நடக்கப்போவதை ‘உள்ளது உள்ளபடியே’ சொல்லுவது ஆபத்தானது என்பதை இங்கிலாந்தில் பிறந்து ஜெர்மனியில் வாழும் ஒரு ஆக்டோபஸ் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மேற்கு ஜெர்மனியில் ஒரு மீன்காட்சியகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த எட்டுக்கால் தசையுடலிக்குப் பெயர் ‘பால்’.

ஆக்டோபஸ் எப்படி ஜோசியம் சொல்லும்?

octopus_540

போட்டியில் விளையாடும் இரண்டு நாட்டு கொடிகளும், உணவாக கொஞ்சம் கருஞ்சிப்பிகளும் வைக்கப்பட்டன. எட்டுக்கால் ‘பால்’ நேராக ஸ்பெயின் கொடி இருந்த பெட்டிக்குச்சென்று சிப்பிகளை விழுங்கிக்கொண்டான். இதுவரை ஜெர்மனி விளையாடிய ஆறு போட்டிகளின் முடிவுகளையும் இந்த எட்டுக்கால் பால் இதே மாதிரி சரியாக கணித்திருக்கிறான்.

 குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக மேலும் சில ஜோசியங்களையும் இந்த ‘பால்’ சொல்லியிருக்கிறான்.

• உலகக்கோப்பை இறுதி கால்பந்து போட்டியில் வெற்றிவாகை சூடப்போவது ஸ்பெயின்தானாம்.
• உருகுவேயுடன் மோதப்போகும் ஜெர்மனி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்குமாம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெறப்போவது ஸ்பெயின் தான் என்று அறிவித்து ‘உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைத்த’ ‘பால்’ இப்போது ஜெர்மானியர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறான். பால் இப்படி ‘சேம்சைடு கோல்’ போடுவான் என்று ஜெர்மானியர்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் ஜோசியம் கூறும் அழகை (!) நேரடியாக தேசீய ஜெர்மன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஜெர்மானியர்கள் அடுத்தவேளை சாப்பாட்டிற்காக அவனை தங்களுடைய சமையலறைக்கு அனுப்பச்சொல்லியிருக்கிறார்கள். ஆக்டோபஸின் கபட ஜோசியத்தை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஜெர்மானியர்களும் ஆக்டோபஸ் எதிர்ப்பு பாடலை பாடிக்கொண்டிருந்தனர். ஆக்டோபஸின் அம்மாவை சந்தேகப்பட்டவர்களும் அந்தக்கூட்டத்தில் இருந்தனர்.

‘பால்’ பெயருக்கு பல இ-மெயில் மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றனவாம். ஸ்பெயின் பிரதமர் இந்த ஆக்டோபஸின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளார். இந்த ஆக்டோபஸை பாதுகாப்பாக ஸ்பெயினுக்கு கொண்டுவரவேண்டும் என்று ஸ்பெயின்நாட்டு தொழில்துறை மந்திரி கூறியிருக்கிறார். சாதாரணமாக ஆக்டோபஸ்கள் மூன்றாண்டுக்காலம் வாழக்கூடியவை. ‘பால்’ இப்போது இரண்டரை வயதுக்காரன். அடுத்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜோசியம் சொல்ல அவன் இருக்கப்போவதில்லை.

இடைக்கால ஏற்பாடாக அவனை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வருமா? விவசாயம் செழிக்குமா? விலைவாசி குறையுமா? கல்வியும் மருத்துவமும் முன்புபோல் இலவசமாகுமா? அரசியல்வாதிகள் திருந்துவார்களா? என்பது போன்ற இருபதாண்டு வினாக்களுக்கு விடை கேட்டால், அவனது சாயம் வெளுத்துவிடும்.

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
இன்னும் படிக்க: http://news.discovery.com/animals/psychic-octopus-world-cup.html#mkcpgn=rssnws1

Pin It