பெரும்பகுதி நீர் கடலிலிருந்தே மேலேழும்புகிறது. ஆறுகளின் பிறப்பிடமாக மலைகள் இருக்கின்றன. எந்த ஆறும் சமவெளிகளில் பிறப்பெடுப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் வெப்பநிலை 10 செல்சியஸ் வீதம் குறைகிறது. மழை மேகங்கள் மலைகளில் மோதி மேலெழும்போது குளிர்ந்து மழையைப் பொழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் நீலகிரி மலை, ஆனைமலை, பழனி மலை, கொடைக்கானல் மலை, குற்றாலம் மலை, மகேந்திரகிரி மலை, அகஸ்தியர் மலை, ஏலக்காய் மலை, சிவகிரி மலை மற்றும் வருஷநாடு மலையும்; கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலை, ஏலகிரி மலை மற்றும் செஞ்சி மலை; தொடர்ந்து இரத்தினகிரி மலை, வள்ளி மலை, சென்னி மலை, சிவன் மலை, கஞ்சமலை மற்றும் தீர்த்த மலை என பலவும் இருக்கின்றன.

thalaiyanai dam 620

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலாகப் பொழியும் வடகிழக்குப் பருவக்காற்று மழை சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, செங்கற்பட்டு, தென்னாற்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 150 செ.மீ முதல் 200 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும், திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம் மற்றும் வடஆற்காடு மாவட்டங்களில் 100 செ.மீ முதல் 150 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும் கொடுக்கிறது. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலாகப் பொழியும் தென்மேற்குப் பருவக்காற்று மழை நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமான மழையைக் கொடுக்கிறது. 2007-2008 மழைப்பொழிவின் படி காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மிக அதிக மழைப்பொழிவாக 1400 மி.மீ-கு மேல் மழையைப் பெற்றுள்ளன. திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவாக 1200 மி.மீ முதல் 1400 மி.மீ வரை மழையைப் பெற்றுள்ளன. புதுக்கோட்டை, விருது நகர், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் வேலூர் மாவட்டங்கள் மிதமான மழைப்பொழிவாக 1000 மி.மீ முதல் 1200 மி.மீ வரை மழையைப் பெற்றுள்ளன.

ஆரணியாறு, கூவம் ஆறு, பாலாறு, செய்யாறு, வராகு ஆறு, பெண்ணையாறு, மணிமுத்தாறு, குமுக்கி ஆறு, கொள்ளிடம் ஆறு, காவிரி ஆறு, நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, வெட்டாறு, வெள்ளாறு, வைகை ஆறு, குண்டாறு, வைப்பாறு, சித்தாறு, தாமிரவருணி ஆறு, கொற்றலையாறு, கெடில ஆறு, குடமுருட்டி, உப்பாறு, பவானி ஆறு, சிறுவானி ஆறு, சுருளியாறு மற்றும் மஞ்சலாறு என ஆறுகளும்; சாத்தனூர் அணை, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகை அணை, பூண்டி நீர்த்தேக்கம், பிளவக்கல் அணை, பேச்சிப்பாறை அணை, பைக்காதா அணை, செஞ்சி கல்வராயன் அணை, கல்லணை, பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை மற்றும் பரம்பிக்குளம் அணை என அணைகளும்;

பழவேற்காடு ஏரி, பேரிஜம் ஏரி, கொடைக்கானல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, ஊட்டி ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, சிங்காநல்லூர் ஏரி, வாலாங்குளம் ஏரி, வீராணம் ஏரி, வால்பாறை ஏரி, பெருஞ்சாணி ஏரி, பேச்சிப்பாறை ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, அம்பத்தூர் ஏரி, கழிவேலி ஏரி மற்றும் போரூர் ஏரி என ஏரிகளும்; ஒகேனக்கல் அருவி, குற்றாலம் அருவி, பைக்காரா அருவி, சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவி என அருவிகளுமாக மொத்தத்தில் தமிழக நீர் ஆதாரங்களாக 17 ஆறுகள், 15 ஏரிகள், 71 நீர்த்தேக்கங்கள், 40,319 குளங்கள், 21,205 குட்டைகள், 2,395 கால்வாய்கள், 1,62,11,391 தரைக் கிணறுகள் மற்றும் 2,87,304 ஆழ்குழாய் கிணறுகள் என்று பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது.

சொர்ணவாரி - சித்திரையில் நடவு நட்டு புரட்டாசியில் அறுவடை செய்யப்படுவது சித்திரைப் பட்டம். இதற்கு ‘கரீப்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. சம்பா பருவம் - ஆடி மாதத்தில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுவது ஆடிப்பட்டம். நவரைப் பருவம் - கார்த்திகையில் விதைத்து சித்திரையில் அறுவடை செய்யப்படுவது கார்த்திகைப் பட்டம். இதற்கு ‘ரபி’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இப்படியாக எல்லா காலங்களிலும் விவசாயம் செய்ய ஏற்ற சூழல் நிலவும் நாடு இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகம்.

- மு.நாகேந்திர பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It