நண்பர்களுக்காகப் பேசினாலும் சரி... நன்னூலுக்காகப் பேசினாலும் சரி. பேசுவது வேலையாக இருந்தாலும் சரி.. கேட்டுக் கொண்டதற்கிணங்க பேசினாலும் சரி.
பேசுபவர்கள் முதலில் அந்த நூலை ஆழமாகப் படிக்க வேண்டும். அலசி ஆராய வேண்டும். நேரம் குறைவாக இருப்பதால்... என்று தலையும் அற்று வாலும் அற்று... சரி முண்டத்தையாவது ஓரளவுக்குப் பேச வேண்டும் இல்லையா. அதையும் முக்காடு போட்டு கவிழ்த்து விட்டால் எப்படி.

நீங்கள் பேசுவதால் அந்த நூல் பிரபலம் அடைகிறதோ இல்லையோ... கடையை இழுத்து மூடச் செய்தல் ஆகாது.

தலைப்பை மட்டும் படித்துக் கொண்டு... இடையே தங்கள் சொந்தக் கதை சோகக் கதை...என்று எடுத்து விட்டு அடித்து ஓட்டக் கூடாது. அரங்கத்தில் அமர்ந்திருக்கும் யாரும் ஒன்றும் தெரியாதவர்கள் கிடையாது. மேடையில் அமர்ந்திருப்பவர்களை விட பயங்கரமான தீவிர இலக்கிய ஆளுமைகள் சத்தம் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள். மைக் கிடைத்து விட்டது என்பதற்காக... நாலு நல்ல மனிதர்கள் என்ன பேசினாலும் கை தட்டுகிறார்கள் என்பதற்காக... சும்மா அடித்து விடக்கூடாது. அந்த வகை பேச்சு... பேசுபவரை கூடிய சீக்கிரம் காணாமல் செய்து விடும்.

எழுதிய கதையை ஆரம்பித்து விட்டு உவமைக்கு ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொள்ள வேண்டிய தன் சொந்த அனுபவங்களை குண்டா நிறைய போட்டு பிசைந்து நாங்க அப்பிடி... நாங்க இப்பிடி.. எங்க வீட்டுல இப்படி... என் புள்ளைங்க அப்பிடி... எங்க தாத்தா அப்பிடி.... எங்க ஆத்தா இப்படி.... எங்க ஒன்னு விட்ட பெரியம்மா அப்பிடி... எங்க பெரிய அண்ணன் வீட்டு வேலைக்காரன் இப்பிடி என்று கதை விட்டால் கல் எறியத் தொடங்கும் நான்கு வகை நல்வகை கண்கள்.

எந்த நூலை பேச போகிறமோ... அது என்ன வகைமை என்ற புரிதல் வேண்டும். எதில் இருந்து ஆரம்பிக்க.. எப்படி அணுக... எதை ஒப்பிட.. எப்படி வாசகனுக்கு இடம் விட.. ஆசிரியரை எப்படி பாராட்ட... குறை இருந்தால் அதை எப்படி நாசூக்காக பாராட்டுக்கள் முடிந்த பிறகு மெல்ல எடுத்துரைக்க...என்று ஒரு திட்டமிடல் வேண்டும். மேடையில் நின்று கொண்டு மூச்சு வாங்க முன்னும் பின்னும் நூலை புரட்டிக் கொண்டிருக்க கூடாது. வேர்க்க விறுவிறுக்க சீமானிசம் செய்தல் கூடவே கூடாது.

ஆசையில்... ஆர்வத்தில்... லட்சியத்தில்... வாழ்க்கையில் என்று எழுதியவர் பல வகையில் இருப்பர். யார் என்ன என்ற புரிதல் முதலில் இருக்க.

எழுத்தில் கரை கண்டவனை பற்றிய எந்த அறிகுறியும் தெரியாமல்... அவன் பொருளின் ஆழத்தையும் உள்வாங்காமல்.. நல்ல எழுத்து... தொடர்ந்து எழுதினால் நல்ல எதிர்காலம் என்று ஓசி டீக்கு பேசற மாதிரி பேசக்கூடாது. தமிழ்நாட்டுல எழுதி என்ன எதிர்காலம் வந்திரும்... சொல்லுனு கேட்டா என்ன சொல்றதாம். அதெல்லாம் வேண்டாம். இது தான் நூல். இந்த நூல் இதை பத்தி தான் பேசுது.. என்று கனக்கச்சிதமாக சரியான புரிதலோடு கொடுத்த நேரத்துக்கு பேசி விட்டு சென்று விட வேண்டும். வீண் புகழும் வேண்டாம். அண்ட புளுகு ஆகாச புளுகு கிளை கதைகளும் வேண்டாம். நகைச்சுவை வரவில்லை என்றால் விட்டு விட வேண்டும். இழுத்து வந்து நம் வாலை நாமே கடித்துக் கொண்டு நிற்க கூடாது. அந்த ஆசிரியரைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டு வந்து பேசுவது அழகு. அங்க வந்துட்டு நான் படிச்சதே இல்ல. திடீர்னு சொன்னாங்க. இன்னும் சொல்ல போனா இந்த புக்லயே ரெண்டு கதை தான் படிச்சிருக்கேன் என்று சொல்வதெல்லாம் அபத்தம். அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வந்து மைக்கை புடிச்சு நானும் ரவுடி... நானும் ரவுடி உடல்மொழி.

எதையும் இடித்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இசைத்துரைக்க கற்றுக் கொள்ளல் சூட்சுமம்.

பேச்சு ஒரு கலை. அது பொதுவாக போக போக தான் வரும். தொடர் மேடைகள் தான் குரலை அதன் வளத்தை... கோர்வையை செதுக்கும். பொறுமை காக்க வேண்டும். முன்பாக உளிகளை சேதப்படுத்தி விட்டால்... எப்படி.

ஒரு நூலை பேச எடுத்துக் கொண்டால்... ஆழம் அகலம் நீளம் உயரம் என்று தேடலில் அற்பணிப்பு தேவை. சும்மா கத்த கூடாது. காது கிழியவா வருகிறான் வாசகன். பரவச நிலையில் குதிக்க கூடாது. யாருக்குள் தான் புரட்சி இல்லை. யாருக்கு தான் எது தெரியாது. அவரவர் அளவுக்கு தெரிந்த வாழ்வு தான் இது. ஆக...மேடையில் நிற்பவருக்கு முதலில் அமைதி தேவை. அதற்காக அவர்கள் காதுக்கே கேட்காத குரல்... பேச்சுக்கு லாயக்கில்லை. தொடர் சமநிலை தொண்டைக்கு நல்லது.

சிலரைப் பார்த்தால்... நேரம் குறைவாக இருக்கிறது.. நேரம் குறைவாக இருக்கிறது என்று சொல்லியே நேரத்தை குறைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்துக்கு ரெண்டு பாயிண்டை சொல்லி இருக்கலாமே என்று தோன்றும். அப்புறம் இன்னொரு மகா மோசமான செயல்... அவர் பேசிக் கொண்டிருக்கும் போது இங்கே வடை சப்ளை செய்து கொண்டிருப்பது. வாசத்தில் வாக்கியம் மறக்க... மைக் தொண்டை எச்சில் விழுங்கும். தேநீர் இடைவேளைக்கு தனியாக நேரம் ஒதுக்குதல் தான் முறை. டூ இன் ஒன் இங்கே செட் ஆகாது. அப்புறம் மூன்று மணி நேர கால அளவில் முழு நாளுக்கான அஜெண்டா போடாதீர்கள். ஞாயிறை நாசம் செய்தல் வாசக மோசடி.

எது தொடர்புடையதோ அதை இணைத்துக் கொள்ளல் அறிவார்ந்த அணுகுமுறை. அதே நேரம் ஒரே உவமையை வருடக்கணக்கில் பேசிக் கொண்டிருக்க கூடாது இல்லையா.

எழுத்தாளனுக்கு அவன் நூல் மேடை ஏறுகிறது என்பது இதயம் நிரம்பும் சம்பவம். அங்கே பேசுபவர் இது தான் சாக்கென்று குரலை தனித்துக் காட்ட.... உயர்த்திக் காட்ட....சம்பந்தப் பட்ட நூலை குத்தி கூறு போட்டு விடக்கூடாது. கதையை புரிந்து கொள்ளாமல் பாதி கதைக்கு மேல் தானே எழுதி பூசி மொழுகுவது... பாவச்செயல்.

சில நண்பர்களை கவனிக்கிறேன்.

ஒரே ஒரு கதையை படித்து விட்டு நீங்க தொடர்ந்து எழுதினால் இலக்கிய உலகத்தில் எஜமான் ஆகி விடுவீர் என்று அளந்து விடுவதில்லை. முழு நூலையும் படித்து வந்து... நூலுக்கு என்ன தேவையோ.. அதை அப்படியே அழகாய் எடுத்து வைக்கிறார்கள். உவமை ஆகட்டும்... உதாரணம் ஆகட்டும். பேசுபவரை முன் நிறுத்துவதில்லை. பேசுவது எதுவும் நூலை சுற்றியும் ஆசிரியரை சுற்றியும் தான் இருக்கிறது. ஆசிரியரை யார் என்று தெரிந்து கொண்டு அவரைப் பற்றிய கருத்துக்களை முன் வைக்கிறார்கள். மனம் உவந்து பாராட்டுகிறார்கள். முரண் என்றாலும் மனம் திறக்கிறார்கள். அது.... பார்க்கும் போதே ஒரு நல்ல இலக்கிய சூழலில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

அந்த நூல் என்ன கோருகிறதோ அதற்கு நியாயம் செய்வது தான் முறை.

மற்றபடி வடிவமற்ற நிதானமற்ற கட்டுப்பாடற்ற சொந்த புலம்பல்கள்... காற்றோடு.

- கவிஜி

Pin It