உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காகக் கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன.... உண்மை தான்.ஆனால் அந்தக் கதவுகளோடு சில எதிர்பார்ப்புகளையும் சேர்த்து வைத்தே அந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் காத்துக் கொண்டு இருக்கின்றன.

 அந்தப் பல்கலைக்கழகங்கள் அப்படி என்னவற்றைத் தான் மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றன என்பதைப் பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 மொழி:

சொந்த நாட்டிலேயே வேறு மொழி பேசும் மாநிலத்திற்குச் செல்லும் பொழுது அந்த மொழி தெரியாது நாம் சில சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டி இருக்கின்றது. இவ்வாறு உள்நாட்டிலேயே மொழியினால் சிக்கல் உண்டாகும் பொழுது, படிப்பதற்காகக் கடல் கடந்து வெளிநாட்டிற்குச் சென்று, அங்கு அந்த நாட்டின் மொழியினை அறியாது திணறுவது அந்த மாணவர்களுக்கு எவ்வளவு தொல்லைகளைக் கொடுக்கும் என்பதை அறிந்தே பல பல்கலைக்கழகங்கள், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது நாட்டின் மொழியை எழுதவும் பேசவும் அறிந்து இருக்க வேண்டும் என்ற விதியை இன்றியமையாததாய் வைத்து இருக்கின்றன.

அதுவும் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ள பொது மொழியாய் ஆங்கிலம் ஆகி விட்டதால், அந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்கின்றது. எனவே அந்தப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு மாணவர்கள் தங்களது ஆங்கிலத் திறமையை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

ஆங்கிலம் வேண்டும்.... சரி!!!

ஆங்கிலத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் .... அதுவும் சரி!!!!...

ஆனால் நான் ஆங்கிலத்தில் திறமையானவன் என்பதை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு நான் ஏதாவது தேர்வுகள் எழுத வேண்டுமா?...

இது தான் உங்கள் கேள்வியாக இருக்குமாயின் அந்தக் கேள்விக்கு உரிய விடை...ஆம்!

உங்களின் ஆங்கிலத் திறமையை பறைசாற்ற நீங்கள் சில தேர்வுகளை எழுத வேண்டும். அதுவும் நீங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளும் தேர்வாக அது இருக்க வேண்டும். அப்படி உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஆங்கில மொழியில் ஒருவரது திறமையை அறிந்து கொள்ள அவை ஏற்றுக் கொண்டு உள்ள முதன்மையான இரண்டு தேர்வு முறைகளைப் பற்றிப் பார்போம்.

1) வெளிநாட்டு மொழியாய் ஆங்கிலத்தை ஆய்வு செய்யும்தேர்வு (TOEFL)

2) ஆங்கில மொழியை ஆயும் பன்னாட்டு முறைத் தேர்வு (IELTS)

இந்த இரண்டு தேர்வுகளுமே உலகம் முழுவதும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இந்த இரண்டுத் தேர்வு முறைகளுக்கும் பெரிய வேறுபாடு என்று எதுவும் இல்லை.

அ) ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல்

ஆ) ஆங்கிலத்தில் சரளமாக எழுதுதல்

இ) ஆங்கிலத்தில் நன்றாக வாசித்தல்

ஈ) ஆங்கிலத்தில் நன்றாகக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல்.

மேலே குறிப்பிட்டு உள்ள இந்த நான்கு பிரிவுகளிலும் ஒரு மாணவர் எவ்வாறு தமது திறமையை வெளிப்படுத்துகிறாரோ அதை வைத்தே அவரது ஆங்கிலத் திறமையை அந்த இரண்டு தேர்வு முறைகளும் மதிப்பிட்டு முடிவு செய்கின்றன. அந்த மதிப்பீட்டை வைத்தே பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவரின் ஆங்கிலத் திறமையை கணித்துக் கொள்கின்றன.

இந்த இரண்டுத் தேர்வு முறைகளைப் பற்றியும் அவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை, அந்தத் தேர்வில் மதிப்பிடும் முறை ஆகியன பற்றி நாம் விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.

"இந்தத் தேர்வுகள் முதன்மை என்கின்றீர். அப்படி என்றால் இந்தத் தேர்வுகளை எழுதாமல் ஒரு பல்கலைக்கழகத்தினுள் நுழையவே முடியாதா?" என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தத் தேர்வுகளை மட்டுமே வைத்துப் பல பல்கலைக்கழகங்கள் உங்களின் ஆங்கிலத் திறமையை மதிப்பிடுவதில்லை. இந்தத் தேர்வுகளை எழுதாமலும் நீங்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியும்.

குறிப்பாக, இந்தியாவில் தனது இளநிலைப் பட்டத்தை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிற்றுவிக்கப்பட்டு பெற்ற ஒருவர், தனது முதுநிலைக் கல்விக்காகச் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவருடைய ஆங்கில வழிக் கல்வி முறையில் பெற்ற பட்டமே அவருடைய ஆங்கில மொழித் திறமைக்குச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அவர் தனியாக ஆங்கிலத் திறமையை நிறுவ வேண்டும் என்று எந்தத் தேர்வையும் எழுதத் தேவை இல்லாது போகின்றது. இந்த முறையை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வேறுபடும்.

இருந்தும், அவர் அந்த ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவது பயன் அளிக்கக் கூடிய ஒன்றாகும். ஏனெனில், அந்தத் தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்துச் சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்கி உதவி செய்கின்றன. மேலும், அவர் தனியாகச் சில உதவித் தொகைக்கு விண்ணப்பித்தாலும் அவருக்கு அந்த மதிப்பெண்கள் கட்டாயம் தேவைப்படும். எனவே வெளி நாட்டில் படிக்க நினைக்கும் மாணவர் TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளை எழுதுவது நல்லதாகும்.

சரி... ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுள் நுழைய TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளை எழுத வேண்டும். ஆனால் உலகத்தில் ஆங்கிலம் பேசாத நாடுகள் பல இருக்கின்றன. செர்மன், பிரான்சு, இரசியா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டின் மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இந்த நிலையில், அந்த நாடுகளில் சென்று படிக்க ஆங்கிலம் பெருமளவு உதவாத பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் பொழுது தான் அந்த நாடுகளே இதற்குரிய தீர்வினை நமக்கு அளிக்கின்றன.

 "எங்கள் நாட்டில் படிக்க வேண்டுமா... அப்படியானால் முதலில் எங்கள் மொழியைப் படி அப்புறம் அதன் வழியாக மற்றப் பாடங்களைப் படி" என்பதே அந்தத் தீர்வாகும்.

 அதாவது, நீங்கள் அந்த நாட்டுப் பல்கலைக்கழங்கங்களில் பயில வேண்டுமானால் முதலில் ஒரு வருடமோ அல்லது ஆறு மாதக் காலத்திற்கோ அந்த நாட்டின் மொழியைப் படித்து அதில் தேர்ச்சி ஆக வேண்டும். (இந்தக் கால அளவுகள் நாட்டிற்கு நாடு வேறுபடும். இந்தத் தேர்வுகளைப் பற்றிய விவரங்களை அந்தந்த கல்லூரி இணையத் தளங்களிலேயே கண்டு அறிந்து கொள்ளலாம்). அதாவது நீங்கள் படிக்க விரும்பும் படிப்பின் கால வரம்பு 3 வருடம் என்று வைத்துக் கொண்டால் நீங்கள் முதலில் 1 வருடம் அந்த நாட்டின் மொழியைப் படிக்க வேண்டும் அதற்கு அப்புறம் தான் உங்களுடைய 3 வருட படிப்பு தொடங்கும். சில நாடுகள் நீங்கள் அவற்றின் மொழியைப் படிக்க நிதி உதவி செய்வதும் உண்டு.

ஆனால் தற்சமயம் அனைத்து நாடுகளும் பல்வேறு நாடு மாணவர்களை கவர்வதற்காக ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாக வைக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் என்ன தான் ஆங்கிலத்தில் பாடங்களைப் படித்தாலும் அந்த நாடுகளில் வாழ்வதற்கு அந்த நாட்டின் மொழியை அறிந்து கொள்வது என்பது இன்றி அமையாத ஒன்றாகின்றது. இந்த விசயத்தை மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் தங்களது நினைவில் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- தொடரும். 

Pin It