்டுள்ள முடிவுகளாகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் தரும் சான்று இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இது குறித்து டாக்டர் குஹா கூறுவதாவது:

“சிந்து நதிப் பள்ளத்தாக்கு தவிர ஏனைய ஆய்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சமிச்சங்கள் மூலம் மிகக் குறைந்த தகவல்களே கிடைத்துள்ளன. எனினும் அக்காலத்திய இந்திய இன வரலாறு குறித்த ஒரு பரந்த, தோராயமான படப்பிடிப்பைப் பெறுவது இதன் வாயிலாக சாத்தியமாகி உள்ளது. கி.மு.4 ஆயிரம் ஆண்டுத் தொடக்கம் முதல் நீண்ட தலையும் குறுகிய எடுப்பான மூக்கும் கொண்ட இனத்தினர் வட மேற்கு இந்தியாவில் வாழ்ந்து வந்தனர் என்று தோன்றுகிறது. அவர்களுடன் கூடவே மிகவும் திடகாத்திரமான மற்றொரு இனத்தினரும் வாழ்ந்ததைப் பார்க்கிறோம். அவர்களும் நீண்ட தலை உடையவர்கள், ஆனால் அவர்களது மண்டை ஓட்டின் கவிகை மோடு தாழ்வானது. அவர்களும் நீண்ட முகமும் குறுகிய நாசியும் கொண்டவர்கள். ஆனால் முந்தியவர்களைப் போல் அவ்வளவு உயரமில்லாதவர்கள்.

அகன்ற தலையுடன் கூடிய மூன்றாவதொரு இனத்தினரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆர்மீனியர்களுடன் இன உறவு கொண்டவர்களாக இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் பிற்காலத்தில் வந்திருக்கலாம். இவர்களது மண்டை ஓடுகளில் பெரும்பாலானவை கிடைத்த ஹரப்பா அகழ்வாழ்வு இடத்தின் காலத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.”

மலைவாழ் இனத்தினர் மற்றும் மத்தியதரைக்கடல் இனத்தினர் என்ற அடிப்படையில் பார்க்கும்போது இந்திய மக்களை இரண்டு இனமரபைச் சேர்ந்தவர்கள் எனக் கூறலாம்: (1)மத்திய தரைக்கடல் இனத்தினர், அல்லது நீண்ட தலை கொண்ட இனத்தினர். (2)மலைவாழ் இனத்தினர் அல்லது குறுகிய தலை கொண்ட இனத்தினர்.

மத்திய தரைக்கடல் இனத்தினரைப் பொறுத்தவரையில் சில உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் ஆரிய மொழி பேசும் இனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களது பூர்வீக தாயகம் ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலை ஒட்டிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என்பதும், அங்கிருந்து அவர்கள் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்திருக்கக் கூடும் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அவர்களது பூர்வீக தாயகத்தின் இருப்பிடத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது, மலைவாழ் இனத்தவர் வருவதற்கு முன்பே இவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் என்பது தெளிவாகிறது.

மலை வாழ் இனத்தினரைப் பற்றிய இதே போன்ற உண்மைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. முதலாவது இந்த மக்களின் பூர்வீகத் தாயகம் பற்றியது. இரண்டாவது அவர்களது சொந்த மொழியைப் பற்றியது. அவரது கருத்துப்படி மலைவாழ் இனத்தினரின் தாயகம் ஆசியாவில் இமாலயத்தில் எங்கோ ஓரிடத்தில் இருந்திருக்க வேண்டும். இந்த முடிவுக்கு தாம் வருவதற்கான காரணங்களை பேராசிரியர் ரிப்ளே பின்வருமாறு கூறுகிறார்: (ஐரோப்பிய இனங்கள், பக். 473-474)

“கிழக்கிலிருந்து நடைபெற்ற இந்த மக்கள் ஊடுருவல் ஆசியாவின் திசையிலிருந்து ஏராளமான மக்கள் வந்ததைக் குறிக்கிறது; இது ஒரு படையெடுப்பல்ல, மாறாக, ஜன சஞ்சார மற்ற பிரதேசத்தில் மக்கள் அமைதியான முறையில் படிப்படியாக வந்து குடியேறியதையே குறிக்கிறது. என்று துணிந்து கூற நமக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்தக் கண்டத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றி, குறிப்பாக பாமிர் பிராந்தியத்தையும், மேற்கத்திய இமாலய மேட்டு நிலப் பகுதிகளையும் சேர்ந்த மக்களைப் பற்றி நாம் தெரிந்துள்ள தகவல்களையே இது பெரிதும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

ஆரிய நாகரிகத்தின் பூர்வீகத் தாயகம் என்று மாக்ஸ் முல்லரும் இதர பல தொடக்ககால மொழி நூல் வல்லுநர்களும் குறிப்பிட்டிருக்கும் ‘உலகின் கூரையான’ இங்கு மலை வாழ் இனத்தவரை அல்லது ஐரோப்பிய கெல்ட்டிய இனத்தவரை கிட்டத்தட்ட ஒத்த ஓர் இனமக்கள் இருந்து வருவதை இன்று நாம் காண்கிறோம். டி உஜ்ஃபால்வி, டோபினார்டு மற்றும் பலர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இங்கு ஒரு பரந்த பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட தனி அம்சங்கள் நிலவி வருவதை வெளிப்படுத்தியுள்ளன.

கால்சாஸ்களும் மலைவாழ் தாஜிக்குகளும், ஏனையோரும் சாம்பல் நிறக் கண்களுடனும், கறுநிற கேசத்துடனும், கட்டை குட்டையான ஆகிருதி கொண்டவர்களாகவும், மண்டை ஓடு குறியீடுகள் பெரும்பாலும் 86 சதவீதத்துக்கு அதிகம் கொண்டவர்களாகவும் உள்ளனர். இத்தகைய உடலமைப்பு கொண்ட மக்கள் இந்தப் பிராந்தியத்திலிருந்து தொடங்கி மேற்கு நோக்கி ஆசியா மைனர் மற்றும் ஐரோப்பா வரையிலும் தொடர்ச்சியாக வியாபித்துள்ளனர்.

மலைவாழ் வகையைச் சேர்ந்த மக்கள் மேற்கு ஆசியாவின் ஒரு பரந்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்ற கண்டுபிடிப்பு இந்தக் குறிப்பிட்ட இனத்தவரின் இன மொழிகளிடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒற்றுமையைச் சுட்டிக் காட்டுகிறது. டாப்பெய்னர் குறிப்பிட்டிருப்பது போல் ஆசியாவிலிருந்து நேரடியான குடியமர்வு நடைபெற்றதற்கு ஒரு சான்றாக இதனைக் கொள்ள முடியாது. எனினும் பரந்த தலையைக் கொண்ட இனத்தினரின் பூர்வீகத் தாயகம் எது என்பதைக் கண்டுபிடிக்க நாம் முயலும்போது நமது கண்களை இது கிழக்கு நோக்கித் திரும்பச் செய்கிறது.

மனித இனத்தின் மூல அடித்தளம் இங்கு எங்கேயாவதுதான் இருக்க வேண்டும் என்பதை சில உண்மைகள் மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டுகின்றன. இந்த அடித்தளம் மேற்கு திசையில் இருக்க முடியாது. ஏனென்றால் அட்லாண்டிக்கை ஒட்டி எல்லா இடங்களிலும் இந்த இனம் படிப்படியாக அருகி வருகிறது.

குறிப்பாக தலையின் வடிவமைப்பிலும், தலை மயிர், நிறம், ஆகிருதி முதுலியவற்றிலும் மலைவாழ் வகை இனம் ஆசியக் கண்டத்திலுள்ள இதர எல்லா மக்களினங்களையும் நெருங்கிவருவது இந்த விஷயத்தில் நாம் தவறான கருத்துக் கொள்வதற்கு இட்டுச் செல்லுகிறது. இவ்வாறுதான், மத்திய தரைக் கடல் பிராந்திய இனம் நீண்ட தலையும், கரிய அல்லாத மாநிற முடியுடன் மாநிற மேனியும் கொண்டிருப்பது அந்த இனம் ஆப்பிரிக்க நீக்ரோ இனத்துக்கு மூதாதையரான ஏதோ ஓர் இனத்திலிருந்து தோன்றியிருக்கக்கூடுமோ என்று முன்னர் நாம் எண்ணும்படிச் செய்தது. இப்போது விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. மலை வாழ் இனத்தின் வேர்கள் கிழக்கு நோக்கியும் மத்திய தரப்பிராந்திய இனத்தின் வேர்கள் தெற்கு நோக்கியும் செல்கின்றன என்பது உறுதியாகி விட்டது.”

இந்த இனத்தாரின் மொழி எது என்பதிலும், ஐரோப்பாவில் ஆரிய மொழியைப் புகுத்தியவர்கள் (இந்தோ-ஜெர்மானியர்களின் கலப்படமில்லாதவர்களான) நார்திக் மக்களா அல்லது ஆல் பைன் மக்களா என்பதிலும் முடிவான கருத்தொற்றுமை இல்லை. ஆயினும், ஆல்பையின் இனத்தாரின் மொழி ஆரிய மொழி என்பதிலும் மொழியியல் நோக்கில் இவர்களை ஆரிய இனத்தார் என்பதிலும் வாதத்திற்கு இடமில்லை.

X

இந்தியாவில் ஓர் ஆரிய இனமல்ல, இரண்டு ஆரிய இனங்கள் இருந்தன என்ற ரிக் வேதத்தின் கூற்றுக்கு மனித உடல் அமைப்பு இயலிலும், வரலாற்றிலும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன என்பதை மேலே தரப்பட்டுள்ள விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த விஷயத்தில் மேற்கத்திய கோட்பாட்டுக்கும் ரிக் வேத சான்றுரைக்கும் இடையே முரண்பாடு இருப்பதை ஒப்புக்கொள்வதற்கு எவரும் மறுக்க முடியாது. ஒரே ஒரு ஆரிய இனம்தான் இருந்தது என்று மேற்கத்திய கோட்பாடு கூறுகிறது. ஆனால் ரிக் வேதமோ இரண்டு ஆரிய இனங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இவ்வாறு ஒரு பிரதானமான பிரச்சினையில் மேலைய கோட்பாடு ரிக்வேதத்துடன் முரண்படுகிறது. இந்த விஷயத்தில் ரிக் வேதமே மிகச் சிறந்த சான்றாதாரமாகக் கருதப்படுவதால் அதனுடன் முரண்படும் கோட்பாடு நிராகரிக்கப்பட வேண்டும், இதைத் தவிர வேறு வழியில்லை.

பிரதானமான பிரச்சினையில் எழுந்துள்ள இந்த முரண்பாடு படையெடுப்பு மற்றும் வெற்றி கொள்ளுதல் பிரச்சினையிலும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. இந்த இரு ஆரிய இனங்களில் முதலாவதாக இந்தியாவுக்கு வந்த ஆரிய இனம் எது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது மலைவாழ் இனத்தைச் சேர்ந்ததாக இருந்தால், அதன் தாயகம் இமாலயத்துக்கு அருகில்தான் இருந்திருக்க வேண்டும். இதனால் வெளியிலிருந்து படையெடுப்பு என்ற கோட்பாடு அடிப்பட்டுப் போகிறது.

ஸ்தல குல மரபுக் குழுக்கள் வெற்றி கொள்ளப்பட்டன என்ற விஷயத்தைப் பொறுத்தவரையில் இதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் அப்போதும் மேலைய எழுத்தாளர்கள் நினைப்பது போன்று இது அவ்வளவு எளிதான விஷயமல்ல, தாசர்களும் தசியுக்களும் இனரீதியில் ஆரியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோமானால், படையெடுத்து வெற்றி கொள்ளுதல் என்னும் கோட்பாடு தாசர்களும் தசியுக்களும் ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்ட சாத்தியக் கூறைக் கணக்கிலெடுத்துக் கொள்வது மட்டுமன்றி, ஆரியர்கள் ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்ட சாத்தியக் கூறையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அப்படியே ஆரியர்கள் ஒருக்கால் தாசர்களையும் தசியுக்களையும் வெற்றி கொண்டிருந்தாலும் இவ்விரு ஆரிய இனங்களில் எந்த ஆரிய இனம் அவர்களை வெற்றி கொண்டது என்பதையும் அது விளக்கியாக வேண்டும்.

மேலைய கோட்பாடு சில விஷயங்களைப் போதிய அளவு ஆராயாமல், ஆழமாகப் பரிசீலிக்காமல் அவசர கோலமாக மேற்கொள்ளப்பட்ட முடிவே என்பதில் ஐயமில்லை. பண்டைய ஆரியர்களின் மனோபாவம் பற்றிய சில குறிப்பிட்ட கண்ணோட்டங்கள் அவர்களது வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் இந்தோ-ஜெர்மன் இனங்களின் மனோபாவம் சம்பந்தப்பட்ட கண்ணோட்டங்களுடன் ஒத்துப் போவதால் இந்த முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததே இந்த மேலைய கோட்பாடாகும்.

மிகச் சில விஷயங்களின் அடிப்படையிலேயே இந்தக் கோட்பாடு அமைந்துள்ளது. மேலைய அறிஞர்கள் ஆராய்ச்சித் துறையில் நீண்ட நெடுங்காலமாகவே ஈடுபட்டு வருபவர்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய வலுவற்ற, பலவீனமான அஸ்திவாரத்தின்மீது ஒரு கோட்பாட்டை உருவாக்க முனைந்திருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

இந்த அத்தியாயத்தில் ஏராளமான, அசைக்க முடியாத, உறுதியான சான்றுகள் தரப்பட்டுள்ள நிலைமையில் இந்த மேலையக் கோட்பாடு இனியும் செல்லுபடியாகாது; இதனைக் குப்பைக் கூடையில்தான் தூக்கி எறிய வேண்டும்.

(பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 5) 

Pin It