தேவையானவை:

1. விரால் மீன்....................1 /2 கிலோ 
2. சின்ன வெங்காயம்........200 கிராம்
3. இஞ்சி...............................1 இன்ச் நீளம்
4. பூண்டு..............................50 கிராம் / பெரியது 4
5. பச்சை மிளகாய்..............10
6. தக்காளி.............................4 
7. புளி......................................50 கிராம்/ 2 எலுமிச்சை அளவு
8. மிளகாய்ப் பொடி...............2 தேக்கரண்டி
9. மல்லி பொடி.......................1 தேக்கரண்டி
10. மஞ்சள் பொடி.....................கொஞ்சம்
11. சீரகம்.....................................1 தேக்கரண்டி..
12. வெந்தயம்...........................1/2 தேக்கரண்டி
13. கருவடகம்..இருந்தால்......கொஞ்சம்
14. உப்பு .....................................தேவையான அளவு
15. தேங்காய் எண்ணெய்.......1 தேக்கரண்டி
16. எண்ணெய்...........................2 தேக்கரண்டி
17. கறிவேப்பிலை.....................2 கொத்து
 
செய்முறை:

மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மெலிதாக நறுக்கி வைக்கவும். புளியை சுடுநீரில் ஊறவைத்து, கழுநீர் ஊற்றி கெட்டியாக கரைத்து வைக்கவும். இஞ்சி + 2 பூண்டுகள்/25 கிராம் பூண்டையும் நன்றாக அரைக்கவும். மீதி 2 பூண்டை அம்மியில்/பூரி கட்டையால் நன்றாக தட்டி வைக்கவும். வெங்காயத்தில் பாதியை மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளியை நான்காக வெட்டவும். மீதி வெங்காயம் + சீரகம் வைத்து நைசாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கருவடகம்+வெந்தயம் போட்டு, சிவந்ததும், அரைத்த இஞ்சி. பூண்டு விழுதைப் போடவும். பின் நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சிவந்ததும், தட்டிய பூண்டில் பாதி போட்டு வதக்கவும். பின் அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, மல்லி பொடி+ மஞ்சள் பொடி போடவும். பின் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். உப்பையும் போடவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். குழம்பு சுண்டி வாசனை வந்தததும், மீன் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போடவும். இது கட‌ல் மீன் போல உடைந்துவிடாது. மீன் போட்டதும் குழம்பை கரண்டியால் கிளறாமல், அப்படியே பாத்திரத்துடன் எடுத்து சிலுப்பி வைக்கவும். மீன் போட்ட 10 நிமிடத்துக்குள் மீன் வெந்துவிடும். எனவே, குழம்பில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

2 நிமிடம் கழித்து, குழம்பில் மீதியுள்ள தட்டிய பூண்டு + நறுக்கிய கறிவேப்பிலை தூவி குழம்பை இறக்கிவிடவும். விரால் மீன் குழம்பு சுடச் சுட, சாப்பிடால் தூள் டக்கராய் இருக்கும்...! இதனை இட்லி, தோசை, ஆப்பம் போன்றவைக்கு அருமையாக இருக்கும்...!
 
குழம்பு மீன் வறுவல்:

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் 2 கரண்டி குழம்பு விடவும். பின் அதில் இந்த குழம்பு மீனை எடுத்துப் போட்டு, லேசான தீயில் வறுக்கவும்.
 
வறுத்த மீனை எடுத்து சாப்பிட்டால் , சுவை..! அடடா..! கேட்கவே வேண்டாம்...! அதி அற்புதமே இருக்கும்..! அந்த வறுத்த குழம்பையே போட்டும் சாப்பிடலாம். கலக்கலாக இருக்கும்...!

Pin It