சின்ன வயதில் மலையாள கரையோரத்தில் கப்பக்கிழங்காகதான் அறிமுகம். பிறகு வெயில் கிராமத்தில் குச்சி கிழங்காக தெரிய வந்தது.

பேர்கள் வேறாக இருந்தாலும் ரெண்டும் ஒன்று தான். கனத்த கம்பு போல கரடு முரடு தோற்றம் தான். வேக வைத்தால்.. கனிந்த பழுப்பு வெள்ளையில் சுவை பூத்திருக்கும். பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. பிடிக்கும் பிடிக்காது தாண்டி.. சுட சுட எடுத்து தட்டில் போட்டாலே எடுத்து கடிக்க தோன்றும். சில பகுதி கொஞ்சம் கடினமாக இருந்தாலும்.. குழைய வெந்த சில இடங்கள் மிக மிருதுவாக இருக்கும். அந்த இடம் சிறு வயதில் இருந்தே பிடித்தமான கடித்தலுக்கு உகந்தது.kappakilankuசர்க்கரை தொட்டு சாப்பிடுவது... மிளகாய் பொடி தூவி தின்பது என்று வட்ட வட்டமாய் வெட்டப்பட்ட குண்டு கன்னம் போல கப்பங்கிழங்கின் சுவை மெய்ம்மறந்து மெல்ல செய்யும். குழம்பு கூட ஊற்றி சாப்பிடலாம். குழம்பில் ஊறிய கிழங்கின் தன்மை குளிர்ந்த பின் இன்னும் மென்மை. தின்றவன் சொல்கிறேன் உண்மை உண்மை.

அந்நாட்களில் நண்பனின் தோட்டத்துக்கு போகும் போதெல்லாம் குச்சி கிழங்கு பிடுங்க போவதே சாகசம் தான். பிடுங்கி சுத்தம் செய்யும் போதே பச்சையாக தின்று விடுவதும் உண்டு. பச்சையாக தின்கையில் மாவு திரியும் ஒரு வகை சுவை... இப்போது தின்ன முடியாது என்றாலும்... சிறு வயதில் அது ஒரு இயல்பான தின்னும் போக்கு. கரும்பு கடிப்பது போல பல்லை பதித்து அழுத்தி கடித்து இழுத்தால்... துண்டாய் வந்து விடும் பச்சை கிழங்கில் எச்சில் ஊரும் சுவை இன்னமும் மூளையில் ஊர்கிறது.

பையில் போட்டு கொடுத்தனுப்பும் நண்பனின் சாய்ஸ்... வீட்டுக்கு போனதும் சிப்ஸ் போட்டு சாப்பிடு என்பது தான். கடை அளவுக்கு சிப்ஸ் வராவிட்டாலும்... பாட்டி செய்யும் சிப்ஸ் தனி சுவையில் வதங்கி அது ஒரு வகை ஹோம் மேட் சிப்ஸாக மாறி விடும்.

மதிய உணவாக கப்பங்கிழங்கு கொண்டு போகும் போதெல்லாம் டிபன் பாக்ஸ் தீர்ந்த பாக்ஸ் தான். ஆளுக்கொரு துண்டு எடுக்க... ஆழ்ந்த தியானம் தான் அரைபடும் வாய் கொண்டோனுக்கு.

பள்ளி நாட்களில் எலந்த வடை எலந்த பழம்... தட்ட முறுக்கு சீனி முட்டாய் என்று ரீசஸ் பீரியடில் வாங்கி திங்கும் போது.... இந்த குச்சி கிழங்கும் தன் பங்குக்கு தின்பண்டமாக காத்திருக்கும். இருபத்தைந்து பைசாவுக்கு ஒரு துண்டு என்று வாங்கி தின்றதாக நினைவு. நினைவுகளின் வழியே குச்சி கிழங்கு செடிகளில் இதயம் அசைகிறது. அசைத்து அசைத்து பிடுங்கும் லாவகம் சனிக்கிழமை விளையாட்டுகளை மீண்டும் இசைக்கிறது. குச்சி கிழங்கு செடிகளின் நடுவே நிற்பது வினோதமான ஆச்சரியம் நிறைந்த உணர்வு. அழுத்தி இறுக்கி நண்பன் பழக்கத்தின் பலத்தில் பிடுங்கி பிடுங்கி போடுவான். நான் எண்ணிக் கொண்டிருப்பேன். அது ஒரு தூர தேச நிலை.

பாஸ்பரஸ்.... கால்சியம் போன்ற சத்து கொண்ட கிழங்கில் மாவுச்சத்துக்கும் பஞ்சமில்லை. வேக வேக ஆவி பறக்கும் அதன் தோற்றமே இழுத்து தட்டு முன் அமர வைத்து விடும். துண்டுகள் தாண்டி குழைந்த பகுதிகளாக பார்த்து பார்த்து வாங்கி வாயில் குதப்பும் விருப்பம் இன்றும் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும்.

மலையாள கரையோர பழக்கம் இப்போதும் கூட அவ்வப்போது வீட்டில் கப்பங்கிழங்கு மாலை வேளையில் கமகமக்கும். பழுப்பு வெள்ளை உருளையில் வரி வரியாய் சுவை கீறி இருக்கும் இயற்கைதான் எத்தனை வியப்புக்குரியது. பார்க்க கடினம் போல இருக்கும். பல் பட்டதும் பிளந்து கொள்ளும். சின்ன துண்டுகளாக வெட்டி போட்டு மஞ்சள் போட்டு தாளிக்கவும் செய்வார்கள். மஞ்சள் சேர்ந்ததும் மஜாவாக காட்சி அளிக்கும் தட்டு கப்பையை... தட்டு தட்டு மக்கா என்பதாக தோன்றும் காட்சி... சிறு புன்னகைக்கானது.

டெம்போவில் கப்பக்கிழங்கு கொண்டு வந்து கடை தெரு முக்கில் நிறுத்தி...." கப்பேய் காப்பெய்..." என்று கத்துவார்கள். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்... ஊரில் பாதி பேர் அடுத்த 15 நிமிடத்தில் வண்டி முன் நிற்பார்கள். ரெண்டு மணி நேரத்தில் வண்டி காலி ஆகி விடும். ஞாயிறு மெஸ்மரிசம் அது.

வெந்த கப்பையின் மேல் தோலை உரிக்கும் வேலையை குதூகலமாக செய்வேன். முட்டை தோல் உரிப்பது... உருளையின் தோலை உரிப்பது என்று நாமளும் எவ்ளவோ உதவி செஞ்சிருக்கோம்மா... இப்ப தான்.. கிச்சன் திசை மறந்து போனது.

சோற்றுக்கு இல்லாத முன்பொரு பஞ்சத்தில் கப்பங்கிழங்கு தான் காப்பாற்றியது என்று பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.

இப்போதும் கூட சைட் டிஸ்க்கு கப்பையை பேப்பரில் கட்டிக் கொண்டு போகும் தீர்த்தவாசிகளை... முன் மாலை பொழுதில் கணுவாய் காட்டுக்குள் காணலாம்.

- கவிஜி

Pin It