தேவையானவை:

1. பாஸ்மதி அரிசி/ நீளமான அரிசி....... 1 ஆழாக்கு
2. சிவப்பு அரிசி/ சிவப்பு சம்பா அரிசி.......1 /4 ஆழாக்கு /கைப்பிடி
3. அச்சு வெல்லம்/சீனி..............................400 கிராம்
4. பால் ........................................................ 200 மில்லி
5. குங்குமப்பூ............................................. ஒரு சிட்டிகை
6. முந்திரி ..................................................15
7. உலர்ந்த திராட்சை...............................15
8. ஏலம்.......................................................3
9. கிராம்பு....................................................4
10. பட்டை........................................................சிறு துண்டு
11. ஜாதிக்காய் பொடி....................................ஒரு சிட்டிகை
12. வெண்ணெய்/நெய் ..................................50 கிராம்
13. உப்பு..........................................................ஒரு சிட்டிகை

செய்முறை:

இரண்டு அரிசியையும் கல் பார்த்து வைக்கவும். குங்குமப்பூவை எடுத்து கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் போடவும். நீரின் நிறம் மாறி, கொஞ்சம் கொஞ்சமாய் அழகான மஞ்சள் நிறத்து வரும்.இந்த நீரில் குங்குமப்பூவின் மகரந்த தாள்களும் இருக்கும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைக்கவும். அதில் வெல்லத்தை உடைத்துப் போடவும்.வெல்லம் போடாமல் சீனியும் போடலாம். வெல்லப்பாகை ஒரு ௧௦ நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். வெல்லம் என்றால் பாகை வடிகட்ட வேண்டும். ஏனெனில் இதில் மண்/கல் இருக்கலாம்.

பின் அடுப்பில் கடாயை வைத்து முந்திரி, திராட்சை, ஏலம் +கிராம்பை வறுக்கவும். வறுத்த ஏலம் + கிராம்பை பொடி செய்யவும்.  ஒரு ஜாதிக்காயை எடுத்து அதனை கத்தியை கொண்டு அதனை மெதுவாக சுரண்டவும். கொஞ்சூண்டு, ஒரு சிட்டிகை பொடி அளவு வந்ததும் நிறுத்தி விடவும். அதிகம் போட்டால்,அதன் அதிக மணம் குங்குமப்பூ சாதத்தை சாப்பிட முடியாமல், செய்துவிடும்.

சிவப்பு அரிசியை கழுவி அரிசி போல 3 மடங்கு நீர் ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை லேசாக வறுக்கவும். இது அரிசி குழையாமல் இருக்க இது உதவும். பின் குக்கரில் 1 1 /2 ஆழாக்கு நீர் + பால் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசியைப் போடவும். ஒரு தேக்கரண்டி வெண்ணெய்/நெய் போடவும். ஒரு சிட்டிகை உப்பு போடவும். உப்பு இனிப்பின் சுவைக் கூட்டிக் கொடுக்கும்.

குக்கரை மூடி, ஒரு சத்தம் வந்ததும் சிம்மில் வைத்து, அதன்பின் 5 நிமிடம் ஆனதும் இறக்கி விடவும். ஆவி போனபின், மூடியைத் திறந்து , அதில் வேக வைத்த சிவப்பு அரிசி+ குங்குமப்பூ+ ஊறவைத்த நீர்+சர்க்கரைப் பாகை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். 5 நிமிடம் ஆனதும், வெல்லப் பாகு சாதத்தில் இறுகி கேட்டியாத் துவங்கும். இதில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடி செய்த பட்டை, கிராம்பு,ஜாதிக்காய் + நெய் ஊற்றி கிளறி இறக்கிப் பரிமாறவும்.
 
மணக்க, மணக்க சூடாக, சுவையுடன் குங்குமப்பூ சாத்தத்தை ஒரு பிடி பிடியுங்கள்.! இது வட இந்திய உணவு வகை. அதனால்தான் பட்டை போடுகிறோம். ஆனாலும் இதன் சுவை, சும்மா பட்டையைக் கிளப்பிடும்..!

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It