cauvery 413பண்டைய காலத்தில் அளவைகள், நில அளவைகள், நீர் ஆதாரங்கள் ஆகியவனை பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தன‌. தற்பொழுது சில பெயர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. அவற்றில் சில

நிலங்கள்

பொதுவாக அரசுப்பகுதியில் அமைந்த பூமி செவ்வல், கரிசல், பொட்டல் என்று இயற்கைத் தன்மையை ஒட்டி வழங்கப்பட்டது. இவைகளில் நஞ்சை, புஞ்சை, தட்டு, வயல், தோட்டம் என்ற பகுப்புகள் இருந்தன. நீர்ப்பாசன வசதி உள்ளது நஞ்சை எனவும், அவ்வித வசதி இல்லாது வானம் பார்த்த பூமி புஞ்சை எனவும், சிறிய நீர் ஆதாரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்படும் நிலம் வயல் என்றும், கேணி, கிணறு போன்ற சுருங்கிய நீர் வசதியுடைய விவசாயப்பகுதி தோட்டம் எனவும் வழங்கப்பட்டன.

நீர் ஆதாரங்கள்

நீர்த் தேக்கங்களைக் குறிக்க கண்மாய், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை, குண்டு என்ற சொற்கள் பயிலப்பட்டு வந்தன. வைகை ஆறு, மஞ்சள் ஆறு, முல்லை ஆறு பகுதிகளில் இந்த சொற்கள் வழக்கத்தில் இருந்தன. ஆற்றில் இருந்து நீரினைக் கொண்டு வருவதற்கு நீண்ட குறுகிய கால்கள் வெட்டப்பட்டு இருந்தன. இவை நீர்வாங்கி, வரத்துக்கால் எனவும், வாய்க்கால் எனவும் அழைக்கப்பட்டன. சில பகுதிகளில் இச்சொற்கள் வகுத்துக்கால் என அழைக்கப்பட்டன. இவைகளின் மூலம் வரப்பெற்ற வெள்ள நீரை மிகுதியாகப் பெற்ற பொழுது அதனை வெளியேற்றுவதற்கு பிறிதொரு காலும் பயன்படுத்தப்பட்டது. அதற்கு மறுகால் எனப் பெயர்.

கண்மாய்களில் இருந்து நேரடியாக நீரை வெளியேற்ற பெரிய கண்களை உடைய வழி கலுங்கு என்றும் சிறிய வழி மடை என்றும் வழக்குப் பெற்றிருந்தன. சிறிய ஏந்தல் கண்மாய்களின் நீர் கொள்ளளவு குறைவாக இருப்பதால், கூடுதலாக வரும் நீரினை வெளியேற்றுவதற்கு அந்தக் கண்மாய்க் கரையின் ஓர் இடத்தில், கரை இல்லாமல் இடைவெளிவிட்டு கரை அமைக்கப்பட்டு இருக்கும். இதன் வழி வெள்ளம் தானாக வழிந்து வெளியேறும். அந்தப்பகுதி தான் போகி எனப்பட்டது. ஆற்று நீரைத்தவிர மழை நீரைக் கொண்டு வருகிற கால் ஓடை எனப்பட்டது.

ஒரு கண்மாயின் நீண்ட கரை அடுத்த கண்மாயுடன் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்பட்டு இருந்தால் அந்த இணைப்புப் பகுதி பொருத்து ஆகும். அந்தக் கண்மாயின் மூலை தொடக்கம் அல்லது இறுதிப்பகுதி கொம்பு, கடைக்கொம்பு என்று குறிப்பிடப்பட்டன. இந்த கண்மாய் கரையை அடுத்துள்ள கண்மாய்ப் பகுதி உள்வாய் என்றும் இந்தப் பகுதியில், நீர்ப்பிடியையொட்டி இருந்த விளை நிலம் குளம் என்றும் வழங்கப்பட்டன. இந்தக் கரைகள் மிகுதியான வெள்ளத்தினால் அழிந்து போனால் அவை உடைப்பு ஆகும். கண்மாய்களில் நீர் நிரம்பிய பிறகும், கிராமப்புறங்களில் நீர்ப்பிடி அல்லாத பகுதிகளிலும் அதாவது கண்மாயின் வெளிப்பகுதி தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி காலாங்கரை எனப்பட்டது.

அளவைகள்

தானியம், நெல், எண்ணெய் ஆகியவைகளை அளந்து கணக்கிட மாகாணி, உழக்கு, படி, நாழி, குறுணி, மரக்கால், கலம் என்ற அளவைகள் வழக்கத்தில் இருந்தன. இவைகளில் குறைந்த அளவான மாகாணி என்பது ஒரு படி அளவில் பதினாறில் ஒரு பகுதி. ஒரு படி இன்றைய இரண்டு லிட்டருக்குச் சமமானது. இந்தப் படி அளவையை அரசு அலுவலர்கள் சரி பார்த்து அனுமதித்த பின்னரே பயன்படுத்தப்பட்டது. இந்தக் காரணத்தினால் செப்பேடுகளில் முத்திரைப்படி என்ற சொல் காணப்படுகிறது.

இவை தவிர நிர்ணயம் செய்யப்படாத பிற அளவுகளும் இருந்தன. உப்பு தவச தானியங்களை அளவை எதுவும் இல்லாமல் கைகளினால் அள்ளிக்கொள்ளும் முறை அள்ளுத்தீர்வை என்றும் கையெடுப்பு என்றும் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கையினால் அள்ளிக்கொடுக்கப்படும் அளவினைப் பிடி என்பது போல் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து இணைத்து அள்ளப்படும் தானிய அளவு கையெடுப்பு ஆகும்.

நில அளவை

நீண்ட காலமாக நிலங்களை அளந்து கணக்கிடுவதற்கு குளப்பிரமாணம் என்ற முறை கையாளப்பட்டு வந்தது. இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் மாகாணிக்கோல் என்ற மரக்கோல் ஆகும். இதனுடைய அளவை ஒரு கோலுக்கு ஒரு கோல் என்ற பரப்பு ஒரு மரக்கால் விரையடி என்றும், பதினான்கு கோலுக்கு பதினான்கு கோல் பரப்பு ஒரு கல விரையடி என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.விதைப்பாட்டிற்குரிய பரப்பு நிலம் விரையடி எனப்பட்டது. கல விரையடி என்பது இன்றைய நீட்டல் அளவை முறையில் ஒரு ஏக்கர் பதினேழு செண்ட் நிலப்பரப்பாகும். 83/8 சென்ட் பரப்பு நிலம், ஒரு மரக்கால் விரையடிக்குச் சமமானது.

- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It