தேவையானவை:

பச்சரிசி...............................1 /2 லி
பாசிப் பருப்பு......................1 /4 லி
பொட்டுக்கடலை.............100 கிராம்
தேங்காய்...........................1 மூடி
எள்.......................................20 கிராம்
வெல்லம்............................1 /4 கிலோ
ஏலக்காய்.............................6
சுக்கு.....................................1 /4 இன்ச் நீளம்  (பிடிக்காதவர்கள் விட்டுவிடலாம்)

செய்முறை:

வாணலியில் பச்சரிசியை எண்ணெய் இன்றி லேசாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் அது போலவே எண்ணெய் விடாமல் பச்சை வாசம் போகும் வரை வறுக்கவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி அதனையும் வாணலியில் போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பொட்டுக்கடலையும் லேசாக வறுக்கவும்.

porivilagan_urundai_370எள்ளையும் வாணலியில் போட்டு வறுக்கவும். எள் வறுக்கும் போது கவனம் தேவை. எள் பொரிய ஆரம்பிக்கும்போது, தீயை உடனே குறைத்து, உடனே ஒரு தட்டால் வாணலியை மூட வேண்டும். இல்லை என்றால் நீங்க அம்பேல்.. அத்தனை எள்ளும் அடுப்பைச் சுற்றி தெளிக்கப்பட்டுவிடும். அதான்பா வேகமாய் பொரிந்து வாணலியை விட்டு கோபித்துகொண்டு வெளியேறிவிடும். சட்டியில் எதுவும் இருக்காது.

வறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு,+ 50 கிராம் பொட்டுக்கடலை இவற்றைத் தனித் தனியாக மிக்சியில் போட்டு அரைக்கவும். மாவு கொஞ்சம் பொறு பொறு வென்று ரவைப்பத்தத்தில் இருக்க வேண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு, பொட்டுக்கடலை மாவு, வறுத்த தேங்காய், எள் + மீதி பொட்டுக் கடலை போட்டு கலந்து வைக்கவும்.

ஏலக்காயை வறுத்து பொடி செய்யவும். சுக்கையும் பொடி செய்யவும். வெல்லத்தை தட்டி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும்வரை நீர் ஊற்றவேண்டும். பின்னர் வெல்லம் இருக்கும் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.சிறு தீயில் வெல்லப்பாகு கொதிக்க வேண்டும். வெல்லம் கொதித்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.  பின் வெல்லப்பாகில் ஏலம் + சுக்குப் பொடி  போட்டு நன்கு காய்ச்சவும்.

அருகே, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக் கொள்ளவும்.அதில் வெல்லப்பாகை ஒரு சொட்டு விட்டுப் பதம் பார்க்கவும் நீரில் பாகைப் போட்ட உடனே கரைந்து போனால் அது இளம் பதம். பாகை விட்டதும் கரையாமல் இருந்தால் அதுதான் பாகுப்பதம். உடனே பாகை இறக்கி வைத்து அதனை ஒவ்வொரு கரண்டியாக மாவில் ஊற்றிக் கரண்டியால் கிளறவும். பிறகு கையால் பொறுக்கும் பதத்தில் அதனை உருட்டி உருண்டை பிடிக்கவும். வெல்லப்பாகு ஊற்றி உருண்டை பிடிக்கும்போது கவனம் தேவை. ரொம்ப சூடாக இருந்தால் கை கொப்புளித்து விடும். பாகு ஆறிவிட்டால், உருண்டை பிடிக்க முடியாது.

இந்த பொரி விளங்கா உருண்டை என்பது கிராமத்து பலகாரம். ஆனால் சுவை நன்றாக இருக்கும்.

Pin It