தொடர்ந்து மூன்றாவது வருடமாக மூணாறு பயணம் செல்ல நேரிட்டது.

முதல் முறை, புதிதாய் வாங்கிய மோட்டார் சைக்கிளில் 2016 ஆண்டு பக்கத்து வீட்டுத்தம்பியுடன் சென்று வந்தேன். இரண்டாம் முறை அதே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்று வந்தேன். இம்முறை 12 ஆண்டுக்குப் பிறகு மூணாறில் குறிஞ்சிப் பூ பூப்பதால், குறிஞ்சிப் பூ போர்த்திய மலைகளின் அழகை, எப்படியாவது கண்டு ரசித்து புகைப்படம் எடுக்கத் திட்டம் தீட்டினேன்.

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறிஞ்சிப் பூ பூத்தாலும், மூணாறில் மட்டுமே ஏழு மலைகளில் பூத்து, குறிஞ்சி நிலம் குறிஞ்சியால் அலங்கரிக்கப்படுகிறது. இரண்டாண்டுக்கு முன்னர் அங்கு சென்றபோது, ஒரு உணவகத்தில் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிந்தது. அதில் மலை முழுவதும் நீல நிறத்தில் குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்கி, அதில் வரையாடு ஒன்று இடப்புறம் நோக்கி நின்று வலப்புறமாக தலையைத் திருப்பி நின்ற காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.

moonar 1மூணாறில் ஏற்கனவே அனைத்து சுற்றுலாப் பகுதியும் சென்றிருந்ததால் , இம்முறை குறிஞ்சிப் பூ மட்டுமே பார்க்கச் செல்வது சற்று செலவீனமாகத் தெரிந்தது. ஆதலால், வேறு எதாவது நல்ல பகுதிக்குச் செல்லலாம் என எண்ணி இணையதளங்களை நாடும் போது, சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில், வனத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் பருவமழை காலத்தில், வனத்தின் பசுமை மற்றும் அதன் செழிப்பு , புகைப்படம் எடுப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என என்னி, இறுதியாக தூவானம் அருவியின் அருகே உள்ள தங்கும் விடுதியை முன்பதிவு செய்தேன். இப்பயணக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் இடம் "ஏரவிக்குளம் தேசியப் பூங்கா" மற்றும் சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள "தூவானம் அருவி ".

இரு மாதங்களுக்கு முன்னரே மூணாறில் தங்கும் விடுதி, தூவானத்தின் தங்கும் விடுதி என அனைத்து முன்பதிவுகளையும் செய்துவிட்டு, நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பல புகைப்பட கனவுகளோடு நாட்கள் நகரும் வேளையில், பருவமழையின் வீரியம் அதிகரித்து, கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. விடாது பெய்த மழையில், அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிறையத் தொடங்கியன. பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வீடுகளே தகர்ந்து விழும் துயரங்களும் நிகழ்ந்தன. ஏறக்குறைய மூன்று வாரங்கள் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து முக்கிய நகரங்களின் சாலை வழிகள் துண்டிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதியில், கேரளாவை மூழ்கடித்துச் சென்றது பருவமழை..!

அதனைத் தொடர்ந்து நாம் நீட்டிய உதவிக்கரங்களினால் விரைவாக நிலைமை சீரடைந்து வந்தது. ஆதலால், பயணம் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என குழப்பமே மிகுந்திருந்தது எனக்கு...! இதற்கிடையில், பேருந்துக்கட்டணம் சென்னையிலிருந்து மூணாறுக்கு (படுக்கை வசதியுள்ள) சாதாரண நாட்களில் ரூபாய் 800 என இருந்தது, விடுமுறை நாட்களில் ரூபாய் 1400 என மாறியது. ஆதலால் ரயிலில் உடுமலை வரை சென்று அங்கிருந்து பேருந்தில் செல்வது, சிக்கனமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அவ்வாறே முன்பதிவும் செய்தேன்.

செப்டம்பர் முதல் தேதியில் மூணாறில் தங்கும் விடுதிகள் மற்றும் சாலைகளின் நிலைமை சீராக ஆரம்பித்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றுமில்லாததே..! அதற்கேற்றவாறு எனது அலுவலக நண்பரும் செப்டம்பர் முதல் வாரத்தில் அங்கு சென்று வர, எனது பயணம் திட்டமிட்டவாறு அமைந்தது.

பயணத்தின் முதல் நாள் சென்னையின் போக்குவரத்துக்கு நெரிசலை சமாளித்து, ரயிலை பிடிக்க போதும் போதும் என்றாகிவிட்டது. இதனைத் தவற விட்டால், அனைத்து திட்டமும் சொதப்பலாகிவிடும். ஏனென்றல் பெரிய விடுமுறைக்கு முந்தைய தினம், சென்னையிலிருந்து கிளம்பும் பேருந்து செங்கல்பட்டை அடைய நள்ளிரவு மணி ஒன்றாகிவிடும்..! தனியார் பேருந்து என்றால் தாமதத்தை ஓரளவிற்கு ஈடு கட்டி விரைவாகச் செல்வார்கள். அதே அரசுப்பேருந்து என்றால், நம்மூர் செல்ல அடுத்த நாள் மதியமே ஆகிவிடும்…! இதெற்கெல்லாம் பயந்தே பெரும்பாலானவர்கள் ரயிலில் சென்று விடுவது வழக்கம்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் உடுமலைபேட்டையை ஒரு மணிநேர தாமதத்தில் சென்றடைந்தது. இங்கிருந்து மூணாறு செல்ல போதுமான பேருந்து வசதியை கேரளா அரசும், தமிழக அரசும் செய்துள்ளது. காலை வேளையில் ஒரு மணி நேர இடைவெளியிலும், மதிய நேரங்களில் இரண்டு மணிநேர இடைவெளியிலும் , மாலை மற்றும் இரவு நேரங்களில் மூன்று மணி நேர இடைவெளியிலும் பேருந்து வசதி உள்ளது, ஜீப் வசதியும் உள்ளது. ஆனால் அதில் ஒருவர் இருக்கையில் மூவர் அமரும் நிலைதான்...! ஆதலால் பேருந்துப் பயணமே சரியானதாக இருக்கும்.

moonar 2காலை உணவு உண்ட பின், மணி பத்தை நெருங்கியது. பேருந்து கால அட்டவணைப்படி அடுத்த பேருந்து 10.40 மணிக்கே..! ஆனால் ஒரு கேரளா அரசு பேருந்து நின்றிருந்தது. பிறகு விசாரிக்க, பத்து மணிக்குக் கிளம்புவதாக கூறினார்கள். ஓடிச்சென்று ஏறினால், ஏற்கனவே ஏறியவர்கள் உட்கார இடமின்றி நின்றுகொண்டிருந்தனர். ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் மலைப்பயணத்தில் நிற்க முடியாது எனத் தெரிந்து கீழே இறங்கும் வேளையில் நடத்துனர் வந்து, எங்கு போக வேண்டும்? எனக் கேட்க, “மூணாறு” என்று பதில் கூற, 20 நிமிட பயணங்களில் இறங்கும் நபர்களை எழுந்திருக்க வைத்து எங்களை அமர வைத்தார். அவர்களும் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து நின்றனர். இந்த செயல் சற்று பாவமாகத்தான் இருந்தது..! ஆனால் தொலைதூரங்களுக்கு செல்லுவோருக்கே முன்னுரிமை எனும் நடத்துனரின் நியதியால், நங்கள் அமர்ந்தது சரியே எனத் தோன்றியது.

நகரத்தை விட்டு வெளியே சென்றதும், வான்வெளியை மறைத்து, வளைவான கிளைகளை விரித்த புளிய மரங்கள் நிறைந்த சாலையில், வாகனத்தின் வேகம் பெருக்கெக்க சில்லென்ற காற்று நம்மைத் தழுவியது. இருபது கிலோமீட்டர் பயணத்திற்கப்பால், சாலையின் அகலம் குறைந்து, மலையின் அடிவாரத்தைத் தொட்டு, அதன் மேல் ஏற ஆரம்பித்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சோதனைச் சாவடியை கடந்து பேருந்து சென்றது. தென்மேற்குப் பருவமழை கேரளாவில் கொட்டியதில் சில விழுக்காடு கூட இங்கு பெய்யாமல், பொய்த்து விட்டதே என்னும் அளவிற்கு மரங்கள் காய்ந்து போய் சூடான காற்று வர ஆரம்பித்தது. ஆங்காங்கே வேகத்தடைகளும் வளைவு நெளிவாக சென்ற சாலைகளினால் பேருந்தின் வேகம் குறையத் தொடங்கியது. சில நிமிடங்களில், எதிர்பாராதவிதமாக சில்லென்ற காற்று நம்மைத் தாக்கியது. என்னவென்று பார்த்தால், அமராவதி அணையின் மேற்கு எல்லை..!

அடுத்த எட்டு கிலோமீட்டர் தொலைவில் சின்னார் வனவிலங்கு சரணாலயம் எல்லை (கேரளா) ஆரம்பமாகிறது. இங்கே ஓடும் சின்னார் ஆறு தமிழக மற்றும் கேரளா எல்லையாக அமைகிறது. ஆதலால் இருமாநில வனத்துறையும் சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.

moonar 3உடுமலை - மூணாறு சாலை குறுகலாக இருந்த போதும் நீளமான பேருந்துகளே இயக்கப்படுகிறது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளில் மட்டும், பேருந்து ஒருமுறை பின்னோக்கி வந்து மீண்டும் முன்னேறிச் செல்கிறது. ஏறக்குறைய ஆலம்பட்டி வரை பசுமையை அவ்வளவாக காணமுடியவில்லை. அதனைத் தொடர்ந்து பருவமழை நனைத்த, இல்லை இல்லை பருவமழை அடித்த காடுகள் பசுமையாய் காணப்பட்டன. மழைக் காலங்களில் கூட இந்த இடங்கள் மதிய வெயிலினால் அனல் காற்றை கக்கிக் கொண்டிருந்தன. நாளை இங்கு வந்து தூவானம் அருவிக்கு நடைபயணம் சென்று இரவு தங்க வேண்டும். இவ்வெயிலை நினைக்கும் போது அப்பயணம் மிகுந்த சிரமமாகத் தோன்றியது.

அதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு கரிமுட்டி அருவி அதற்கான அழகில், சாலையோரம் கொட்டிக் கொண்டிருந்தது. இது மறையூர்க்கு சற்று முன்னதாகவே காணப்படுகிறது. பின்னர் பேருந்து மறையூர் அடைந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மூணாறு கிளம்பிச் சென்றது. அப்போதுதான் மலைப் பிரதேசங்களுக்கே உண்டான குளுமை வரத் தொடங்கியது. வழியில் லக்கம் அருவி, தேயிலைத்தோட்டம், தூரத்து மலைகளின் கொட்டும் அருவிகள், மழையில் சரிந்த நிலப்பரப்புகள், சாலையோர கிராமங்கள், சரிசெய்த சாலைகள், குக்கிராம பேருந்து நிறுத்தங்கள், சோதனைச் சாவடிகள், சாலையைக் கடக்கும் காட்டாறுகள் என மதிய நேர பயணம், பசியோடு எங்களை மூணாறுக்கு அழைத்துச் சென்றது.

பிறகு ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியில் சென்று மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலையில் சிறிது தூரம் வெளியில் சென்று வர, பொத்தமேடு பகுதியைத் தேர்தெடுத்து ஆட்டோவில் அங்கு சென்றோம்.

moonar 4மூணாறில் இருந்து கொச்சின் செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளே இடம்தான் இது. பசுமைப் பள்ளத்தாக்கான தேயிலைத் தோட்டத்தை கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்டு ரசிக்குமாறு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து ஏறக்குறைய 60 கிலோமீட்டர் தூரத்தில் இடுக்கி அணையின் வளைந்த சுவர் கூட, பனி விலகிய போது கண்டு ரசிக்கலாம் என அங்கிருந்த தேநீர்க் கடை நபர் கூறினார். ஆனால் எங்கள் கண்களுக்கு அப்போது அது தென்படவில்லை, மூடு பனி சூழ்ந்திருந்ததால்..!

அவ்வாறே சில மணி நேரங்கள் கழித்துவிட்டு, இரவில் விடுதிக்குச் சென்று , உணவு உண்ட பின்னர் தூங்கச் சென்றோம். இரவில் சற்று குளிர் அதிகமாகதான் இருந்தது. இருந்தாலும் குளிர் காலங்களில் இருப்பதைப் போன்று உறைநிலையைத் (0 டிகிரி) தொடவில்லை.

மறுநாள் காலை விரைவாகக் கிளம்பி, எரவிக்குளம் பூங்காவை காலை 8 மணிக்குள் அடைவதாகத் திட்டம். ஆனால் விடுதியில் காலை உணவு எட்டு மணிக்கு மேல் தயாரானதால் சற்று தாமதமாகிவிட்டது. அதன் பின்னர் கேரளா அரசுப் பேருந்து உடுமலை செல்லத் தாயாராய் நின்றிருந்தது. அதில் ஏறி அமர, அடுத்த 15 நிமிடங்களில் பூங்கா வந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், அடையாள அட்டை சரி பார்த்துவிட்டு, பூங்காவினுள் செல்லும் வாகனத்தில் ஏற வரிசையில் நின்றோம்.

முப்பது பேர் அமரக்கூடிய சிற்றுந்தில், நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் தேயிலைத் தோட்டங்கள், தூரத்து மலைத்தொடர்கள் என நம்மை வெகுவாய்க் கவருகின்றன. இதற்காக நபருக்கு ரூபாய் 120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது சற்று அதிகம் தான்..!

இவ்வாண்டு குறிஞ்சிப் பூ பூப்பதால், ஒவ்வொரு பத்து மீட்டர் தூரத்திற்கும் ஒரு வனக்காவலர் உள்ளார். குறிஞ்சிப் பூவை தொட அனுமதி இல்லை. பறித்தால் ரூபாய் 2000 அபராதம். இது இப்பூங்கவிற்கு மட்டுமல்லாமல் மூணாறு முழுவதுக்கும் அமல்படுத்தப்பட்ட சட்டமாகும்.

moonar 5ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை குறிஞ்சிப் பூ பூக்கும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்நேரம் மலை முழுவதும் பூ பூத்து, நீலப் போர்வையாக காணப்பட்டிருக்க வேண்டும். தென்மேற்குப் பருவமழையின் சீற்றத்தால், ஏற்கனவே பூத்த மற்றும் பூக்கத் தொடங்கியவை அனைத்தும் அழுகி, கொட்டிவிட்டன. ஆதலால் மழைக்குப் பின்னர் இப்போது ஆங்காங்கே பூத்துக் காணப்படுகிறது. இது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே..! மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை இந்த மூன்று மாதங்களுக்கு சில லட்சங்களில் எதிர்பார்க்கப்பட்டதால், கழிப்பிட வசதி , சாலை வசதி, கண்காணிப்பு நபர்கள், சாலையோரத் தடுப்புகள் என அனைத்தும் சிறப்பாய் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளம் காரணமாக சுற்றுலாத்துறை, வனத்துறை, விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்துக்கு என அனைத்தும் சராசரி வருமானம் கூட கிடைக்காமல் முடங்கித் தவித்தன.

பதினைந்து நிமிடப் பயணத்திற்கு பிறகு பூங்காவை அடைந்து, ஆங்காங்கே பூத்துக் குலுங்கிய மலர்களை ரசித்துவிட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த நீலகிரி வரையாடுகளையும் கண்டு ரசித்தோம். சாதாரண வருடங்களில் வரையாடுகளை மட்டுமே காண முடிகிறது. இவ்வாண்டு குறிஞ்சியுடன் வரையாடுகளைக் காண்பது எழில்மிகு தோற்றமாக அமைந்தது.

ஏரவிக்குளம் தேசியப் பூங்கா அமைந்துள்ள மலைத்தொடர் ராஜமலை என்றழைக்கப்படுகிறது. ஆதலால், இப்போது “ராஜமலை யாரால் அழகு?" என்ற கேள்வி வரலாம் ..! நித்தமும் அலங்கரிக்கும் வரையாடா? பனிரெண்டு ஆண்டுக்கொருமுறை வரும் குறிஞ்சி மலரா? குறிஞ்சி நிலத்தையாலும் வரையாடுதான் என்றும் அழகு என்பேன்..!

moonar kurinji flowerஅதன் பிறகு குறிஞ்சி மலரை மிக அருகிலும், வரையாடு குறிஞ்சிப் பூவிற்கிடையே இருப்பதையும், தூரத்தில் பாறையின் மேல் கம்பீரமாய் நிற்பதையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரமாக எனக்கான பாணியில் சில புகைப்படங்களோடு பூங்காவை விட்டு விடை பெறும் நேரம் வந்தது.

அப்போது ஒரு சிறுமி அழகாய் கோபித்துக்கொண்டு அவள் பெற்றோரை விட்டு வேகமாக நடந்து கொண்டிருந்தாள். என்னவென்று கேட்டபோது வெயில் தாங்க முடியவில்லையாம் ..! மூணாறில் அப்போது கிட்டத்தட்ட 27 டிகிரி இருந்திருக்கலாம். அதுக்கே அந்த நிலை ..! அவ்வளவு கோபம்...! அப்போது, சிறு வயதில் சட்டையின்றி கோடை வெயிலில் விளையாடி, வியர்க்குருவிற்கு நுங்கு பட்டைகளைத் தடவிய நாட்கள் நினைவில் வந்து சென்றன. அதை நினைக்கும் போது, இதெல்லாம் என்னவென்று சொல்வது..!

நேரமும் 12 மணியை தொடும் வேளையில் திரும்பிச் செல்லக் காத்திருந்தோம். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் சிற்றுந்து திரும்பிச் செல்லும் போது இங்குள்ள நபர்களை ஏற்றிச் செல்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகல் முழுவதும் சேவை புரிந்தவண்ணம் இருந்தன.

moonar varaiaaduஇறுதியாக பூங்காவின் நுழைவிடம் வர, கீழே இறங்கி, அருகிலிருந்த தேயிலைத்தூள் விற்குமிடத்தில், சிறிது வாங்கிவிட்டு காத்திருக்கும் வேளையில், பேருந்து வந்தது. தற்போது உடுமலை வழியில் ஆலம்பட்டி எனுமிடத்தில் இறங்க வேண்டும்.

தூவானம் அருவிக்குச் செல்ல, மதியம் 2 மணிக்கு அங்கிருக்கவேண்டும். தற்போது மணி 12 என்பதால், இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். இது தமிழக அரசுப்பேருந்து. நிலைமை சற்று மோசமாகத்தான் இருந்தது. பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்ததால் , ஒவ்வொரு வளைவிலும் குலுங்கி இடப்புறம் வலப்புறமென்று சாய்ந்து, தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஆதலால் பேருந்தின் முன்புற இருக்கைக்குச் சென்றோம். ஆனால் பேருந்திலிருந்து ஒலித்த பாடல்கள், அதன் ஒலியளவு, ஜன்னல் கம்பிகள், கண்ணாடிகள் என அனைத்தின் அதிர்வுகள் சேர்ந்து எரிச்சலை ஏற்படுத்தியது.

குறைந்தபட்சம் மலைப் பிரதேசங்களில் செல்லும் பேருந்துகளுக்காவது தனிக் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நடப்பதைக் காண்கிறோம். நம்மிடம் மிகத் திறமையான ஓட்டுனர்கள் இருந்த போதிலும், விபத்து நடக்கிறது என்றால், அது பராமரிப்பற்ற தன்மையையே காட்டுகிறது. அவ்வாறு விபத்து ஏற்பட்டுவிட்டால், உயிரிழந்தவர்களுக்கு சில மணி நேரங்களில் உடனடியாக இழப்பீட்டுத் தொகை சில ஆயிரங்களாகவோ அல்லது சில லட்சங்களாகவோ அறிவிக்கப்படும்..! தவறை மறைப்பதற்கு இழப்பீடா? மாற்றம் தேவை...! இழப்பீடுகளுக்குப் பதில் சேவையில் முன்னேற்றமேற்பட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

moonar varaiaadu 2மறையூரை மதியம் ஒன்றரை மணியளவில் பேருந்து சென்றடைந்தது. மதிய உணவிற்காக இருபது நிமிடங்கள் நின்றதால் நாங்களும் இறங்கி, பேருந்து நிலையம் எதிப்புறமுள்ள ஒரு சிறிய உணவகத்தில், வீட்டில் சமைப்பதைப் போன்று சுவை இருக்குமென்று சக பயணியொருவர் கூறியதால், அங்கே சென்றோம். மூவகை குழம்பு, பொரியல், கேரளா பெரிய சாதம் மற்றும் நம்மூர் சாதமும் கிடைத்ததால் நன்றாய் சாப்பிட்டோம். உணவகம் மிகவும் சிறிதாய் இருந்தாலும் சேவை சிறப்பாய் இருந்தது. சாப்பாட்டின் விலை ரூபாய் 50 மட்டுமே..!

மீண்டும் பேருந்து கிளம்பி சரியாய் இரண்டு மணிக்கு எங்களை ஆலம்பட்டி வனச்சரக அலுவலகத்தின் முன் இறக்கி விட்டது. அங்கே சென்று முன்பதிவுகளை சரிபார்த்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். இணையத்தில் முன்பதிவின் போது பாதி தொகையான ரூபாய் 1500 செலுத்த வேண்டும். நேரில் வரும் போது மீதித் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், முன்பதிவு செய்யும் தகவல்கள் மூணாறில் உள்ள அலுவலகத்துக்கே செல்லும். ஆதலால் தூவானம் அருவியில் தண்ணீர் அதிகமாக வரும் போது ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமாய் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தங்கும் போது ஏதேனும் அசைவ உணவு வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல வேண்டும். ஆதலால் ஆலம்பட்டி அலுவலர்களைத் தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளையும், நமது வருகையையும் சொல்ல வேண்டும்.

தூவானம் செல்ல எங்களுக்கு முந்தைய நாள் முன்பதிவு செய்திருந்த நபர்கள் மாலை நான்கு மணிக்கு வர, அதற்கு மேல் அங்கு செல்வது பாதுகாப்பானது இல்லை என்று வேறொரு தங்கும் விடுதிக்கு மாற்றி அனுப்பினர். ஏனென்றால் மாலை 4 மணிக்கு நடந்து சென்றால் ஏறக்குறைய அருவியை அடைய 6 மணி ஆகிவிடும். நடைபயணம் ஆற்றையொட்டி இருப்பதால் யானை மற்றும் காட்டு மாடுகள் தண்ணீர் அருந்த வரும். ஆதலால் பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்கின்றனர்.

moonar 6இரவு உணவு மற்றும் காலை உணவு என்ன வேண்டும் எனக் கேட்டு அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வனத்துறையினர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். இடைப்பட்ட வேளையில் அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தச் சென்றோம். தேநீரா இல்லை நன்னாரி தேனீரா என்ற கேள்வி வர, புதிதாயிருந்த நன்னாரி தேநீரைத் தேர்தெடுத்தோம். சிறிது நேரத்தில் கரும்புச் சாறு நிறத்தில் சூடாய்க் கிடைத்தது. அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. நாம் வீட்டில் போடும் தேநீரில் நன்னாரி சர்பத் கலந்தது போன்ற உணர்வு..!

இங்குள்ள பழங்குடி மக்கள் சுற்றுலா நோக்கிற்காக பயிற்சி பெற்றுள்ளனர். முழுக்க முழுக்க அவர்களே இந்த ஆலம்பட்டி வனச்சரகத்தை வழிநடத்துகின்றனர். சுற்றுலாப் பயணிகளை காட்டிற்குள் அழைத்துச் செல்வது, தங்கும் விடுதியில் உணவு சமைப்பது, இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலை கூட்டி வருவது, காடுகளைப் பற்றி எடுத்துக் கூறுவது என பல்வேறு அம்சங்களில் பணிபுரிகின்றனர்.

இங்கிருந்து நடைபயணமாக மூன்று இடங்களுக்கும் தினந்தோறும் அழைத்துச் செல்கின்றனர். (தூவானம் அருவி, பழங்கால மண் ஓவியங்கள் உள்ள பகுதி மற்றும் வாயுமலை ). இது மொத்தம் 4-5 கிலோமீட்டர் நடைபயணமாக இருக்கும். காலை மணி 8 மணி முதல் 11 மணிக்குள் சென்றால், மாலை 3-4 மணியளவில் திரும்பி வந்து விடலாம்.

moonar 7இதுமட்டுமில்லாமல் மூன்று தங்கும் விடுதி சேவையும் உள்ளது. (தூவானம் அருவி, ஜெல்லிமலை மற்றும் அணில் வீடு). இதற்காக கட்டணம் ரூபாய் 3000. இதில் தூவானம் தங்கும் விடுதி சிறப்பானதாய் இருக்கும். ஏனென்றால் செல்லும் வழியானது அடர்ந்த காட்டுக்குள் ஏறக்குறைய ஒன்றரை மணி நேர நடைப்பயணமாகவும், தூவானம் அருவியின் மிக அருகேயும் அமைந்திருக்கின்றது.

தூவானம் அருவிக்குச் செல்லும் வழியானது உடுமலை-மூணார் சாலைக்கு இணையாக சில தூரம் சென்று, பிறகு இரு மலைகளுக்கு இடையே இறங்கி, அங்கே ஓடும் பம்பார் நதியின் வலப்புற கரையின் பக்கவாட்டில் செல்லுமாறு அமைந்துள்ளது. அருவிக்கு சிறிது தூரத்திற்கு முன்பு, ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

எங்களை வழிநடத்த வனத்துறையின் சார்பாக கண்ணன் வந்ததும், நடைப்பயணம் தொடர்ந்தது. சாலையின் இடதுபுறம் உள்ளே இறங்கியதும் சில நிமிடங்களில் அடர்ந்த பசுமைப் புல்வெளி, ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே சிறுசிறு மரங்கள், பறவைகளின் ஓசை, சலசலவென ஓடும் கிளையருவி என வனத்தின் மிரட்டல் அழகை உடனடியாக உணர முடிந்தது.

நேற்றைய பொழுதைக் காட்டிலும் இன்றய தினம் வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டதால் நடைபயணம் நன்றாக இருந்தது. ஆங்காங்கே மண்தட்டுகளில் கயிறு கட்டி மரங்களில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்று கேட்கும் போது, கோடை காலங்களில் மிகவும் வறட்சியாக இருக்கும், ஆதலால் பறவைகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வைப்போம் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல், காட்டுக்குள் சிறு சிறு குழிகள் வெட்டி, அதில் 1000 லிட்டர் தண்ணீர் ஊற்றி வைப்போம் என்றனர். இது காட்டு மாடுகளுக்காகவும், சில சமயம் நீர் கலங்களின்றி இருந்தால் யானைகளும் நீரருந்தும் என்றார்.

moonar 8அவ்வாறே சற்று தூரம் சென்றதும் சந்தன மரங்களையும், அதில் குறித்துள்ள வரிசை எண்களையும் சுட்டிக் காட்டினார். அது மரங்களின் எண்ணிக்கைக்காக போடப்பட்டிருந்தது.

தற்போது இரு மலைகளுக்கு இடையே இறங்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறோம். சற்று இறக்கமாக இருந்ததால் சிரமமின்றி நடக்க முடிந்தது. தோளில் துணிமணிகளை உள்ளடக்கிய ஒரு பையும், இடதுபுறத்தில் புகைப்படக்கருவி வைக்கும் பையும், கையில் புகைப்பட கருவி என மொத்த எடையும் எனக்கு மிகுந்த பளுவை ஏற்படுத்தின. அவ்வப்போது எடுக்கும் சில புகைப்படமும், வனத்தின் பசுமை கலந்த இசையும், சில்லென்ற சுவாசமும் என்னை உற்சாகப்படுத்தின...!

கிளையாறு ஒன்று பம்பார் ஆறுடன் சேருமிடத்தில் பாறைகளில் தண்ணீர் வற்றி மரக்கிளைகள் உதிர்ந்து காணப்பட்டது. திடீரென ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம் எங்களின் வருகையினால் சிறகடித்து வட்டமிட்டுப் பறந்தன. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் பறந்தது, கண்கவரும் விதமாக அமைந்தது.

"அடுத்த கூட்டம் எதாவது இருந்தால் அருகில் நெருங்காமல் கூறுங்கள்" எனக் கூறி சில தூரம் சென்றதும், எனக்கு வழி விட்டு, "அதோ பட்டாம்பூச்சிக் கூட்டம் பாருங்கள்", எனக் கூறினார் கண்ணன். நானும் ஒவ்வொரு அடிக்கு ஒரு படம் என அருகில் செல்லும் வரை நான்கைந்து படம் எடுத்தேன். அருகே சென்றதும் கூட்டமாய்ப் பறக்க ஆரம்பித்தது. அவ்வாறே சுவாரஸ்யமாக காட்டிற்குள் பயணம் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் புற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் செல்லும் போது வலதுபுறத்தில் மரத்தில் மேல் அமைந்த மரவீடு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.

moonar 9அதைப் பற்றி கண்ணன் கூறியதாவது "இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கும் விடுதி இருந்தது. அதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியபோது, அன்றிரவு யானை ஒன்று அம்மரத்தடியில் குட்டி போட்டு மூன்று நாட்களாக அங்கேயே தங்கியிருந்தது. ஆதலால் அவர்களுக்கு உணவு கூட கொடுக்க முடியாமல் போயிற்று. ஆதலால் அதிலிருந்து இங்கே யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. அதன் பிறகு தான் தூவானம் அருவியின் அருகே பாறையின் மேல் கற்களால் மதில் சுவர் அமைத்து வீடு கட்டினோம்" என்றார்.

மரக்கட்டைகள், தகரங்கள் என சிதிலமடைந்து காணப்பட்டது மரவீடு. இக்கதையனைத்தும் கேட்டுக்கொண்டே செல்லும் போது சற்று நேரத்தில் காட்டாறு ஒன்றைக் கடக்க நேரிட்டது. வெள்ளம் அதிகமாக வரும் நேரத்தில் எளிதில் கடக்க மரங்களால் ஆன சிறிய பாலத்தை அமைத்திருந்தனர். அதுவும் கனமழையின் காரணமாக சற்று சேதமாகியிருந்தது.

நான்கைந்து மரக்கட்டைகளை சமமாக வைத்து சிறிய பாலம் அமைந்திருந்தாலும், அனைத்தும் வலுவிழந்து காணப்பட்டது. இருப்பினும் அதில் ஓரளவிற்கு வலுவானதாக இருந்த கட்டையைக் காட்டி அதில் நடந்து வரும்படி கண்ணன் கூறினார்.

பின்னர் சிறிது தூரம் சென்று, பின்னே திரும்பி கீழே விழுந்த மரங்களை புகைப்படமெடுக்கும் வேளையில், திடீரென ஒரு ஆள் நடந்து வருவது "பக்"கென்றாகிவிட்டது. சுதாரித்துக் கொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க, அவரும் அருகில் வந்து கண்ணனிடம் பேசிக்கொண்டே முன்னே சென்றார்.

moonar 10பொதுவாக காட்டிற்குள் சென்று இரவு தங்கி வர, நம்மோடு இரண்டு வனக்காவலர்கள் வருவார்கள். சில உணவுப்பொருட்களை எடுத்து வர தாமதமானதால் மற்றொரு நபர் இப்போது வருகிறார். அவர் பெயர் விஜய் என்று கண்ணன் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரின் பொறுப்பில் தான் நாங்கள் நாளை மதியம் வரை இக்காட்டினுள் இருக்க வேண்டும்.

அவ்வாறே கடந்து செல்லும் போது பள்ளம் மேடுகள் என மலைத்திட்டுகளில் நடக்க நேரிட்டது. அப்போது பம்பாறு ஆற்றின் ஓசை எங்கள் காதுகளுக்கு மெதுவாக கேட்கத் தொடங்கியது. சிறிது தூரம் செல்ல செல்ல ஆற்றின் ஓசை அதிகரித்து, வனத்தின் ஓசை குறையத் தொடங்கியது.

சிறிய ஒற்றயடிப்பாதை, கீழே ஏறக்குறைய 50 அடி ஆழத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது அதன் அபாயம். சிறிது கால் இடறினாலும் கீழே விழவேண்டியதுதான்..!

ஆதலால் சிறிது தூரம் கவனமுடன் நடந்துகொண்டே, இன்னும் எவ்வளவு தூரம் என கண்ணனிடம் கேட்க, “சிறிது தூரம்தான்” என பதில் வந்தது. பதில் வந்த சில நிமிடங்களில் தூவானம் அருவி ஒரு 500 மீட்டர் தொலைவில் கண்ணுக்கெட்டியது. புதிதாய் தழைத்த இலைகளுக்கிடையே, கரும்பாறையில் பால் போன்ற வெண்ணிறத்தில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

இலக்கை அடைந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில், பயணக்களைப்பு மறந்து குதூகலமானது. இப்போது ஆற்றிற்கு இணையான எதிர்த் திசையில் நடந்து கொண்டிருக்கையில், ஏற்கனவே காலையில் நடைபயணம் சென்ற நபர்கள், அருவில் குளித்து விட்டு, மிகுந்த களைப்போடு இரண்டு வனக்காவலர்களோடு எதிரே வந்து கொண்டிருந்தனர். ஒரே நாளில் சென்று மீண்டும் திரும்பி வருவது சற்று கடினமே ..! முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் காட்டை ரசித்து நடப்பவர்கள் இங்கு எளிதில் சென்று திரும்பிவிடலாம். ஆனால் "திடீரென்ற ஆசையினால் நடக்க வருபவர்கள், சிறிது தூரத்திலே களைப்படைந்து விட்டு, அருவிக்குக் கூட செல்லாமல், பாதி வழியிலே திரும்க்ச் செல்வதும் உண்டு" என கண்ணன் கூறினார்.

பிறகு ஆற்றைக் கடக்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து அருவி ஏறக்குறைய 100 மீட்டர் தொலைவில் ஆர்ப்பரிக்கும் சப்தத்தில் கொட்டிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க காலணிகளைக் கழற்றி, புகைப்படக்கருவியை அதன் பையில் வைத்து தயாரானோம்.

(தொடரும்)

- ப.சிவலிங்கம்

Pin It