கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுடன் கம்போடியாவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. காம்புஜராஜா என்ற இந்திய அரசன் கம்போடியா சென்று, மேரோ என்ற பெண்னை மணந்து, இருவரும் இணைந்து அரசாட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. காம்புஜராஜா என்ற பெயரிலிருந்து 'கம்பூசியா' (kampuchea) என்றாகி தற்போது கம்போடியா ஆகி இருக்கிறது. இவர்களின் வழிவந்தவர்களே "கெமிர்" என்ற அரச குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.

angkor-wat-temple

கவுண்டின்யா என்ற அரசன், தான் கண்ட கனவின் படி கம்போடியா சென்று, சோமா என்ற பெண்ணை மணந்து, அரசாட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அது எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து இந்து மதம், இந்துக்கடவுளர்கள், இந்தியக் கலைகள், புத்த மதம் எல்லாம் கம்போடியா சென்றிருக்கின்றன. இந்தியா சீனாவை இணைத்த சில்க் ரூட்டில் கம்போடியா இருந்ததால் நம் நாட்டுடன் வாணிகம் இருந்திருக்கிறது. வணிகர்கள் மூலமும் இந்து மதம், புத்த மதம், இந்தியக்கலைகள் அங்கு சென்றிருக்கின்றன.

கி பி 802ல் இரண்டாம் ஜெயவர்மன் என்ற அரசன் தாய்லாந்து, பர்மா, மற்ற நாடுகளின் பல பகுதிகளை வென்று, வங்கக் கடல் வரை "கெமிர்" என்ற பலமிக்க அரசை நிறுவியிருக்கிறான். இந்தக் கெமிர் அரசு ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இருந்திருக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஜெயவர்மன், சூரிய வர்மன், ராஜேந்திர வர்மன், உதயாதித்ய வர்மன் போன்ற அரசர்களின் பெயர்கள், நம் தமிழகத்து அரசர்கள் பெயர் போலவே இருக்கின்றன. சில இடங்களில் உள்ள கல்வெட்டுக்களின் எழுத்துக்கள் பல்லவர்களின் எழுத்துக்கள் போன்று இருக்கின்றன என்று கூறப்படுகிறது. நம் மன்னர்கள் குறிப்பாக ராஜேந்திர சோழன் படையெடுத்து வென்றபோது கட்டினாரா என்று தெரியவில்லை.

இவையெல்லாம் அங்கோர் வாட் பற்றி வலைத்தளத்தில் கண்டறிந்த செய்திகள். இந்தச் செய்திகள் எல்லாம் மனதில் உந்த, உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலைக் காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய கோயில். 1113_1160க்குள் இரண்டாம் சூரியவர்மன் என்ற கெமிர் மன்னரால் அங்கோர் வாட் நகரமும், விஷ்ணுவுக்காக மிகப் பெரிய இந்தக் கோயிலும் கட்டப்பட்ட பொழுது அந்தப் பகுதி மிகச் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். மதச்சார்புடன் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுள் உலகில் இதுவே மிகப் பெரியது. அந்நகரத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். தொழிற் புரட்சிக்கு முன் இருந்த நகரங்களில் இதுவே மிகப் பெரியது.

அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.

முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு, நம் சோழர் காலக் கோயிலைப் போல இருந்த அக்கோயில் மேற்கு பார்த்த வண்ணம் இருக்கிறது. சூரிய உதயத்தின் போது சூரியன் கோயிலின் பின் எழுவது பார்க்கப் பரவசமாயிருக்கும் காட்சி என்று கூறப்பட்டதால் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஆனால் அன்று மேகமூட்டமாய் இருந்ததால் சூரிய உதயம் காண முடியவில்லை. சற்று மேலே சென்றபின் தான் எட்டிப் பார்த்தான்.


கோயிலைச் சுற்றி 5 கிமீ சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பெரிய கோயிலின் அடித்தளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மிகவும் உயரமாகவோ, குறைந்தோ போகாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. 53 மில்லியன் கன அடி மணலைத் தோண்டி எடுத்து, பல ஆயிரம் மக்கள் உழைப்பினால் இது தோண்டப்பட்டிருக்கிறது.

அகழிக்கு முன்னால் பாதுகாப்பிற்காக சிங்கங்களின் சிலைகள் உள்ளன. ஐந்து தலைநாகமும் அதன் நீளமான உடலும் கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி, உள்ளே சற்று தூரம் சென்றபின் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

apsara statueதூரத்தில் இருந்து பார்த்தால் தஞ்சைக் கோயில் சுற்று மண்டபம் போல் தூண்களுடன் தெரிகிறது. உயரமான பீடத்தின் மேல் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவர் முழுவதும் நீளமாக, பெரியளவில் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள், பாற்கடல் கடைவது போன்றவை ஓவியம் போன்று, சிறிதளவு புடைத்த சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. போர்களத்தில விபீஷணன், லட்சுமணனுடன் இரரமன், இராவணனுடன் போருக்கு நிற்பது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வருவது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்க்க நேரம் தான் இல்லை.

மாபெரும் கோயில் அது. அடுத்த தளத்தில் நூலகம் என்று சில கல்கட்டடங்கள் காட்டப்படுகினறன. ஆங்காங்கே அப்சரா சிற்பங்கள், அலங்காரக் கற்பலகணிகள் இருக்கின்றன. சுமார் 1800 அப்சரா சிற்பங்களும், அவற்றில் சுமார் 300விதமான தலை அலங்காரங்கள் இருக்கின்றனவாம். சில இடங்களில புத்தர் சிற்பங்கள் வைக்கப்பட்டு தற்பொழுதும் வழிபாடு நடந்து வருகிறது.

இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த மேல் தளத்திற்கு செங்குத்தான படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அங்கு ஏறிச் சென்று சுற்றிப் பார்த்தால் கோவிலும் அதைச் சுற்றிலுமுள்ள மரங்களும் மிக அழகாக இருக்கிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் மேற்கு நோக்கி இருப்பதை வைத்து இக்கோயில் மன்னன் இறந்த பின், அவனது அஸ்தியை வைக்கும் இடமாகவும் கட்டப்பட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோயில் முழுவதும் கற்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருக்கிறது. உட்பகுதி "லேட்டரைட் "(laterite) எனப்படும் எரிமலைக் கற்களாலும், மேற்பகுதி செதுக்குவதற்கு வசதியாக மணற்கற்களாலும்(sandstones) கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள குலன் (kulen hills) மலையிலிருந்து நதி வழியாகக் கற்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெரும்பாலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவற்றில் மரக் கொம்புகள் செருகி தூக்கியோ இழுத்தோ உபயோகித்திருக்கிறார்கள். கற்களைச் சேர்க்க சாந்தோ, மண்ணோ பூசவில்லை. ஒன்றை ஒன்று தேய்த்தே நேர்த்தியாக இடைவெளி இல்லாமல் சேர்த்திருக்கிறார்கள். நவீன கருவிகள் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இவ்வாறெல்லாம் செய்தது விந்தை தான்.

கோயிலின் கூரைப்பகுதி, கோபுரப்பகுதியில் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உட்கூடு இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். தஞ்சை மற்றும் சோழர் கால விமானங்கள், கோபுரங்கள் கற்களால் உட்கூடு உள்ளபடி தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது கோபுரத்தின் கீழே இருந்து அண்ணாந்து பார்த்தால் மேற்பகுதி வரை தெரியும்.

முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. சைவத்திற்குரிய லிங்கம், ஆவுடையாரும் சில இடங்களில் காணப் படுகின்றன. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் (theravada buddhism)சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.

9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது. அதன் பின் தாய்லாந்துடன் போர் மற்றும் பல காரணங்களால் தலைநகர் நாம்பென்னிற்கு மாற்றப் பட்டிருக்கிறது. அதன்பின் அங்கோர்வாட் நகரின் முக்கியத்துவம் குறைந்து உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்த இடமாகக் கோயில் மாறியிருக்கிறது. 1900களில் பிரெஞ்சுக்காரர்கள் இக் கலைப் பொக்கிஷத்தைக் கண்டறிந்து, உலகிற்கு அறிவிக்கும் வரையில் மரங்கள் வளர்ந்து, சிதைவுற்ற நிலையில் இருந்திருக்கிறது.

பிரெஞ்சுக்காரர்கள் கோயிலை பழைய பாணி மாறாமல் சீரமைத்து இருக்கிறார்கள். வியட்நாம் போரையும் உள்நாட்டுப் போரையும் தாங்கி கோயில் நிமிர்ந்து நிற்கிறது. இப்பொழுதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இப்பிரமாண்டத்தைப் பார்க்க வருகிறார்கள். மேற்கத்திய மக்களைக் காட்டிலும் ஜப்பான், கொரியா, சீனா போன்ற கீழை நாட்டு மக்கள் அதிகம் வருகின்றனர். பலவிதப் படப்பிடிப்புக் கருவிகளுடன் வந்து படம் எடுக்கின்றனர். நாங்கள் சென்றிருந்த போது ஒருவர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பிளேன் மாதிரி ஒரு கருவியில் காமிராவை வைத்து மேற்பகுதியிலிருந்து கோவிலைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

angkor wat temple

தமிழகத்திலிருந்து சென்ற ஒரு மன்னனால் தமிழக முறையில் கட்டப்பட்ட ஒரு கோயில், இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள பிரமாண்ட இந்துக்கோயில் என்றெல்லாம் இதைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். கோவிலின் தூண்களுடன் கூடிய நீண்ட பிரகாரம் தஞ்சைக் கோயிலை ஒத்திருந்தாலும், கோபுரங்கள் அகலமாக இல்லாமல் குறுகலாக, உயரமாக பூரி கோயில், மற்ற சில வட இந்தியக் கோயில்கள் போல், ஆனால் கல்லினால் கட்டப் பட்டிருந்தன.

மேலும் அங்கு புடைப்புச் சிற்பங்கள் தவிர, நமது கோயில்களில் இருக்கும் முழுமையான சிற்பங்கள் இல்லை. ஆனால் இந்தியாவின் தாக்கம் நிறைய இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்திய பாணியுடன், அங்கு நிலவிய முறை, அதன் அண்டை நாடான சயாம் போன்ற நாடுகளின் பாணி எல்லாம் சேர்ந்து ஒரு மாபெரும் கோயிலாக உருவாகி இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே நமது நாட்டின் புகழ், பெருமை, கலை, கலாச்சாரம் கடல் கடந்து சென்று பரவி நம் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து, மகிழ்வுடன் அடுத்த கோயிலுக்குச் சென்றோம்.

Pin It